எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Thursday, November 18, 2004

வாடிக்கையாளர்களா தெய்வங்கள் ?

மதிய உணவிற்கான காசை சொலுத்துவதற்கு அலுவலக உணவு விடுதியின் வரிசையில் நிற்கும்போது இன்று நான் கண்டது. ஒரு பெண்மணி கையில் உள்ள தட்டில் சில இலை தழைகளுடன் காசு வாங்கி கல்லா நிரப்ப காத்திருக்கும் பெண்ணிடம் சென்று, "கொஞ்ச நேரத்திற்கு முன் நான் இங்கிருந்து சாலட் [இலை, தழை,பழம்,மூட்டை இன்ன பிற] வாங்கி சென்றேன். வெளியில் அடித்த நல்ல காற்றில் அவை யாவும் பறந்து போய் விட்டன. மறுபடியும் எனக்கு வேண்டிய இலை தழைகளை நான் எடுத்து கொள்ளலாமா? " வினவினாள். அதாவது, காசு கொடுக்காமல்.

அந்த "கல்லா" பெண், கண் மூடி நெற்றி தேய்த்து சில விநாடிகள் மட்டுமே யோசித்து,"எடுத்து கொள்ளுங்கள் அம்மையாரே. நல்ல மதிய உணவு உரித்தாகுக!" என்றாள்.வெளியே காற்று வீசி உணவு பறந்து போனதிற்கு எந்த விதத்திலும் பொறுப்பாகாத அந்த உணவு விடுதியின் ஊழியை, மீண்டும் உணவு வழங்க மறுத்தால் எங்கே அந்த வாடிக்கையாளியை இழந்து விடுவோமோ என சமயோசிதமாக யோசித்து செயல்பட்டாள். "சைபராபத்"தில் " காமத்" உணவு விடுதியில் தீய்ந்து போன தோசையை மாற்றி தரச் சொல்லி அரை மணி நேரம் சண்டை போட்டது அந்த சமயத்தில் நினைவுக்கு வந்து தொலைத்தது.


எனக்கென்னவோ உணவை தவறவிட்ட பெண் செய்தது சரியாகவே படவில்லை, "கேட்டு தான் பார்ப்போமே...சும்மா கிடைத்தால் சுகம் தான்" என்பது போல விடுதியின் வாடிக்கையாளச் சேவையை தனக்கு சாதகமாய் பயன் படுத்தி கொண்டது கேவலமாக இருந்தது.

"Starbucks" என்ற புகழ் பெற்ற காப்பி கடையில் ஒரு முறை "Mocha"வில் "Whipped-Cream" போடாமல் தரச்சொல்லி காத்திருந்தேன். தயாரானதும் நான் கேட்ட காப்பியின் பெயர் சொல்லி அழைத்தார்கள். சென்று எடுத்து குடித்த பின் தான் தெரிந்தது, அதில் "Cream" இருக்கும் விசயம். என் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தவர் நான் எடுப்பதையும் குடிப்பதையும் பார்த்து கொண்டிருந்தாரே தவிர ஒன்றும் சொல்லவில்லை. மறுபடியும் நான் கேட்ட காப்பியின் பெயர் சொல்லி அழைத்த பின் தான் நான் செய்த தவறு புரிந்தது.

என் பக்கத்தில் நின்றிருந்தவர் "Cream" முடன் கேட்டிருக்கிறார். அவருடைய காப்பியை அவசரப்பட்டு எடுத்து நான் குடித்தே விட்டேன். என்ன செய்வதென தெரியாமல் அசடு வழிய நான் அவரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டேன். நிலைமையை சட்டென புரிந்து கொண்ட காப்பி செய்து தரும் இளைஞன், எங்கள் இருவரிடமும் மன்னிப்பு கேட்டு, கணப்போழுதில் அவருக்கு "Cream"முடன் கூடிய இன்னொரு காப்பியை செய்து கொடுத்து விட்டான்.

வேண்டாம் வேண்டாம் என நான் சொல்லச் சொல்ல "Cream" போடாத அந்த காப்பியை என் கையில் திணித்து நான் எச்சில் படுத்திய காப்பியின் கோப்பையை " இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக இருக்கட்டும் " என வாழ்த்திக் கொண்டே எடுத்து சென்று விட்டான்.என்னதான் என்னையும் அவரையும் மன நிறைவு கொள்ள அந்த இளைஞன் அப்படி செய்தாலும் காப்பி குடிக்கையில் என் தவறு மனதில் கசந்து கொண்டேயிருந்தது.

சேவையை தவறாக உபயோகித்து கொள்ளும் வாடிக்கையாளர்களா தெய்வங்கள் ?


Friday, November 12, 2004

ஆறு வயது சிறுவனுக்கு 50,000 Volts மின்சாரம்

கை கால் வைச்சிகிட்டு சும்மா இருடா இல்லைனா பூச்சாண்டிக்கிட்டே புடிச்சு கொடுத்துடுவேன்னு பயமுறுத்துகிற வயசுதான் அந்த பையனுக்கு.

உடைந்த கண்ணாடி துண்டை வைத்து அவன் பிஞ்சு கை காலையும் கண்ணையும் அறுத்துக் கொண்டு அந்த பள்ளியின் முதல்வரையும் காவலரையும் பயமுறுத்தும் அளவுக்கு என்ன பிரச்சனை இந்த இளய வயதில் அவனுக்கு?

கொடூர குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் 50,000 Volts மின்சாரம் சொலுத்தப்பட்டு பிடிக்கப்படும் அளவுக்கு மூர்க்கமாக இருந்தது சிறுவனா? அல்லது காவலரா?

அந்த மென்மையான உடல் எப்படித்தான் அவ்வளவு சக்தியான மின்சாரத்தை தாங்கியதோ?

உள்ளம் இருகி விட்டால் உடலுக்கு வலிக்காதோ?

Sunday, November 07, 2004

நீலச்சாயம் வெளுத்து போச்சு...ரா.சு வேஷம் கலைந்து போச்சு

என் உயிர் நண்பர்களாக சுப்பிரமணியன், லட்சுமி நாரயணன் என இருவர் நான் பள்ளியில் படிக்கும் காலம் தொட்டு இன்று வரை உள்ளனர். சுப்பு இயந்திர பொறியியல் படித்து இன்று மும்பைக்கும் தென் ஆப்பிரிக்காவிற்குமிடையிலான நீரின் நீள அகலத்தை கப்பலில் அளந்து கொண்டிருக்கிறான். லட்சுமி பெங்(ண்)களூரில் சிங்கையில் தலைமையிடம் கொண்டு இயங்கும் ஒரு கணிணி நிறுவனத்தில் குப்பை கொட்டுகிறான்.
என் வாழ்வில் வெற்றியின் உயரங்களை எட்டி பிடிக்க இவர்கள் செய்த உதவிகள் உயிர் உள்ள மட்டும் மறக்க இயலாதது.

எட்டாம் வகுப்பிலேயே வகுப்பு நண்பர்களுடன் சேர்ந்து "கலைச்சுடர்" எனும் கையெழுத்து பத்திரிக்கை தொடங்கி மனதிற்கு பிடித்ததெல்லாம் எழுதி (சிறுகதை,பயணத்தொடர்,வாசகர் கேள்வி-பதில்,பிரபலங்களின் பேட்டி)மூன்று இதழ்கள் வெளியிட்டோம். பொருளாதார நெருக்கடியால் தொடர இயலாமல் போனது.

பதினொன்றாவது படிக்கையில் தமிழ் இரண்டாம் தாளுக்காய் விடாமல் எழுதிப் பார்த்த கவிதை தேவதை என்னை விடாமல் பிடித்துக் கொண்டாள். சுந்தர தெலுங்கில் மாட்லாடும் சைபரபாத்தில் வேலைக்குச் சேர்ந்து இணையத்தில் உலவத்தொடங்கியவுடன் தினம் ஒரு கவிதை குழுவில் "ராஜேஷ் வேணு" என்ற என் நிஜப்பெயரில் எழுதிய சில கவிதைகள் என்.சொக்கனால் பிரசுரமாயின. திண்ணையிலும் ஒரு கவிதை பிரசுரமாயிருக்கிறது.

கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் - நவீன எழுத்தாளர்கள் என்னவோ சொல்வார்களே.....ம்.....ஆங்.... "மோனத்தவத்தில்" இருந்துவிட்டு நண்பர் லாவண்யா(அ)என்.சொக்கன்(அ)சொ.மணியன் எழுதிய ஒரு சிறுகதையின் தாக்கத்தால் மீண்டும் எழுத வேண்டுமென வந்தேன். தினசரி வாழ்க்கையை ஓட்ட வேண்டிய அத்தியாவசிய நிர்ப்பந்தத்தால் எழுத்தை நிறுத்தி ஓடும் உலகத்தின் பின்னால் அவசரமாக ஓடி கொண்டிருக்கிற ஒரு எழுத்தாளனை பற்றிய கதையது [ பெயர் மறந்து விட்டது].

தமிழ் வலைப்பதிவுலகத்தில் எனக்கென ஒரு பதிவை தொடங்கி எழுத்துப் பயிற்சி மேற்கொள்ள தீர்மானித்தேன்.வெகு நாட்களாய் புனைப்பெயர் ஒன்றை தேடி மனம் அலைந்து என் வாழ்வின் முக்கிய கட்டங்களில் எல்லாம் தோள் கொடுத்து உதவிய உயிர் நண்பர்கள் பெயர்களை கொண்டு என் பெயரின் முதலெழுத்தையும் சேர்த்து "ரா.சுப்புலட்சுமி" என வைத்து கொண்டேன். என் பெயரின் சுருக்கமே இந்த புனைப்பெயரின் [ வலைப்பதிவுலகில் இதற்கு "முகமூடி" என்று பெயர்] சுருக்கமாக அமைந்தது வசதியாக இருந்தது. "மழைச்சாரலும்" பிறந்தது.


இந்த பெயர் வைத்து கொண்ட முகூர்த்தமோ என்னமோ தெரியவில்லை, நான் எழுதத் தொடங்கிய பதிவுகள் யாவும் பெண்கள் சம்பந்தப்பட்டதாகவே இருந்தது [ தம் அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்ட கல்லூரி தோழிகளுக்கு நன்றி!]. பதிவுகளுக்கிடையில் உள்ள நிகழ்ச்சி விவரணைகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருந்ததாக K.V.R குறிப்பிட்டு எழுதினார்.என் பதிவுகளில் வந்த வாழ்வின் நிகழ்வுகள் யாவும் என்னுடைய மற்றும் என் நண்ப/ நண்பிகளின் அனுபவங்களிலிருந்து எடுத்து எழுதினது என்று தனிப்பட்ட மடலில் அவருக்கு குறிப்பிட்டிருந்தேன்.

என் பதிவுகளில் எந்த "பாலின்" குணமும் வராமல் பொதுவான மொழியில் எழுத மிகவும் முயற்சித்தேன். குசும்பன் என்னை மகளிர் குசும்பில் சேர்த்ததும் "தோழி" என்று வந்த பின்னூட்ட மொழிகளும் என்னையறியாமல் நானே ஒரு "பிம்பத்தில்" சிக்கிக் கொண்ட உணர்வை தந்தது. ஆதலால், எழுத்து நடையை கொஞ்சம் கொஞ்சமாக வித்தியாசப்படுத்த முயன்றேன். [ "அரிப்பு" பிரயோகத்தால் குசும்பனிடம் மாட்டிக்கொண்டு "டின்" கட்டி கொண்டது தனி கதை].திருமணத்திற்கான அறிவிப்பை வெளியிடும் போது கூட "மனைவி" மாட்சி பற்றிதான் எழுதினேன்.ஆனாலும் அந்த பிம்பத்தின் சாயல் விலகவில்லை.

இது நாள் வரை வராத - நாயகன் கமலிடம் பேரன் கேட்பது போல - " நீங்கள் ஆணா ? பெண்ணா ? " போன்ற கேள்வி கணைகள் வலைப்பூவில் மழை பெய்ய தொடங்கியதும் வந்தன. கமல் தெரியவில்லை என நழுவியது போல் போக மனமில்லை. திரு.மூக்கர், திரு.அனானிமஸ் மற்றும் பல நண்பர்களின் மனத்தில் ஐயத்தை விதைத்து அவர்களின் பொன்னான நேரத்தை சில மணித்துளிகளாவது வீணாக்கியிருந்தால் மன்னியுங்கள்! [மூர்த்தியின் ஆதரவு குரலுக்கு சிறப்பு நன்றி! ].

இதுவரை மாதத்திற்கு ஒரு பதிவு என எழுதிக் கொண்டிருந்த நான், இந்த ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட இருபதிற்கும் மேல் பதிவு செய்தேன். எண்ணிக்கையில் என்றைக்குமே எனக்கு திருப்தியிருந்தில்லை, குறைவாக எழுதினாலும் மனதிற்கு நிறைவாக எழுத வேண்டும். ஒரு சில பதிவுகளில் எனக்கு அந்த நிறைவு கிடைத்திருந்தது. என் பதிவின் மேல் வெளிச்சம் பாய்ச்சி நட்சத்திரமாய் ஜொலிக்க விட்ட காசி மற்றும் மதி அவர்களுக்கு சிறப்பு நன்றி!

இந்த வாரம் முழுவதும் வலைப்பூவில் பெய்து வந்த மழைச்சாரல்
இங்கு நிற்கிறது. பின்னூட்டம் வழியே கருத்துக்கள் வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

LIGHTS OFF ! PACK UP !

வலைமேகங்களிடம் வேண்டுவன

  • வலைப்பதிவுகளின் அடுத்த சாத்தியகூறுகள் என சிலவற்றை நண்பர்கள் வலைமேடையில் பகிர்ந்துள்ளார்கள். வலை மேடையில் நிறைய விவாதங்கள் எழுதப்பட வேண்டும்[ கடந்த ஒரு மாதத்தில் ஒன்றுதான் பதிக்கப்பட்டிருக்கிறது]. அறிவுபூர்வமான விவாதங்கள் நிச்சயம் ஆக்க பூர்வமான பாதையில் வலைப்பதிவுகளை கொண்டுச் செல்லும்.

  • குரல் பதிவுகளும் நிறைய வெளியிடப்பட வேண்டும்."அகரதூரிகை" அருணும் , கிருபாசங்கரும் சிலவற்றை பதிந்திருந்தனர். முக்கியமாக வலையுலக கவிஞர்களும் கதைஞர்களும் தம் படைப்புகளை குரல் மூலம் பதிவது நன்றாய் இருக்கும்.

  • தமிழக(இந்திய) அரசியலும் அமெரிக்க அரசியலும் பற்றிய பதிவுகள் தான் அதிகம் எழுதப்படுகின்றன. உலக அரசியலை பற்றியும் நிறைய பதிவுகள் கருத்துச் சொறிவுடன் எழுதப் படவேண்டும் [ வளைகுடா நாடுகளின் உள் நாட்டு கலவரங்கள் - போர் பற்றி எழுதலாம். எ.கா: இஸ்ரேல்- பாலாஸ்தீன பிரச்சினை. பத்ரியும் ரவி ஸ்ரிநிவாஸும் இவற்றை அவ்வப்போது தொட்டுச் சென்றுள்ளார்கள்].

  • அண்மையில் தமிழ் பாம்பு எழுதிய சிறுகதை நல்ல வாசிப்பு அனுபவத்தை தந்தது. இது போல நிறைய பரிசோதனை முயற்சிகளுடன் கதைகள் வலைப்பதிவுலகில் நிறைய எழுதப்பட வேண்டும்.

Saturday, November 06, 2004

கிரேசி கோஸ்டுடன் ஒரு மாலைப்பொழுது

சியாட்டலில் நிறைய தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் என்பது எனக்கு நேற்றுதான் தெரிந்தது. இங்குள்ள தமிழ்ச்சங்கம் வருகிற தீபாவளித் திருநாளை முன்னிட்டு சிறுவர்/சிறுமிகளுக்கான கலை நிகழ்ச்சிகளுடன் கிரேசி கிரியேஷன்ஸின் "கிரேசி கோஸ்ட்" நாடகத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இணையம் மூலம் நுழைவுச்சீட்டுகளை முன்கூட்டியே வாங்கியிருந்தாலும் கடைசி நேரத்தில் எங்களுடன் வர இணைந்த ஒரு நண்பருக்கு சீட்டு கிடைக்கவில்லை. நாங்கள் செல்வதற்குள் அத்தனையும் விற்று தீர்ந்தாகி விட்டது. இங்கே "கிரேசி" குழுவினருக்கு அவ்வளவு மவுசு போலிருந்தது.

நேற்று காலையிலிருந்தே நல்ல குளிரும் மெல்லிய பனிமூட்டமாயிருந்தது. எங்களுடன் வந்த நண்பரை காரில் தனியாக விட்டு போக மனமில்லாமல் [ வேண்டாம்..வேண்டாம்..என்றவரை நாந்தான் "வாங்கோ" என்று வற்புறுத்தி அழைத்துச் சென்றேன், அந்த குற்ற உணர்வும் தாக்க ] நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தவர்களுடன் "நின்றாவது" பார்க்க ஏற்பாடு செய்து தர முடியுமா எனத் தொல்லை பண்ணிக் கொண்டிருந்தோம்.

குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் முடிந்து இரவு உணவிற்கான இடைவேளை விட்ட பிறகும், உணவருந்தச் செல்லாமல் நண்பருக்காக சீட்டு பிடிக்கும் படலத்திற்காகவே காத்திருந்தோம். உணவு இடைவேளை முடிந்து நாடகம் தொடங்கவிருக்கும் சமயம் பார்த்து, " மேடையின் அருகே உட்கார்ந்து பார்க்க முடியுமானால், ஏற்பாடு செய்கிறோம்" என்றார்கள்.

நாங்கள் ஒருவாறு சம்மதித்து காத்திருக்கும் வேளையில் "குட்டியிட்ட பூனை" போல நிகழ்ச்சி அமைப்பாளர்களையே சுற்றி வந்த எங்களை கண்ட ஒரு குடும்பஸ்தர், எங்களை உற்றுப் பார்த்து விட்டு உள்ளே சென்றார். வெளியே வருகையில் அவர் கையில் ஒரு சீட்டு. "என் மகனுக்காக வாங்கினது. உட்கார்ந்து நாடகம் பார்க்குமளவு பொறுமையெல்லாம் இல்லாமல் உள்ளே விளையாடி கொண்டிருக்கிறான். உங்களுக்கு ஒரு சீட்டு தான் வேண்டுமானால் இதை எடுத்து கொள்ளுங்கள்" என்றார்.

கால்கடுக்க நின்று கொண்டிருந்த அந்த இடத்தில் திடீரென்று பூமாரி பொழிந்தது போலிருந்தது எங்களுக்கு. எத்தனை வற்புறுத்தியும் சீட்டுக்கான கட்டணத்தை வாங்க மறுத்துவிட்டார் அந்த புண்ணியவான். இவரை போல நல்லார் நிறைய பேர் உள்ளதால்தான் சியாட்டலில் விடாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது.


ஒரு வழியாக நாடகம் தொடங்கும் நேரத்திற்கு கொஞ்சம் முன்பாக போய் அமர்ந்தோம்.கிரேசியின் எத்தனையோ நாடகங்களை தொ(ல்)லைக்காட்சியில் பார்த்திருந்தாலும் [ நகைச்சுவை நாடகங்களேயே] நேரில் பார்ப்பது இதுதான் முதல் முறை. கிரேசி மோகன் இயல்பாகவே அறிமுக உரையை தொடங்கினார், ஆனால் நிறைய இடங்களில் கூட்டத்தினரின் கைத்தட்டலுக்காகவும் கட்டயாமாக சிரிக்க வைக்கவும் கொஞ்சம் மிகையாகவே பேசினார்.

இதுவரை மூன்று முறை அமெரிக்கா வந்திருந்தாலும் சியாட்டலுக்கு வருவது இதுவே முதல் முறை என்றார். வேறு எங்கும் இவ்வளவு அதிகம் பார்வையாளர்களை பார்த்ததில்லை என்றவுடன், ஒருவர் எழுந்து "சிக்காகோவில் உங்கள் நிகழ்ச்சிக்கு முன்பு ஒரு முறை வந்திருந்தேன். அங்கு இதை விட பெரிய கூட்டமிருந்தது" என்றார். ஆனால் கைத்தட்டல்களின் இறைச்சலில் மோகனைச் சென்றடையவில்லை. அரசியல்வியாதிகள் போல், "மற்ற இடங்களில் நான் கண்டது Quantity கூட்டம். இங்கு நான் காண்பது Quality கூட்டம்" என்றார்.மக்கள் புல்லரித்துப்போய் விசிலுடன் கைகள் கொட்டினர்.

அமெரிக்க அனுபவங்களை நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டார். "இந்த ஊரில் Greyhound பஸ் இருக்கே, அதுல எப்படிதான் மக்கள் போறாங்களோ...முயல் ஆமை கதையில் இந்த பஸ்ஸை விட்டா ஆமை கண்டிப்பா ஜெயிச்சுடும். நாங்க நடந்து போனாலே போய் சேர்ந்துடுவோம் போல இருந்துச்சு. பைக்காரங்களெல்லாம் எங்க பஸ்ஸ ஒவர் டேக் பண்ணிக்கிட்டு போனாங்க. "

"அப்புறம் Southwestன்னு ஒரு airways. அது நம்ம ஊர் டவுன் பஸ் மாதிரியிருந்துச்சு. பொதுவா பிளைட்டுல ஏறின உடனே சொல்ற Safety instructions கூட சொல்ல மாட்டேங்கிறாங்க டவுசர் போட்ட மாமிங்க. மகனே விபத்து வந்துச்சுன்னா உன் சமத்துன்னு சும்மா இருக்காங்க. அண்டு* [ அப்புறம் என்பதின் ஆங்கில அர்த்தமாக இதைதான் மோகன் சரளமாக உரைத்தார் - அதுவும் " நண்டு " என ஒலிக்கும் தொனியில் ] சாப்பாடுனு ஒண்ணுமே தரலே. நான் எப்பவுமே Pretzelsன்னு தர்றதை ரெண்டு வாங்கி வச்சுப்பேன். ஒண்ணு சாப்பிட. ஒண்ணு பல் குத்த."

"அண்டு* நாங்க இந்த இருபத்தஞ்சு நாளுல அமெரிக்கா சுத்தின அளவுக்கு கெர்ரி புஷ்கூட சுத்தியிருக்க மாட்டாங்க. ஒரு இடத்துல கெர்ரிய பார்த்தோம். என்னை பார்த்து அவர், என்னப்பா..எனக்கு பதிலா நீ நிக்கிறியானு கேட்டார். நான் ஐய்யய்யோ நமக்கு நாடகம் வேலைன்னு நிறைய இருக்கு சார். எல்லாம் நம்ம புஷ் பாத்துப்பார், வர்ட்டா நைனான்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டேன்."

"அண்டு* நாங்க ஒவ்வொரு ஊருக்கு போனாலும் கடிகாரத்தை ஒரு மணி நேரம் கூட்டி வைங்க சார். இல்லே ரெண்டு மணி நேரம் குறைச்சு வைங்க சார்.. இல்லே இல்லே Day light savings முடிஞ்சு போச்சு இப்ப இன்னும் ஒரு மணி நேரம் குறைச்சு வைங்கன்னு சொல்லி சொல்லி நாங்க எந்த டைம்ல இருக்கோம்னு தெரியாமா Jet lag கூட time lagம் சேர்ந்து ஒரு வழியா ஆயிட்டோம் ஆனாலும் இந்த சோர்வு துக்கமில்லாதது எல்லாம் உங்களை மாதிரி நல்ல ஆடியன்ஸை பார்த்ததும் பஞ்சா பறந்து போய் நல்ல உற்சாகமாயிடுது."

" கிரேசி கிரியேஷன்ஸ் தொடங்கி இது இருபத்தஞ்சாவது வருசம். இந்த நாடகத்தை வெள்ளி விழா ஸ்பஷலாக 150 முறை மேடையேற்றி விட்டோம். சென்னை, சிங்கப்பூர், மலேசியா, துபாய்ன்னு பல இடங்களில் நல்ல வரவேற்பு இருந்துச்சு. உங்களுக்கும் நல்லா பிடிக்கும்னு நம்பறேன்.உங்க ஆர்வத்துக்கும் ஆதரவுக்கும் அனேக கோடி நமஸ்காரங்கள். ரொம்ப நேரம் பேசிட்டேன்..இப்ப நாடகத்தே பார்க்கலாம்" என்று முடித்தார்.

மாதுவின் வீட்டில் மைதிலியின் அப்பாவும் தாத்தாவும் பேயாக அலைகிறார்கள். அவர்களின் தொல்லை தாங்க மாட்டாமல் மாது பேய் ஓட்டும் மாத்ருபூதத்தை(மோகன்) வரச் சொல்லுகிறார். பேய்களும் வீட்டை விட்டு ஒடி விடுகின்றன. மாதுவின் நண்பன் சீனு பத்து வருடமாக ஜானகியை காதலிக்கிறான், ஆறு மாதமாக திருமணம் செய்யும் நி.வே.ஆ[ அதாங்க... நிறைவேறாத ஆசை]யுடன் இருக்கிறான். திருமணத்திற்கு ஜானகியின் அப்பா சம்மதிக்காததால் மாது திருட்டுத்தனமாக கோயிலில் மணம் முடித்து வைக்க உதவுவதாக கூறுகிறான்.

திருமணத்திற்கு குறித்த நேரத்தில் சீனு வராததால் நின்று போகிறது. ஆனால் திருமணத்திற்காக மாதுவின் ஆலோசனைப்படி "சடை" என்கிற "டை" அடிக்க சென்ற சீனு இறந்து விடுகிறான். மாத்ருபூதம் தரும் "பூத" கண்ணாடியின் மூலம் பார்ப்பதால் சீனு மாதுவின் கண்ணுக்கு மட்டுமே தெரிகிறான். தன்னுடைய நி.வே.ஆவை நிறைவேற்றினால்தான் ஆன்மா சாந்தி அடையும் என மாதுவிடம் சீனு கூறுகிறான். ஆபிஸ் மேனேஜர், ஜானகி, மைதிலி, அப்பா, மாத்ருபூதம் இவர்களின் உதவியுடன் மாது சீனுவின் நி.வே.ஆவை எப்படி நிறைவேற்றினான் என்பதே மீ.க [ ..அதாம்பா..மீதி கதை].

மூளையை கழற்றி வைத்து விட்டு இரண்டு மணி நேரம் சிரித்து இன்புற நினைத்தால், நிச்சயம் இது நல்ல நாடகம். கிரேசியின் "டைமிங் சென்சு"டன் கூடிய நிறைய நகைச்சுவை துணுக்குகள் நாடகம் முழுவதும் விரவி கிடக்கின்றன. அவர் படங்களின் காட்சிகளைப் போலவே நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் எதற்கு நாம் அப்படி விழுந்து விழுந்து சிரித்தோம் என நினைத்து பார்த்தால் ஒன்று கூட நினைவில் வர மாட்டேன் என்கிறது. இதுதான் அவர் எழுத்தின் பலம் மற்றும் பலவீனம் என நான் நினைக்கிறேன்.

கொஞ்சம் கஷ்டப்பட்டு யேசித்துப் பார்த்ததில் கீழ் கண்ட நகைச்சுவைத் துணுக்குகள் நினைவுக்கு வந்தன:-

மாது: என்னடி மைதிலி, உங்க தாத்தாவை விட உங்க அப்பா பெரியவர்னு சொல்றார். என்னடி குழப்பம் இது ?

மைதிலி: எங்க தாத்தா 50 வயசில் இறந்தார். அப்பா 70 வயசில இறந்தாரு. அப்போ அப்பா தாத்தாவை விட 20 வயசு கூட வாழ்ந்து செத்தார்ல..அதான்.

மாது: ஓ....இது அப்ப "செத்த" கணக்கா ...

********************************
மேனேஜர்: மாது.. எனக்கு ஆவி பறக்க காப்பி வேணும்.

மாது: கவலையே படாதீங்க சார். எங்க வீட்டுல ஆறின காப்பில கூட சூடு பறக்க "ஆவி" வரும்

********************************
மாத்ருபூதம்: பேய்க்கும் பிசாசுக்கும் வித்தியாசமிருக்கு மாது. பிசாசு வந்து Housewife மாதிரி ஒரு இடத்தில அடங்கி ஒடுங்கியிருக்கும். உங்க பொண்டாட்டி போல. பேய் வந்து ஒரு இடத்தில இருக்காது, உங்கள போல ஆபிஸ் போயிட்டு வர இருக்கும் . புலிய மரத்துல தூக்கம் போடும். நீங்க ஆபிஸ்ல "பேய்"த்தூக்கம் போடற போல.

********************************
மாத்ருபூதம்: இங்க பாத்திங்களா..இது பேருதான் "பேய்GoneSpray" கண்ணாடியை போட்டுகிட்டு பேய் மேல இதை அடிச்சு "போடா செல்லம்"னும் சொன்ன பேய் பறந்து போயிடும்.

********************************
சீனு: டே மாது... நான் ஜானகிய பத்து வருசமா லவ் பண்றேன்டா...

மாதுவும் ஜானகியும் ஒரே நேரத்தில்: அப்படியா...??

மாது: டே...என்னடா....ஜானகியும் ஆச்சரியத்தோட அப்படியானு கேட்கறா ? என்னம்மா ஜானகி இவன் உன்னை பத்து வருஷமா லவ் பண்ணலியா ?

ஜானகி: இல்ல மாது... நாங்க ஆறு மாசமாதான் லவ் பண்றோம்..

மாது:...டே...சீனு...என்ன இழவுடா இது...

சீனு: இல்லடா...மாது... நான் பத்து வருசமாத்தான் லவ் பண்றேன். ஆனா சினிமால வர்றமாதிரி..ஜானகிக்கு தெரியாமா..மறைஞ்சு...மறைஞ்சு அவ பின்னாடியே சுத்தி சுத்தி வந்து லவ் பண்ணேன். ஆறு மாசம் முன்னாடிதான்...தைரியம் வந்து அவகிட்ட சொன்னேன். அதான் அவ ஆறு மாசத்த கணக்கா சொல்றா"
********************************

மாது காப்பியை "அப்படியே" உறிஞ்சுவதும், சீனுவின் "பாம்...பாம்" தோள் குலுக்கும் மேனரிசமும், சீனுவின் ஆவி மேனேஜரின் உடம்பில் போனதும் மேனேஜர் போடும் ஆட்டமும், சீனுவின் "சீனா தானா" வீணை ஆட்டமும், மாத்ருபூதம் மற்றும் மேனேஜரின் "ஆவி...ஆவி...ஆவி..." ஆட்டமும், சீனுவாக மேனேஜர் சொந்த அப்பாவிடமே "டே மவனே " என்று வேட்டி உயர்த்தி கொண்டு ஒவ்வொரு முறையும் சண்டைக்கு போவதும், கணிணி புரோகிதரின் "ஆன்லைன்" திருமண சடங்கும், சீனுவாக மேனேஜர் "பெண் பார்க்கும்" படலமும் வயிற்றை பதம் பார்க்கும் நகைச்சுவை காட்சிகள்.
அதிலும் சீனுவாக நடித்தவர் கலக்கி விட்டார்.

கடந்த செப்டம்பரில் என் துணையின் விசா நேர்முகத் தேர்வுக்கு சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் வெளியே காத்திருக்கையில் விசா வாங்க வந்திருந்த "சீனு"விடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதே இந்த நாடகத்தைப் பற்றி குறிப்பிட்டார்.சியாட்டல் வருவது பற்றி தன்னால் உறுதியாக கூற முடியாது என்றார். 9/11, விசா கெடுபிடிகள், Outsourcing என எல்லாவற்றைப் பற்றியும் கொஞ்சம் சீரியஸாகவே விவாதித்தார். நேற்று மேடையில் அவர் போட்ட ஆட்டத்திற்கும் நடிப்பிற்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லாமலிருந்தது அன்றைய பேச்சு. இயல்பாகவே மரியாதையுடன் பழகினார். மற்ற கலைஞர்களுடன் அன்று உரையாட முடியவில்லை. ஆனால், மரியாதை நிமித்தம் சில "Hello" க்களை பரிமாறிக் கொண்டோம்.

நாடகத்தின் முடிவில் கலைஞர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தினார் மோகன் [ நிறைய பேர் VRS வாங்கி முழு நேரத் தொழிலாகவே இதைச் செய்வதாக கூறினார்]. "ஆண்டவன் தயவிருந்தால் அடுத்த ஆண்டும் சந்திக்கலாம்" என்று விடை கூறினார்.நாடகத்தின் இயக்குனர் காந்தன் திரைப்பட இயக்குனர் மொளலியின் தம்பி என்பது எனக்கு புது தகவலாக இருந்தது. கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

மொளலியின் "Flight 172" நாடகத்தின் குறுந்தகடு விற்கப்பட்டது.அதில் கிடைக்கும் தொகை முழுவதும் அடையார் புற்றுநோய் மருத்துவமனை குழுவினரின் ஆராய்ச்சிக்கு செல்லும் என்று அறிவிக்கப்பட்டதால் "சுடச்சுட" விற்பனையானது.

எல்லாம் முடிந்து வெளியே வருகையில் இரவு மணி 11. விடியற்காலை நான்கு மணிக்கு Houston செல்வதற்கு விமானம் பிடிக்கச் செல்லும் துரித கதியில் இருந்த பனியில் நடுங்கிக்கொண்டே களைப்புற்ற கலைஞர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சொல்லி விடைப் பெற்று வருகிற வழியில் Denny's ல் இத்தாலிய கோழியின் சாண்ட்விச்சை French Vennila காப்பியுடன் வயிற்றை நிரப்பி நள்ளிரவில் ஒரு Ghost போல வீடு வந்து சேர்ந்தோம்.Friday, November 05, 2004

அஜீத்தின் "அட்டகாசம்"

இன்று "தலை"க்கு மேல் இருக்கும் வேலைக்கிடையில் நம்ம "தல"யின் தீபாவளிக்கு திரைக்கு வரும் "அட்டகாசம்" படப்பாடல்கள் கேட்டேன். சுத்தம்.. ஒன்று கூட தேரவில்லை. பரத்வாஜ் அருமையாக சொதப்பியிருக்கிறார். எழுத வந்தது இசையைப் பற்றியல்ல. பாடல்களைப் பற்றி.

கருத்தாழமிக்க பாடல்கள்.படத்தின் கதைக்கு எவ்வளவு தூரம் பொருத்தமாக எழுதப்பட்டது எனத் தெரியவில்லை. ஆனால், "தல"யை குஷி(ழி)ப்படுத்த எழுதப்பட்டதாகவே தெரிகிறது.

"தல போல வருமா" என்னும் பாடலில், " தலையுள்ள பயல்கள் எல்லாம் தலயல்ல" என்னும் அரிய தத்துவம் வருகிறது. அதைக் கேட்டு மெய் சிலிர்த்து விட்டது ஐயா!.

"உனக்கென்ன..உனக்கென்ன " என வரும் பாடல் "தல"யின் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு தீபாவளி சரவெடி. சந்தேகமிருந்தால் நீங்களே படித்து பாருங்கள். தமிழ் திரைப்பட சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய "முத்துக்கள்" அவை:-

"இமய மலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன?
ஏழு கடலும் என் பெயர் சொன்னால் உனக்கென்ன?
எரிந்து போன சாம்பலிலிருந்து
எழுந்து பறக்கும் பீனிக்ஸ் போல
மீண்டும் மீண்டும் பறப்பேன் உனக்கென்ன?
நான் வாழ்ந்தால் உனக்கென்ன?

உனக்கென்ன உனக்கென்ன உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன தம்பி உனக்கென்ன?

ஏற்றி விடவோ தந்தையுமில்லை
ஏந்திக் கொள்ள தாய் மடியில்லை
என்னை நானே சிகரத்தில் வைத்தேன் அதனால் உனக்கென்ன ?


வெற்றி என்பது பட்டாம் பூச்சி
மாற்றி மாற்றி மலர்களில் அமரும்
உனக்கு மட்டும் நிரந்தரம் என நினைத்தால் சரியல்ல


எனக்கொரு நண்பன் என்று அமைவதற்கு
தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை.
எனக்கொரு எதிரியாய் இருப்பதற்கு

உனக்கொரு உனக்கொரு தகுதியில்லை.

நீயென்ன உருகும் பனிமலை
நாந்தானே எரிமலை எரிமலை.."

இது எந்த "திருமலை"யையும் நோக்கி சாவல் விட்டு பாடப்பட்டதல்ல என உறுதியாக நம்புவோம். ஆனால் இதைக்கேட்டு யாரும் "திருப்பாச்சி" அருவாளுடன் "அட்டகாசம் " செய்யாமலிருந்தால் போதும்.

என் "தல" [ அதாம்பா...மேனேஜர்..] வந்து முறைத்து விட்டு போகிறார்....யாரு "தல"ய யாரு சீவின "எனக்கென்ன ..எனக்கென்ன...", "வேல"ய பாத்துட்டு வெள்ளிக்கிழமையும் அதுவுமா சீக்கிரம் வீடு போய் சேருவோம்.

"தல"யின் அடிப்பொடிகள் யாரும் "ஆட்டோ" அனுப்பாமலிருந்தால் சரி...;-)

Thursday, November 04, 2004

கானல் நீராய் ஒரு காதல்

ஒவிய கல்லூரி மாணவி ஒருத்திக்கு பக்கத்து வீட்டு மருத்துவன்[1] மேல் காதல். காதலனுக்கு ரோஜா அனுப்புகிறாள், பிறந்த நாளுக்கு அவனையே ஒவியமாக வரைந்து பரிசாக அனுப்புகிறாள். ஏற்கனவே கல்யாணமாகி கர்ப்பமாய் இருக்கும் மனைவியை விட்டு விவாகரத்து வாங்கி அவளுடன் வாழ வருவான் என தன் தோழியிடத்தும் பின்னால் காதலுடன் சுற்றிக்கொண்டிருக்கும் மற்றொரு மருத்துவனிடத்தும்[2] அறுதியிட்டு கூறுகிறாள்.

ஆனால் வேறு நகரத்திற்கு ஓடிப் போக பயணத்திற்கு எல்லா ஏற்பாடுகள் செய்து இவள் காத்திருக்கும் வேளையில் அவன் வந்து சேரவில்லை.வீட்டில் சோகத்துடன் முடங்கி கிடக்கிறாள். வளர்த்து வரும் செடிகள் எல்லாம் காய்ந்து உதிர்ந்து விடுகின்றன. அவனிடமிருந்து மட்டும் எந்த தகவலுமில்லை.

தோழியின் பைக் ஓட்டி வருகையில் விபத்து நேருகிறது, அவள் பின்னால் சுற்றும் மருத்துவன்[2] முதலுதவி செய்கிறான்.அவனிடத்து கடைசியாக ஒரு உதவி வேண்டுமெனச் சொல்லி மருத்துவனுக்கு[1] பரிசாக அளிக்க ஒரு பொருளை வாங்கி வைக்கிறாள்.

கர்ப்பம் கலைந்து அவனிடத்து சண்டையிட்டு மனைவி விலகிப் போகிறாள். அவனிடத்து மருத்துவ உதவி கோரி வந்த நோயாளியை துன்புறுத்தியாக வழக்கு வருகிறது. வழக்கிட்டவள் மறுநாள் கொலையுண்டு கிடக்கிறாள். காவலர் வந்து பக்கத்து வீட்டில் வசிக்கும் கல்லூரி மாணவியை விசாரிக்கிறார். அவள் தன் தோழியுடன் கொலை நடந்த நேரத்திலிருந்ததாக பொய் சொல்லுகிறாள்.மருத்துவனை போலீஸ் வந்து பிடித்து போகிறது. வழக்கறிஞரான மனைவி தகவல் அறிந்து அவனுக்கு உதவ ஓடோடி வருகிறாள். மாணவியும் ஓடோடி வருகிறாள் - மனைவியுடன் அவன் சேர்ந்ததை பார்த்து உள்ளம் பதைக்கிறாள்...........

காட்சிகள் மின்னல் வேகத்தில் பின்னோக்கி போகிறது. மருத்துவன் ஏன் மாணவியை காணச் செல்வதில்லை? மாணவியிடத்து உண்மையிலேயே அவனுக்கு காதல் இருந்ததா? அவன் மனைவிக்கு கர்ப்பம் கலைந்தது எப்படி? மாணவி கடைசியாக மருத்துவனுக்கு அனுப்பிய பரிசு என்ன? அவன் மனைவி ஏன் சண்டையிட்டு விலகிச் சென்றாள்? உதவி கோரி வந்த நோயாளியை ஏன் அவன் துன்புறுத்தினான்? நோயாளி எப்படி மாண்டாள்? மாணவிக்கும் மருத்துவனுக்கும் அவன் மனைவிக்கும் கடைசியில் என்னதான் ஆனாது? ரோஜா கொடுத்ததிலிருந்து காட்சிகள் மீண்டும் வரிசையாய் வந்து விடையிறுத்துகிறது.

நிற்க! [ சரி...சரி....மரியாதையெல்லாம் மனசிலிருந்தால் போதும் உட்காருங்க..:-) ].....மேற்கண்டது நான் சமீபத்தில் கண்ட ஒரு பிரஞ்சு திரைப்படத்தின்( À la folie... pas du tout ) கதைச்சுருக்கம்.இப்படத்தின் ஆங்கிலப் பெயர்: He Loves Me, He Loves Me NOT. Amélie பட புகழ் Audrey Tautou இதில் கல்லூரி மாணவியாக நடித்து கலக்கியிருக்கிறார்.

கொஞ்சம் "குடைக்குள் மழை"யை நினைவுப்படுத்தும் படைப்பு அந்த கல்லூரி மாணவியின் பாத்திரம்.[ போச்சு...போ.....தெரியாத்தனமா துப்பு கொடுத்திட்டேன், ஞாபகத்திலிருந்து அழிச்சிடுங்கோ :-) ]. "Rashômon"," விருமாண்டி" படங்களில் கண்ட மாறுபட்ட பார்வைகளின் தொகுப்பே மேற்கண்ட கேள்விகள் அனைத்திற்கும் அற்புதமான திரைக்கதையால் பதில் சொல்லும்.

படத்தின் முடிவில் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட மாத்திரைகளைக் கொண்டு மருத்துவனை ஒரு அழகான சித்திரமாக அவள் தீட்டியிருப்பாள், எத்தனையோ உணர்வுகளை அது சொல்லாமல் சொல்லும்.

காதல்தான் மனித மனத்தை எப்படியெல்லாம் ஆட்டி படைக்கிறது!அமேரிக்க அதிபரின் "சைபராபாத்" பயணம்நன்றி: என்.சொக்கன் - தினம் ஒரு கவிதை மடலாற்குழு

இந்த வாரம் முழுவதும் வெளியான கவிதைகளை எழுதியவர் இன்றைய கவிதையை எழுதிய ராஜேஷ் வேணு. இன்றைய கவிதையில் என்.சொக்கன் அவர்களே ஒரு அறிமுக உரையை தந்திருக்கிறார்.

கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்ட பின் இவ்வுரையுடன் கூடிய இக்கவிதையை வெளியிடலாம் என இருந்தேன். அதற்குள் வலைப்பதிவுலகநண்பர்களுக்குள் சிறு குழப்பங்கள் விளைந்து விட்டது.

சொக்கனும் மற்ற நண்பர்களும் மன்னிக்கவும்!. உங்கள் கருத்துகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி!


மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ?!


Kerry vs Bush

Wednesday, November 03, 2004

ஏன் பிறந்தாய் மகளே?

அவள் பெயர் (ச்சும்மா ஒரு பெயருக்குத்தான்..) அகல்யா, என் தோழியின் தோழி. எனக்கு அவ்வளவாக பழக்கமில்லை.தோழி சொல்லி நிறைய கேட்டிருக்கிறேன். வீட்டிற்கு ஒரே செல்லப் பெண். அப்பாவிற்கு கூரையை பிய்த்துக் கொண்டு பணம் கொட்டும் வியாபாரம். அம்மா மகளிர் (வெட்டி) கூட்டமைப்பின் தலைவி. மகளின் பணத்தேவைகளை மாதந்தோறும் தவணை முறையில் தீர்த்து வைப்பதுதான் அவர்களின் கடமை, பாசம் என்னும் "அரிய" மனப்பான்மை உடையவர்கள்.

அவள் பள்ளி வரை நன்றாகதான் படித்திருக்கிறாள். கலைக்கல்லூரியில் சேர்ந்ததும் காதலனாக ஒருவன் அவள் வாழ்க்கையில் புகுந்தான்.வகுப்பில் பாடம் படித்ததை விட புறவுலகில் நிறைய பாடங்களை அவர்கள் கற்று அறிந்திருக்கிறார்கள். வீட்டாருக்கு வழக்கம் போலவே இது தெரியவில்லை. நாளோரு "தண்ணியும்" பொழுதொரு "டிஸ்கோதே"யுமாய் அந்த பாடங்கள் தொடர்ந்திருக்கின்றன.

ஒரு நாள் அவசரமாக என் தோழியை தொலைப்பேசியில் அழைத்திருக்கிறாள் அவள். காதலன் என்று அவளுடன் சுற்றிய கயவன் அது நாள் வரை அவளை பகடைக்காயாய் உபயோகித்ததைச் சொல்லி கதறி அழுதிருக்கிறாள்.போதையில் இருந்தவளை அனுபவித்துவிட்டு, அதை புகைப்படமாகவும் படமாகவும் பதிவுச் செய்து இணையத்திலும் நீலச்சந்தையிலும் விற்றிருக்கிறான். இது எதுவும் தெரியாமல் இவள் வழக்கம் போலவே தினப்படி நடவடிக்கையைத் தொடர்ந்திருக்கிறாள்.

தோழியை அழைத்த நாள் அன்றுதான், அகல்யாவின் செல்பேசிக்கே அவள் காதலனுடன் இருக்கும் புகைப்படம் வந்துள்ளது. கயவனின் சுயரூபத்தை அறிந்து கொண்டவள், என்ன செய்வதேனத் தெரியாமல், இவளை அழைத்திருக்கிறாள்.

விசயத்தை கேட்டுத் தெரிந்த என் தோழி," காவல் நிலையத்தில் உன் பெற்றோர் மூலம் புகார் கொடுக்கலாம். அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து அவனையும் அவன் கூட்டத்தாரையும் பிடித்து விடுவார்கள்." என்றிருக்கிறாள். அதற்கு அவள் ஒன்றும் பதிலுரைக்காமல் அழுதுக்கொண்டேயிருந்திருக்கிறாள். அவளுக்கு ஆறுதலாக பேசி " நான் வீட்டிற்கு வர்றேன், உன் அப்பா அம்மாவிடம் நாம ரெண்டு பேரும் பேசலாம்" என்றிருக்கிறாள். ஆனால் இவள் வீடு செல்லும்வரை அவள் காத்திருக்கவில்லை. மின்விசிறியில் அதுவரை அவள் அதிகம் அணிந்திராத தாவணியை கட்டி உயிரை மாய்த்திருந்தாள். அதுவரை நேரா நேரத்திற்கு வீட்டிற்கு வராத அவளை பெற்றவர்கள் அலறித் துடித்து வந்து சேர்ந்தனர்.

யார் இங்கு குற்றவாளி? மகளை கட்டுப்பாடுடன் வளர்க்க நேரம் கிடைக்காமல் பணத்தின் பின்னாலும் புகழின் பின்னாலும் அலைந்து கொண்டிருந்த அவள் பொற்றோர்களா? நாகரீகம் என்ற பெயரில் "தண்ணியும்", "டிஸ்கோதேயுமாய்" அலைய கிடைத்த சுதந்திரமா? எது காதல் எது காமம் என அறிய முடியாமல் தெரிந்தே படுகுழியில் வீழ்ந்த வயசுக் கோளாறா? அல்லது பிரச்சனையை எதிர்கொள்ள முடியாத கோழைத்தனமா?

தோழி கூறக்கேட்டு இளைய தலைமுறை மேல் அடக்க முடியாத கோபமும் எரிச்சலும் பரிதாபமும் ஒருசேர வந்தது. சமீபத்தில் "டிஸ்கோதெ" சென்று வரும் வழியில் விபத்துக்குள்ளான இளம் பெண்ணின் மரணமும் நினைவுக்கு வந்தது. எங்கே சென்று கொண்டிருக்கிறது நம் இளைய சமுதாயம்? பாரதி கண்ட புதுமைப் பெண்கள் நிச்சயம் இவர்கள் அல்லர்.என்னைப் பெறுத்தவரை பெற்றோரின் தீவிரமான கவனிப்பும் அளவிட முடியாத பாசமும் சிறகொடிக்காத சுதந்திரமும் இருந்தால் எந்த பெண்ணும் பாரதியின் கனவுப் பெண் ஆகலாம்.

"மங்கையாராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமாம்மா" - இது வெறும் வார்த்தைகளில்லை -சத்தியம்! உணர்ந்து வாழ்ந்தால் நன்மை நிச்சயம் !

காதலினால் காதல் செய்வீர்!


நன்றி: என்.சொக்கன் - தினம் ஒரு கவிதை மடலாற்குழு

மேகத்திடம் ஒரு கேள்வி - மதி கந்தசாமி

மதி, உங்கள் எண்ணங்களுக்கும் திரைப்பார்வைக்கும் என்னவாயிற்று ? [ மரத்தடியின் விழுதுகளையும் வலைப்பூக்களையும் வளர்ப்பது நன்றுதான், ஆனாலும் வேர்களை மறப்பது நியாயமா? ]


Tuesday, November 02, 2004

பகல் கனவுகள்நன்றி: என்.சொக்கன் - தினம் ஒரு கவிதை மடலாற்குழு

மேகத்திடம் ஒரு கேள்வி - "அகரத்தூரிகை" அருண்

நம் தமிழ் வலைப்பதிவுலகின் பிரபலங்களிடம் கேட்க நினைத்த ஒரே கேள்வி இங்கு வெளியிடப்படும், பின்னூட்டம் மூலமாகவோ அல்லது என் மின்னஞ்சல்[ rsubbulatchoumi@hotmail.com ] மூலமாகவோ தலைவர்/விகள் பதிலுரைத்தால் மகிழ்வேன்/வோம்.

"அகரதூரிகை" அருண், ஆங்கில குறும்படங்களை இயக்கி வரும் நீங்கள் எப்போது தமிழ் (அல்லது HOLLYWOOD ?) திரையுலகிற்கு பிரவேசமாக உத்தேசம் (இருக்கிறதா?) ?

[ஒரே கேள்வியில் பல கேள்விகளை சொருகி விட்டேன், மன்னிக்க :-) ]

தேர்தலாம் தேர்தல்

ஆளுயர "கட்-அவுட்"டுகளில்லை.
மின்சார கம்பங்களில் கட்சிகளின் தோரணங்களில்லை.
வண்ண வண்ணமாய் அலங்கரிக்கும் சுவரொட்டிகளில்லை.

வாக்களிக்க விடுமுறையில்லை.
வாக்களிக்க கொண்டுபோக "கட்சி" சார்பு வாகனங்களில்லை.
வாக்களித்தால் இலவச டாலருமில்லை, பிரியாணியுமில்லை,"தண்ணி"யுமில்லை.

வாக்குப்பதிவு இடங்களில் சோடா பாட்டில், வெடிகுண்டு கலவரமில்லை.
வாக்குப்பெட்டிகள் களவாடப்படவில்லை.
கள்ள வோட்டு போடும் மக்களுமில்லை.

என்னதான் தேர்தலோ இது......?

பி.கு: மதில் மேல் பூனையாகத்தான் முடிவுகள் இருக்குமென ஊடகங்கள் சொல்கின்றன[Electoral Vote Predictor 2004: Kerry 262 Bush 261], இரவிற்குள் தெரிந்துவிடும்.

Monday, November 01, 2004

புதுவையை சிங்கையாக மாற்ற முடியும்

அதற்கு "அரசியல் தைரியம் தேவை" என்கிறார் நாட்டின் முதல் குடிமகன் "கனவுகளின் நாயகன்" கலாம்.

நன்றி:- www.thatstamil.com

வலிக்கிறதடா மகனேநன்றி: என்.சொக்கன் - தினம் ஒரு கவிதை மடலாற்குழு

கார்மேக வலம் - 1

கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவில் சிங்கையிலிருந்து பிரபு பெயர்த்த "மூளையும் மனமும் " என்கிற தமிழாக்க கட்டுரை என்னை கவர்ந்தது. "ஆன்மீக அனுபவம் வெளியிருந்து அல்ல உள்ளிருந்தே உருவாகிறது. உதாரணத்திற்கு, தியானத்தில் ஏற்படும் உலகத்தைக் கடந்த அனுபவம் மூளையின் குறிப்பிட்ட இடங்களில் ஏற்படும் ரத்த ஒட்ட மாறுதல்களின் விளைவே!!" என்கிறது அவர் குறிப்பிடும் புத்தகம்:-

Why God Wont Go Away
Authors: Andrew Newberg, Eugene D'Aquili, Vince Rause
Published by: The Ballantine Publishing Group
ISBN: 0-345-44034-X

விரிவான வாசிப்பிற்கு காத்திருக்கிறேன்.

கோமான் கலக்குகிறார்!. ஒரு பக்கம் அவர் தாத்தா எழுதிய அருமையான இலக்கிய திரட்டுகளை அள்ளித்தருகிறார்."விரகம் விளைத்த வீரத்தில்" காரிருள், மல்லிகை, வெண்ணிலா, கருங்கடல் இவையாவும் ஒருங்கிணைந்து ராமனின் பிரிவாற்றாமையை எப்படி தூண்டியது என்று அழுகு மிளிர விளக்கி, அவன் இன்னுயிரான சீதையை கொண்டு வர பெருந்தடையாய் இருக்கும் கடலை கடக்கும் எண்ணத்தில் மூழ்கும் கம்பரசத்தை கோமானின் தாத்தா மிக அழகிய நடையால் விளக்குகிறார். "நம் உள்ளத்தை உணர்ச்சி வசமாக்கும் பணியை கோமான் ஐயாவாலும் செயல்படுத்த முடியும்...". திவ்விய பிரபந்தத்தில் வெண்பா வகைகளின் அறிமுகமும் ஆழ்வார்கள் அறிமுகமும் பெரியாழ்வார் பாடிய தலங்கள் அறிமுகமும் அருமை.


குழந்தைகள் அவரை நிறையத் தொல்லை கொடுக்கிறார்களோ எனத் தெரியவில்லை :-) , அவர் கவிதையில் ஒன்று:-

"அமைதியின் இருப்பிடம்
குழந்தைகளிடத்தில்

ஆம்
அமைதியின் இருப்பிடம்
குழந்தைகளிடத்தில் தான்

தூங்கும் பொழுது......."

ஆனால் விசாலமான சமூக பார்வையுடன் குளிர்பானத்தின் நச்சுத்தன்மை, தணிக்கை, காலச்சுவடின் தனிஎழுத்தாளர் தாக்கு என்பன குறித்தும் எழுதுகிறார்.

தன் எண்ணத்தையும், எழுத்தையும் நம்முடன் பகிர்ந்து கொள்ள வித்தியாசமான முன்னோட்டத்துடன் வந்திருக்கிறார் விசிதா.
" வரும் வியாழன் இரவு அல்லது வெள்ளி காலை ஒரு சிறுகதையை இவ்வலைப்பதிவில் இடுகிறேன். ஒரு மாறுபட்ட காதல் கதை என்று அதைச் சொல்லாம். ஆனால் அதை படித்தபின் அது காதல் கதை மட்டும்தான் என்று நீங்கள் சொல்லமாட்டீர்கள் "
ஆவலை கிளப்பி விட்டுள்ளார், பார்ப்போம், படிப்போம்!

மாவுருண்டை [இட்லிவடைப் போல வித்தியாசமான முகமூடிதான் :-) ] வண்ண வண்ண படங்களுடன் சுட்டும் சுடாமலும் விசயங்கள் தரத் தொடங்கியிருக்கிறார். அவருடைய மகாகவி (அல்லது) வீரப்பன் HALLOWEEN புகைப்படம் அருமை.

[வலம் தொடரும்..]

உயிரின் தேடல்....

இதழில் தொடங்குகிறது...

நன்றி: என்.சொக்கன் - தினம் ஒரு கவிதை மடலாற்குழு