எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Wednesday, June 29, 2005

அராரே நிஜமோ மாயம்ந்ன்னு

எல்லோரும் அலசி ஆராய்ந்து துவைத்து காயப்போட்டதை நேற்றுதான் சியாட்டலில் பார்க்க முடிந்தது. எனக்கு தோன்றியவை சில:-

  1. "நன்றி: Cinema Paradiso [சென்னை] - Fight Club, Se7en, Matrix Reloaded, I know what you did last summer [ விளையாட்டரங்க உடையமைப்பிற்கு] DVD-களுக்கு" என்கிற Title card missing.

  2. நாசர் போன்ற அசத்தலான நடிகர் அச்சுபிச்சுத்தனமாக மருத்துவராய் நடித்தது சகிக்கவில்லை. அதிலும் "வேற என்ன பண்ணும்?" என்று தோள்களை குறுக்கிக் கொண்டு ஆராய முற்படுகையில் சிரிப்புத்தான் வந்தது. வெண்தாடி வைத்திருந்த அந்த உண்மையான மருத்துவரையே பேச வைத்திருக்கலாம். ["எப்படி தெரிஞ்சுகிறது?" என்று நந்தினி கேட்கையில், " எங்க தலைவரை கேளுமா"ன்னு திரையரங்கில் ஒருவர்.]

  3. சின்னச் சின்ன தப்புக்கெல்லாம் கொலை [ "ரொம்ப சின்ன புள்ளத்தனமாலே இருக்கு இது"] என்பதை பயம் தருமளவு தண்டனை என மாற்றியிருந்தால் கொஞ்சம் நம்பகத்தன்மை வந்திருக்கும். எல்லாவற்றிருக்கும் மரண தண்டனைதான் முடிவு என்றால் நாடு சுடுகாடாயல்லவா மாறிப் போகும்.

  4. விளையாட்டரங்க பூச்சுற்றலுக்கு[வார்த்தைக்கு நன்றி:மாண்ட்ரீஸர்] பதில் சேதுபதி ஐயா செய்ததைப் போல இவரும் பேசமால் Video Cassette-யே Sun-Tv,Vijay-Tv,Jaya-Tv-க்களுக்கு அனுப்பியிருக்கலாம். நிறைய ரசிக சிகாமணிகளின் மூளைச் செல்கள் இன்னும் சிறிது காலம் உயிருடனிருந்திருக்கும்.

  5. "பிரமாண்டவரின்" மற்ற படங்களில் என்னை பெரிதும் கவர்ந்தவை பாடல் காட்சிகளே, கண்டிப்பாக திரையரங்கில் பார்க்கும்படி ஏதேனுமிருக்கும். இப்படத்தில் பாடல்கள் எல்லாம் பப்படம் - "ரண்டக்க" தவிர [ மலை,சாலை,வீடு,ஊர்தி ஒவியங்கள் அருமை].

  6. நாயகனின் மற்றுருவங்களை திரையில் அறிமுக படுத்தும் முன் கொஞ்சம் "Suspense" வைத்திருக்கலாம். எருமை மாட்டின் மீதேறி முகம் தெரிய வருகையிலேயே தெரிந்துவிடுகிறது இவருக்கும் அம்பிக்கும் எதோ தொடர்புண்டென [ மன்மத பாத்திரத்திலும் அதே].

  7. அம்பி Scale வைத்து Margin போடும்போதே பக்கத்தில் இருப்பவரிடம் சொன்னேன், "என்ன இவன் Sub:காதலிக்க வேண்டி விண்ணப்பம்-னு எழுத போறானா?" - என்று, "காதல்"- தயாரிப்பாளர் புல்லரிக்க வைத்து விட்டார். ஏன் இவர் நாயகர்கள் எல்லோரும் காதலுக்காக சாலையில் செல்பவர்களை படுத்த வேண்டும் ? நாயகிகள் ஏன் அப்படியே கண்ணீர் மல்கி ஏற்று கொள்ள வேண்டும் ? [" ரோட்டை பார்த்து நடடா கடன்காரா"ன்னு செவிலில் விட்டிருக்க வேண்டாமோ?].

  8. ச்சாரி உபாயத்தால் கொஞ்சம் சிரித்தேன். சீயானை நிறையவே ரசித்தேன். கடைசியில் வரும் "தனி மனித தூதி" சார்ந்த வசனத்தை தவிர வாத்தியாரின் எழுத்து வித்தைகளும் கவர்ந்தன. "S"-ன் "பிரமாண்டத்திற்கு" வணக்கம், ஆனால் இன்னும் கொஞ்சம் சிரத்தையுடன் செதுக்கியிருந்தால் கவர்ந்திருக்கும்.


பி.கு-கள்:-

1) சங்கத்தால் தமிழ் வளர்த்து வரும் அருமை நண்பர்/பிகள் முதலாவதாய் சீட்டு வாங்கி முதலாவதாய் அரங்கிற்கு வரும் ரசிகர்/கைகளை அரங்கின் கட்டே கடைசியேரத்தில் அமர நிர்பந்திக்காமலிருந்தால் அவர்களுக்கு நித்திரை துறக்காமலேயே சொர்க்க வாசல் திறந்து உள்ளே நுழைய அனுமதி கிடைக்க பிரார்த்திப்பேன்.

2) தலைப்பை "மிருகினஜம்போ" ஸ்டைலில் படிக்கவும் :-)

Monday, June 27, 2005

The Life of David Gale (LDG) -> 3 Deewarein -> விருமாண்டி

சமீபத்தில்தான் The Life of David Gale படம் பார்த்தேன். சட்டென்று இதற்கு முன் கண்ட மற்ற இரு படங்களின் கதை அமைப்பு நினைவுக்கு வந்தது. ஒரு கொலை அல்லது பல கொலைகள் செய்த ஒருவன் கைது செய்யப்படுகிறான். கொலைக்குற்றத்திற்கான தீர்ப்பு வழங்கப்பட்டு மரண தண்டனைக்காக நாட்களை கொன்று கொண்டிருக்கிறான். பேட்டி காண வருகிறாள் ஒரு பெண். செவி வழி அறிந்த செய்தியை குற்றவாளியின் வாய் வழி கேட்டு பின் ஆதாரங்களைத் தேடி தீர விசாரிக்கிறாள். முடிவில் மரண தண்டனை நிறைவுறும் நாளில் உண்மையைக் கண்டு பிடிக்கிறாள். குற்றவாளியை காக்க முயல்கிறாள். ஆங்கில படத்தில் தோல்வி அடைபவள் இந்திய படங்களில் வெற்றி அடைகிறாள்.

LDG - Kevin Spacey [ The Usual Suspects, Se7en, American Beauty] -யின் இயல்பான கூர்மையான நடிப்பில் மிளிர்கிறது. ஆரம்பத்தில் கல்லூரி விரிவுரையாளராக வகுப்பில் கலக்குவதும், "தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டியாய்"-ஆகி பின் மகனை பிரிந்து கலங்குவதும், ரத்த புற்றுநோயால் அவதியுறும் நண்பிக்கு ஆதரவாய் இருப்பதும், "முதல்வன்" பாணியில் ஆளுநரிடம் பேட்டி எடுப்பதுமாய் புகுந்து விளையாடியிருக்கிறார். பின் மண்டையில் ஓங்கி அடித்ததுப் போல வரும் ஊகிக்க முடியாத படத்தின் முடிவும் அருமை. Death Penalityக்கு எதிரான கருத்துக்களை ஆணித்தரமாக படம் முழுவதும் தூவியிருக்கிறார்கள். "விருமாண்டி"யைப்போல வெறும் வாய் பேச்சுடன் முடியவில்லை இப்படம் - "அதையும் தாண்டி தியாகத்திலானது.......". நிருபராய் வரும் Kate Winslet படம் முடிவுறும் தருவாயில் - துப்பு துலங்க தானே Victim-ஆக - மாறி மிரட்டியிருப்பார்.

3 Deewarein- மூன்று கொலைகளையும் மூன்று வேவ்வேறு மனிதர்களையும் ஒரே சரடில் இணைக்கும் புத்திசாலித்தனமான திரைக்கதையால் கவர்ந்தது. அலட்டலில்லாமல் வரும் நசருதீன்ஷாவும் அமைதியாய் வரும் ஜாக்கிஷரப்பும்தான் நாயகர்கள். நாகேஷ் குக்குன்னூர் வெகுளியாக நடிக்க முயன்று இருப்பார். நிருபராய் வரும் ஜுகிசாவ்லா கையில் மெழுகுவர்த்தியுடன் கணவனை மிரட்டுகையில் பீதியை கிளப்பியிருப்பார். சிறையில் வரும் சின்னச் சின்ன சம்பவங்கள் The Shawshank Redemption படத்தினை நினைவுப் படுத்தும் [ சிறையை விட்டு போக மனமில்லாமல் சககைதியை கொல்ல முனைதல், சககைதியினை ஓரினப் புணர்ச்சிக்கு வற்புறுத்தல் என].

விருமாண்டி - Rashômon - Ctrl+C & Ctrl+V. கொத்தாளத் தேவர்,விருமாண்டி,அன்னலட்சுமி[ "எம் புள்ளைக்கு டெண்டுல்கர்ன்னு தான் பேர் வைப்பேன்" ], ஏஞ்சலா காத்தமுத்து - நடிப்பின் வரிசை. கடைசி காட்சிகளை மெருக்கெற்றியிருந்தால் கவர்ந்திருக்கும்.

LDG தந்த அதிர்வு மற்ற படங்கள் ஏனோ தரவில்லை. மூன்றில் நான் ரசித்த படங்களின் வரிசையில் தலைப்பை தந்துள்ளேன் [ எதிலிருந்து எதை உருவி இருக்கிறார்கள் என்ற வரிசையில் அல்ல :-) ].

Wednesday, June 22, 2005

டாலர் "உலகம்"

டாலர் உலகத்தில் ....
நாயைக் கூட
நரியென கூவி விற்பர்.

தாயை கூட [பிள்ளையையும்]
தள்ளி வைப்பர் .

கார்டு மலைகளால்
கடனாளியாக்குவர்.

சுதந்திரம் தலைக்கேறி
சுட்டு கொ(ல்)ள்வர்.

பொய்யாய் வாழ
நிஜமாய் சாவர்.

Tuesday, June 21, 2005

தடை

வகுப்புத் தோழனுடன்
பேசத் தடை.

பக்கத்து வீட்டு பையனைக்
காணத் தடை.

சச்சின் சிக்ஸரடித்தால்
துள்ளிக் குதிக்கத் தடை.

"சூப்பர் ஸ்டார்" திரையில் வந்தால்
விசிலடிக்கத் தடை.

ஆனால்,
பத்துப் பொருத்தம் பார்த்து பிணைத்த
பழகியறியாத ஆம்பிளையுடன்
முதல் நாளிரவே
படுக்கத் தடையில்லை....