எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Sunday, September 26, 2004

கிருஷ்ணா கிருஷ்ணா

"அன்பே விஷ்ணு " என்று நாத்திகம் பேசி திரிந்தாலும் "கிருஷ்ணன்" என்னும் பாத்திரம் என்னை கவர்ந்த ஒன்று. இந்திரா பார்த்தசாரதியின் அருமையான நடையில் எழுதப்பட்ட கிருஷ்ணனைப் பற்றிய இந்த நவீன நாவல் உண்மையிலேயே வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை தந்தது. அதற்கு முக்கிய காரணம் ஆசிரியர் பயன்படுத்தியுள்ள சொற்கள் மற்றும் நடை. நிகழ்கால சம்பவங்களை உதாரணம் காட்டி அவர் பாரத கதையைச் சொல்வதுகூட மிக அழகாக அமைந்துள்ளது.

நாவலில் என் மனம் கவர்ந்த பகுதி, கிருஷ்ணன் நீண்ட நாட்கள் கழித்து ராதையை காண பிருந்தாவனம் சென்று மனதில் உள்ள சிறுமியின் உருவம் குலையாமலிருக்க பார்க்காமலேயே திரும்பி வருவது, கண்ணீர் வர வைத்தது.

அரசியல்வாதியாய் ஆனபின் கிருஷ்ணன் வாசிக்கும் குழலில் இசை வராமலிருப்பது கண்டு தன்னுடன் ராதையுமிருந்தால் இசை மீண்டு வருமென கூறும்போது எத்தனை பெண்கள் அவனை மோகித்தாலும் எட்டு பெண்டிரை அவன் மணம் புரிந்தாலும் ராதையிடத்தே அவன் ஆத்மா அன்பால் கட்டுண்டு கிடப்பது விளங்கும்.ஏழு வயது பெரியவள் ஆனாலும் ராதையிடத்து அவன் கொண்டிருந்த கள்ளம்கபடமற்ற அன்பே அந்த பாத்திரத்தின் பால் ஈர்ப்பு கொள்ள வைத்தது.

மற்றபடி கிருஷ்ணனின் போர் தந்திரங்கள் தேர்ந்த அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாலபாடங்களாக இ.பா விவரித்துள்ளார். நிறுவன வல்லுநர்களும் அறிந்து கொள்ள வேண்டியவை என நினைவூட்டுகிறார்.

திரும்ப திரும்ப நாரதர் பாத்திரம், "கிருஷ்ணன் ஜரா என்ற வேடனிடம் அவன் கதையை கூறினான், நான் ஜரா என்னிடம் கூறியதை உங்களிடம் கூறுகிறேன் " என்று கூறுவது அலுப்பு தருவதாய் இருந்தது. நாரதர் அடிக்கடி "புரிகிறதா?" என்று கேட்பது கூட வாசக/கியின் கிரகித்துக் கொள்ளும் அறிவை நம்பாததுப் போன்ற கருத்தையே வலியுறுத்துகிறது. தவிர்க்க பட்டிருக்கலாம்.

நான் கிருஷ்ணனை இன்னும் அதிகம் விரும்பும் படி வைத்ததே இ.பா வின் வெற்றியாக கூறுவேன்.


Thursday, September 23, 2004

0 டிகிரி

சமீபத்தில் இந்தியா சென்று வரும்போது சில நல்ல புத்தகங்கள் வாங்கி வந்தேன் [ நன்றி: திலீப் ( dilipbooks@eth.net ) ]. நண்பன் ஒருவனின் பலத்த சிபாரிசின் பேரில் சாரு நிவேதிதா எழுதிய "0 டிகிரி" நாவலையும் வாங்கினேன். தமிழ் இலக்கிய உலகில் சலசலப்பை உண்டாக்கிய புத்தகமென நண்பன் கூறியதின் உண்மையை அறிய விமானத்திலும் வீட்டிலுமாக படித்து முடித்தேன்.

முதலில் நாவலுக்குரிய எந்த அடையாளமும் இல்லாமல் புதுவையின் பேச்சு வழக்கில் வரும் "பிச்சைக்காரன் வாந்தி எடுத்ததுப் போல்" ஒரு கலவையாக இருந்தது. கடைசி சில அத்தியாயங்களையும் (அவந்திகாவின் கடிதமும் மகளுக்கான கவிதை-கடிதங்களும்) ஒரு முஸ்லீம் பெண்ணின் வாழ்க்கை குறிப்படங்கிய அத்தியாயத்தையும் (ஆபிதீனிடமிருந்து சுட்ட பழமோ?) தவிர்த்துப் பார்த்தால் மனதை தொடக்கூடியவை இப்புத்தகத்தில் எதுவுமில்லை.

படிப்பவர்கள் கொஞ்சமேனும் அதிர்ச்சியடைய வேண்டுமென மெனக்கெட்டு "மஞ்சள்" பத்திரிக்கையை விட மோசமான வார்த்தைகளால் நான்கு சுவர்களுக்குள் நடக்கும் புனிதத்தை கேவலப்படுத்தி எழுதியிருப்பதில் சாரு வெற்றியடைந்திருப்பதாகவே கருதுகிறேன்.

இந்த நாவலில்....மன்னிக்க....புத்தகத்தில் வரும் பாத்திரங்களான செத்தமூளை, முனியாண்டி, உத்தம தமிழ் எழுத்தாளன், தாயுமானவன் பற்றிய குறிப்புகள் எதை உணர்த்த வருகின்றன என்பது என் சிற்றறிவுக்கு புரியவில்லை[ புரிந்தவர்கள் யாரேனும் பொழிப்புரை வழங்கினால், சாருவின் பெயரிட்ட ஒரு பேன்சி பனியன் பரிசாய் தரப்படும்].

என்னதான் "என் எழுத்து வேறு. என் வாழ்க்கை வேறு" என புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் சாருவின் வாழ்க்கையை இந்த புத்தகத்திலிருந்து வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை[ நன்றி: அவருடைய கோணல் பக்கங்கள் - நாவல் படிப்பதற்கு முன் படித்து பார்க்கச் சொன்னான் நண்பன்].

அழகியல் மருந்தளவேணுமில்லாத அருவருப்பான எழுத்தாக உள்ளமையால் இலக்கிய உலகில் இப்புத்தகம் சலசலப்பை உண்டாக்கியிருக்குமென நினைக்கிறேன். சிபாரிசு செய்த நண்பனை தொலைப்பேசியில் பிடிக்க முடியவில்லை.

அடுத்த முறை இந்தியா செல்கையில் இருக்கிறது அவனுக்கு !!