எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Tuesday, July 12, 2005

கண்ணாமூச்சி....ரே..ரே... [ Hide and Seek ]

கார்மேகங்கள் சூழ்ந்த முதிர்மாலைப்பொழுதிலே காலாற நடக்க கிளம்பி பூங்காவைத் தாண்டி அருகிலிருந்த வணிக வளாகத்தினுள் நுழைந்து சாளர Shopping செய்து கொண்டே Blockbuster கடையினுள் நுழைந்து புதியதாக வந்துள்ள DVDகளை துழைகையில் கையில் கிடைத்தவை இரண்டு. Hide and Seek [Robert De Niro] மற்றும் The Jacket [Adrien Brody ]. இரண்டு படங்களைப் பற்றியும் அதிகம் தெரியாததால் "இங்கி பிங்கி பாங்கி" போட்டு Hide and Seek தோர்ந்தெடுத்து பொடி நடையாக வீடடைந்து கண்ணாமூச்சி விளையாட்டை [பார்க்க] துவங்கினேன்.

புது வருட புலரியில் ஒரு அம்மா தன் மகளுடன் [Dakota Fanning] மிக அன்னியோன்னியமாக பூங்காவில் விளையாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறார். மனநல மருத்துவனான அப்பன் [Robert De Niro ] அதைக்கண்டு பெருங்களிப்படைகிறார். அசதியான மகளை படுக்கையில் கிடத்தி அம்மா உம்மா கொடுத்து "நல்லிரவு" சொல்லி பிரிந்து குளிக்கச் செல்கிறார்.அப்பா தொலைநோக்கியில் வானத்தை சிறிது நேரம் முறைத்துப் பார்த்து விட்டு நித்திரைக்கு செல்கிறார்.

அப்பாவின் கனவில் புது வருடம் பிறந்த தின இரவு கேளிக்கையின் சில நிகழ்வுகளின் தீற்றல்கள் கனவுகளாய் வந்து விடியற்காலை 2:06க்கு திடுக்கிட்டு விழிக்கிறார்.மெதுவாய் எழுந்து வருகிறார். குளியலறையில் மெழுகின் வெளிச்சம் கதவிடுக்கின் வழியே இருளில் கசிந்து பிரகாசித்து கொண்டிருக்கிறது. கதவை திறந்து உள்ளே நுழைந்து Shower Curtain-ஐ திறந்து பார்க்கிறார். அங்கே அம்மா கை நரம்புகளை வெட்டி குருதியில் குளித்து Bath Tub-ல் இறந்து கிடக்கிறாள். அதிர்ச்சியில் அலறி மனைவியை எடுத்து அணைத்து அழுகிறார். மகள் வெறித்த கண்களுடன் அவர்களை பார்த்துக் கொண்டு நிற்க படம் ஆரம்பிக்கிறது.

அந்த சம்பவத்தை தொடர்ந்து பித்து பிடித்தது போல் மகள் இருப்பதை கண்டு மனம் வருந்தும் தகப்பன் நகரத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி ஒரு குக்கிராமத்தில் வீடு பார்த்து குடி போகிறான். புது இடமும் சூழ்நிலையும் மனிதர்களும் மகளின் மனதிற்கு இதமளிப்பார்கள் என நம்பி. ஆனால் குடி வந்த சில நாட்களுக்குள்ளாகவே மகளின் அன்றாட போக்குகளில் வித்தியாசங்களை அவன் உணர தொடங்குகிறான். ஒரு நாள் சார்லி என்று ஒரு நண்பன் தனக்கு கிடைத்தாக சொல்லும் மகளை மருத்துவன் நம்ப மறுக்கிறான். அவன் நிச்சயம் அவளின் கற்பனையில் தோன்றியவனாக இருக்க வேண்டும், மகளின் மனநிலை மிகவும் பதிப்படைந்து கொண்டிருக்கிறது என்றும் நம்புகிறான். அடிக்கடி அவனுடைய நண்பி/மனநில மருத்துவ நிபுணிக்கு தொலைப்பேசி மகளின் பிரச்சினையைப் பற்றி விவாதிக்கிறான்.

இதற்கிடையில் பக்கத்து வீட்டாரின் நட்பும், பூங்காவில் தற்செயலாய் சந்தித்த ஒரு பெண்ணின் நட்பும் தகப்பனுக்கு கிடைக்கிறது. ஆனால் மகள் வேறு யாரும் வீட்டிற்கு வருவதை விரும்பாதவளாய் எதிலும் பற்றில்லாதவளாய் சார்லி மட்டுமே ஒரே நண்பன் என வாழ்கிறாள். பூங்காவில் கண்டு நட்பான பெண் அப்பாவிடம் நெருங்குவது அவளுக்கு பிடிக்கவில்லை. ஏன் எனில் சார்லிக்கு அது பிடிக்கவில்லை என்கிறாள். அப்பாவையும் சார்லிக்கு பிடிக்கவில்லையாம். ஏன் ? அம்மா அப்பாவின் அலட்சியத்தால்தான் இறந்தாளாம்.அம்மாவை சார்லி நன்றாக வைத்து பார்த்திருப்பானாம். இப்படி எப்போதுமே அவளுக்கு சார்லி புராணம்தான்.

ஒரு நாள் நள்ளிரவு, வழக்கம் போல் "புது வருட இரவின் கேளிக்கை நிகழ்ச்சிகள்" அப்பாவின் கனவில் வந்து தொல்லைச் செய்ய சட்டென விழித்தெழுகையில் மணி 2:06 AM.குளியலறை கதவிடுக்கின் வழியே மெழுகு வெளிச்சம். அருகே சென்று "Curtain" திறந்து பார்த்தால் அம்மா இறந்து கிடந்தது போல் குருதி வெள்ளத்தில் அவர்கள் வீட்டு பூனை. சுவற்றில் சிகப்பு நிற எழுத்துக்கள்: " Now look what you have done. ".

சார்லி யார் ? மகளுக்கு உண்மையில் என்ன ஆயிற்று? விரிவான விடைகளுக்கு DVD யில் நான்கு விதமான முடிவுகளுடன் காண்க.

படத்தில் சட்டென்று கவர்ந்தது Robert De Niro-வின் "பழம் தின்று கொட்டை போட்ட" நேர்த்தியான நடிப்பிற்கு போட்டியாய் Dakota Fanning [வயது:11] -ன் உள்ளம் கவர்ந்த கூர்மையான முக பாவங்களுடன் கூடிய நடிப்பு. "I am Sam" லேயே தலைவி "Sean Penn" உடன் சேர்ந்து கலக்கியிருப்பார். தற்போது "Tom Cruise" உடன் "War of the Worlds". ஆஸ்கார் பந்தயத்தில் இந்த குதிரை ஜெயிக்குமா என பார்க்க வேண்டும்.

அருமையான Script. அதை அலங்கோலமாக்காமல் அப்படியே அழகாக தந்திருப்பதும் அருமை. Hide and Seek எனப்படும் கண்ணாமூச்சி விளையாட்டு படத்தின் முக்கிய காட்சிகளில் வருகிறது. நேரடியாகவோ மறைமுகமாகவோ கதையின் முக்கிய பாத்திரங்கள் அனைவரும் விளையாடுகிறார்கள்.

முடிவு காட்சிகள் திரில்லர் தாத்தா "Stanley Kubrick"-ன் "The Shining"-ஐ நினைவுப் படுத்தினாலும் சாமர்த்தியமாக பிரித்து நெறியாளப்பட்டிருக்கிறது. விசுவின் மிக பிரபலமான ஒரு வசனம் படம் பார்த்து முடிந்ததும் நினைவில் வந்தது[ அந்த வசனத்தை இட்டால் படத்தின் SPOILER-ஆக கூடும், எனவே வேண்டாம்].கடைசி காட்சி [Frame] "Double Twist"-க்காக வைக்கப் பட்டிருந்தாலும் பாவம் அந்த பெண் என்றே நினைக்க தோன்றுகிறது.

"The Sixth Sense", "The Usual Suspects"," The Life of David Gale","Fight Club" போன்ற படங்களின் "Climax" உங்கள் பிடரியில் அடித்து நிமிர்ந்து உட்கார வைத்து பிளந்த வாயுடன் பார்க்க வைத்திருந்தால், இந்த படமும் அவ்வனுபவத்தை அளிக்கும்.

கிடைத்தால் கட்டாயம் பாருங்கள், பார்த்தால் நம்மூர் படைப்பாளிகள் படைக்கும் "மனநிலை பாதித்த" பாத்திரங்களுக்கும் [குடைக்குள் மழை, சந்திரமுகி, அந்நியன்] இதற்கும் உள்ள வித்தியாசங்கள் புரியும்.

மிக பரவசமான ரசிகானுபவமிது!.