எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Friday, June 18, 2004

பத்து சொட்டு கண்ணீர்

அவன் என் பள்ளிப்பருவ நண்பன். அதி புத்திசாலி. பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவனிடம்தான் கேட்போம். பொறுமையாகச் சொல்லித் தருவான். ஆனால் அவன் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்க வேண்டும், அவன் குறிப்பிடும் புத்தகங்களையும் உரைகளையும்தான் படிக்க வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதம் உண்டு அவனுக்கு. அதனாலேயே சுதந்திர காற்றைச் சுவாசித்துக் கொண்டே படிக்க விரும்புபவர்கள் அவன் நட்பையும் உதவியையும் வேண்டாமென்று ஒதுங்கிப் போயுள்ளனர்.

அப்படி ஒதுங்கிப்போனவர்களை "எதிரிகள்" என்று அழைப்பான் அவன். எதிரிக்கூட்டத்தினரிடம் பேசினாலோ பழகினாலோ "காய்" விட்டு விடுவான். படிப்பில் "மக்குகள்" ஆன நாங்கள் வாத்தியார்களின் பிரம்படிகளிலிருந்து தப்பிக்க அவனைத்தான் தெய்வம் போல நம்பி வந்தோம். அதனால் எதிரிகளிடம் பழகுவதை அறவே தவிர்த்து வந்தோம்.

ஒரு நாள் "எதிரி" கூட்டத்தில் ஒருவன் [ பக்கத்து வீடு அத்தையின் மகன் ] மதிய உணவை கொண்டு போக மறந்தான். நான் அன்று பள்ளிக்கு தாமதமாக போக நேர்ந்ததால் அந்த அத்தை,

" புள்ள பசியில வாடும், இத கொண்டு போய் குடுத்துடு..."

என் கையில் திணித்தாள். நண்பனின் குணமறிந்து நான் வாங்க மறுக்கவே பார்த்துக்கொண்டிருந்த என் ஆத்தா பிரம்பெடுத்து அடிக்க வந்தாள். அடிக்கு பயந்து அழுதுக்கொண்டே தூக்குச்சட்டியை வாங்கிக் கொண்டு நடந்தேன்.

பள்ளிக்கு வந்தவுடன் என் கண்கள் சுற்றும் முற்றும் நண்பனைத் தேடின. அங்கு எங்கும் அவனில்லாதது கண்டு நிம்மதியடைந்து அந்த எதிரியைத் தேடினேன். சாப்பாடு நேரமாகையால் அவன் மற்ற எதிரிகளுடன் பெரிய ஆலமாரத்தின் கீழ்மர்ந்து அரட்டை அடித்தபடியே உண்டு கொண்டிருந்தான் [ அவன் நண்பர்களின் உணவை ]. அவனருகே சென்று,

" இந்தா ! உன் ஆத்தா உனக்கு சோறு குடுத்து அனுப்பிச்சாங்க. சாப்பிடு !"

கொடுத்தேன். அவன் மிக்க மகிழ்ச்சியுடன்,

"டாங்க்ஸ் ! ஆமா.. நீ எங்க கிட்டல்லாம் பேச மாட்டியே. உன் பிரண்டு இன்னிக்கு லீவா ?வந்துட்டே ?"

வாரினான்.

"உங்க ஆத்தாவும் என் ஆத்தாவும் குடுக்கச் சொன்னத்தினாலத்தான் வந்தேன். இல்லைனா நான் எதுக்கு உன் கிட்ட பேசறேன் ?. அப்பறம் நான் உன்கிட்ட பேசினதா என் பிரண்டுகிட்ட சொல்லிடாதே !. உனக்குத்தான் அவனப் பத்தி தெரியுமே."

வேண்டினேன்.

"கவலைப்படாத கண்ணு !. நான் ஏன் அவன்கிட்ட பேசறேன் ?. எனக்கென்ன கிறுக்கா ?. "

நக்கலாகச் சிரித்தான்.நன்றிச் சொல்லி விட்டு நழுவினேன்.
அன்று நிஜமாகவே நண்பன் பள்ளிக்கு வரவில்லை என மற்ற நண்பர்கள் சொல்லக் கேட்டு, நிம்மதியாக இருந்தது.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மறுநாள் வழக்கம் போல் பள்ளி சென்றேன். நண்பன் வந்திருந்தான், என்னைப் பார்த்துச் சிநேகமாய்ச் சிரித்தான். வயிற்று வலியால் நேற்று வர முடியவில்லை என்றான். இரண்டாம் பாடவேளையில் நண்பனின் பக்கத்து "பெஞ்சு" பையன் என்னவோ என்னைக் கைகாட்டி விட்டு அவனிடம் சொன்னான். நண்பன் திரும்பி என்னை கோபத்தோடு முறைத்தான். காலை இடைவேளையில் என் அருகே வந்து,

" உன் பேச்சு இன்னையிலிருந்து கா !.இனிமே என் கிட்ட பேசாதே !."

விருட்டெனச் சொல்லி போனான்.

எதிரியிடம் பேசியதை அவனிடம் "போட்டு" கொடுத்து விட்டான். பாவி பையன்!. அடுத்த இரண்டு பாடத்திலும் கவனம் செல்லவில்லை. அவன் நட்பை இழப்பதற்கு பயமாக இருந்தது. உணவு இடைவேளை வந்தது. நான் நேராக அவனிடம் சென்று, ஏன் எதிரியிடம் பேசினேன் என்று விளக்கினேன். அவன் செவிசாய்க்கவே இல்லை. நானும் விடாப்பிடியாக என் மேல் எந்த தவறுமில்லை. உதவி செய்யத்தான் போனேன் என விளக்கினேன். அவன்,

"என் எதிரிக்கு நீ எப்டி உதவலாம், உன்னை மன்னிக்கவே முடியாது. வேணும்னா ஒண்ணு செய்யலாம், நீ அதுக்கு பிரயச்சித்தமா ஏதாவது பண்ணு பழம் விடறேன்".

முன்பு ஒரு முறை இதுபோல் எங்கள் "செட்டில்" ஒரு பையன் எதிரியிடம் பேசியதற்கு தண்டனையாக நண்பனை "உப்பு மூட்டை" தூக்கிக் கொண்டு "கிரவுண்டை" பத்து முறை சுற்றி வரச் சொன்னான். பள்ளி மைதானம் மிகப்பெரியது, கிட்டத்தட்ட ஒரு "கிரிக்கெட்" மைதானமளவு இருக்கும். அதை நினைத்துப் போது அழுகை வந்தது. உடல் நடுங்கியது. அவனிடம்,


" என்னால உன்னை உப்பு மூட்டையல்லாம் தூக்க முடியாது...வேற ஏதாவது சொல்லு செய்றேன் ".


அவன் பெருங்குரல் எடுத்து சிரித்தான்.

"பைத்தியமே....உன் கிட்ட அதெல்லாம் செய்ய சொல்ல மாட்டேன்.ரொம்ப ஈசியா ஒண்ணு சொல்றேன்..செய்!"

"ம்....சொல்லு"

"எனக்காக ஒரு பத்து சொட்டு கண்ணீர் விடு !.போதும் !. பழம் விடறேன். உங்களுக்குத்தான் கண்ணீர் சிக்கீரம் வருமே." நம்பியாராய் மீண்டும் சிரித்தான்.

"திக்" கென்று இருந்தது எனக்கு. சத்தியமாய் நான் எதிர்ப்பார்க்கவே இல்லை.

இப்படியும் குரூரமாய் இருப்பார்களா ?
என்னை அழ வைத்து பார்க்கையில் என்ன சந்தோஷம் இவனுக்கு ? இது நாள் வரை ஒரு மிருகத்திடம் நட்பு வைத்திருந்தேனே ? கொஞ்சம் "மக்காய்" பிறந்து வளர்ந்ததிற்கு யார் யாரிடமெல்லாம் அசிங்க பட வேண்டியிருக்கிறது ?.


எண்ணிக்கொண்டிருக்கையிலேயே என் கண்ணிலிருந்து தாரை தாரையாய் நீர் வழிந்து நிலம் தொட்டது. அந்த மிருகம், நிலத்தில் விழும் துளிகளை விரல் விட்டு எண்ணிக் கொண்டு இருந்தது, கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல்.

எண்ணிக்கை பத்தைத் தொட்டவுடன்,

"இப்போதைக்கு இது போதும். ரொம்ப நீலிக்கண்ணீர் வடிக்காதே. உன் பேச்சு பழம்!" என்றான்.

மனசுக்குள் யாரோ பழுக்க காய்ச்சிய கம்பியை விட்டது போல் ஒரு வலி,எரிச்சல்.அழுகையை நிறுத்த முடியாமல், பையை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு ஓடினேன். அவன் என் பெயர் சொல்லி அழைத்தது பின்னால் கேட்டது. இரவு முழுவதும் அழுதேன். விடிந்தபோது முகம் வீங்கி அதிகாலைச் சூரியன் போல் சிவந்து இருந்தது.

இனி அந்த மிருகத்திடம் பேச கூடாது. எந்த உதவியும் பெற கூடாது. நாமே நன்றாக உழைத்து படிக்க வேண்டும், அவனை மிஞ்ச வேண்டுமென தீர்மானத்துடனேயே பள்ளிக்குச் சென்றேன். என்னை கண்டவுடன் நக்கலாக சிரித்து விட்டு,

" என்ன...கண்ணீர் மழையெல்லாம் விட்டுச்சா..?" நரம்பில்லாமல் கேட்டான்.

நான் அப்படி ஒரு ஜந்து அங்கு இருப்பதையே கவனியாது நடந்தேன். சிறுக சிறுக முயற்சி செய்து நானே படித்து இடை நிலை "கிணறை" "பார்டரில்" தாண்டினேன். எதிரிகளில் சிலர் எனக்கு நண்பர்கள் ஆனார்கள். மிருகத்தின் சுபாவத்தினால், நாளடைவில் அவன் நட்பு கூட்டத்தின் எண்ணிக்கை குறைந்து பத்தாம் வகுப்பு படிக்கையில் "பூஜயம்" ஆனது.

பேய்த்தனமாய் படித்து பத்தாம் வகுப்பில் பள்ளியில் இரண்டாம் இடம் அடைந்தேன். அவன் முதல் பத்தில் கூட வரவில்லை. பன்னிரண்டாம் வகுப்பிற்கு பள்ளி மாறிச்சென்று, அசுரத்தனமாய் படித்து அந்த பள்ளியில் முதலிடம் பெற்றேன். அவனை பற்றி பின் தகவலே இல்லை.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

அன்று நல்ல மழை. தொப்பலாக நனைந்து என் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன் திடீரென்று என் Scooty மக்கர் பண்ணியது. அதை தள்ளிக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தேன். ஒரு Automobile Workshop கண்ணில் பட்டது. அக்கடையில் வண்டியை நிறுத்தி மெக்கானிக்கிடம் உதவி கேட்டேன். அவர் யாரையோ உள்ளிருந்து அழைத்து வண்டியை பழுது பார்க்கச் சொன்னார்.

நான் மழைத்தூறலை ரசித்துக்கொண்டே காத்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்குக்கெல்லாம் அவன்,

" மேடம்..வண்டி சரியாகி விட்டது. எடுத்துட்டு போலாம் "
என்றான்.

" நான் எவ்ளோபா தரணும்.."

அவன் என்னை உற்று பார்த்து விட்டு,என் பெயரைச் சொல்லி,அவர்தானே என்று கேட்டான். நான் மிகுந்த ஆச்சரியத்துடன்,

"உங்களுக்கு என் பெயர் எப்படித் தெரியும் ? "

வினவினேன்.

."சின்ன வயசு முகச்சாடை அப்படியே இருக்கு இன்னும். என்னை தெரியாலயா உனக்கு ?. சாரி....உங்களுக்கு ?. நாந்தான் உங்க கூட பத்தாம் வகுப்பு வரை ஒன்னா படிச்ச......"

என்று அவன் பெயர் சொன்னான். என் முன்னாள் தோழன். பின்னாள் மிருகம்.

உடனே ஞாபகம் வந்தது, நிறைய மாற்றங்கள் அவனிடம். பீமசேனன் போல் இருந்தவன் குசேலனாகிருந்தான்.

"ம்.....! இப்போ தெரியுது ! நீ எப்பிடி இங்க...? அம்மா அப்பால்லாம் நல்லா இருக்காங்களா ?"

அவன் தலை தாழ்த்திக் கொண்டான். முகம் இருண்டதுப் போல் இருந்தது. சன்னமாக அழும் சப்தம் கேட்டது.

" அப்பா... நான் பத்தாம் வகுப்பு முடிக்கும் போது போய் சேர்ந்துட்டார். அப்புறம் அம்மாவையும் தங்கச்சியும் காப்பத்த நான் வேலைக்கு வந்துட்டேன். அம்மா போன வருஷம் தான் இறந்தாங்க. தங்கச்சி கல்யாணம் முடிஞ்சு புருஷனோட கள்ளக்குறிச்சில இருக்க. மூணு பசங்க. சரி..அதுல்லாம் விடுங்க. நீங்க எப்பிடி இருக்கீங்க? என்ன படிச்சீங்க? எங்க வேலை பண்ணுறீங்க? கல்யாணம் ஆயிடுச்சா?"

கேள்வி மழையில் நனைந்தேன். பதில் சொல்லத்தான் முடியவில்லை. சத்தியமாக இந்த ஒரு இடத்தில் நிலையில் இவனை மீண்டும் சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. காலம்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. தொண்டை அடைப்பதுப் போல் இருந்தது. கொஞ்சம் தண்ணீர் கேட்டேன். பாய்ந்தோடி வந்து தந்தான். குடித்து விட்டு அவனுக்கு பதிலுரைத்தேன்.

கணிணித்துறையில் குப்பை கொட்டிக்கொண்டு மணச்சிறையில் அகப்படாமல் காலம் தள்ளுவதை சுருக்கிச் சொன்னேன்.

"அன்னைக்கு நடந்தத மனசுல வச்சுகிட்டு என்ன பார்த்தா பேச கூட மாட்டீங்களோனு நினைச்சேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. நம்ம செட்டுல இருந்து நல்ல படிச்சு நீங்க முன்னேறியிருக்க பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு !."

என்னால் ஒன்றும் பேச இயலவில்லை. மழை வலுத்துக்கொண்டே இருந்தது.

" நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன்க. சின்ன வயசுல அதெல்லாம் தப்பாவே தெரியல. எனக்குத்தான் எல்லாம் தெரியும், எனக்கு எல்லாம் அடங்கி நடக்கனும்னு ரொம்ப திமிரா திரிஞ்சேன்.நல்ல நல்ல நண்பர்கள் எல்லாம் விட்டு பிரிஞ்சு போகும்போது கூட என் ஆணவம் குறயல. அப்பா போய்ட்டதுக்கு அப்பறம் என் உலகமே மாறி போச்சு. சொந்தகாரங்க யாருமே உதவல. ரொம்ப கஷ்டபட்டோம். தெனைக்கும் உட்கார்ந்து நம்ம பள்ளிக்கூடத்துல நடந்தது எல்லாம் யேசிச்சு பார்ப்பேன். ம்.......! உங்கள அன்னைக்கு அழுவ வச்சுது கூட தப்புனு அப்பறம் தான் புரிஞ்சுது. அதுக்குப்பறம் நம்ம பிரண்ட்ஸெல்லாம் ஒவ்வொருத்தர என் கிட்டேயிருந்து விலகிட்டாங்க. எத்தனையோ பேருக்கு துன்பம் கொடுத்திருக்கேன். உங்க எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேட்கணும்னு காத்துக்கிட்டே இருந்தேன். ரொம்ப நாள் கழிச்சு நம்ம ஸ்கூல் பிரண்டுனு உங்களத்தான் பார்த்தேன். என்னை மன்னிச்சுடுங்க..ப்ளீஸ் !"

அவன் கண்கள் கலங்கி குரல் உடைந்தது. கண்களிருந்து என்னையறியாமல் துளிகள் நிலம் தொட்டது.

காலம் எங்கள் கண்ணீர் துளிகளை எண்ணிக்கொண்டிருந்தது!