எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Sunday, October 31, 2004

எனக்கு பிடித்த மலையாளப் படங்கள்

"மலையாளப் படமா...? எல்லாம் ஒரு மார்க்கமா இல்லே இருக்கும்?", நான் மலையாளப் படங்களை விரும்பி பார்ப்பேன் என நண்பர்களிடம் கூறுகையில் என்னை எதிர் வந்து தாக்கும் கேள்விக்கணையிது.மலையாளப் படங்கள் யாவும் நீலச்சந்தைக்கானதல்ல. " நீலக்குயில் " போல நிறைய நல்ல படங்களும் வெளிவந்து உள்ளத்தையும் உணர்வையும் தொட்டுச் சென்றுள்ளன என அவர்களுக்கு புரியவைப்பதற்குள் போதும் என்றாகிவிடும். ஆனாலும் நான் கண்ட சில நல்ல மலையாளப் படங்களை நண்பர்களுடன் அசைப்போடுவதில் உள்ள சுகமே தனி.

M.T.V(இசை தொ(ல்)லைக்காட்சியல்ல - சீரிய எழுத்தாளர் M.T.வாசுதேவன் நாயர்), லோகிததாஸ், சீனிவாசன், பத்மராஜன், மாடம்பு குஞ்ஞுகுட்டன் போன்றோரின் அருமையான திரைக்கதையில் இயல்பான
காட்சியமைப்பிலும் இயற்கையான நடிப்பிலும் என் உள்ளம் கவர்ந்த சில மலையாள படங்களை கீழே பட்டியலிடுகிறேன் [ நண்பர்கள் "அகரதூரிகை" அருண், K.V.ராஜா அவர்களின் நீண்ட நெடுநாளைய வேண்டுகோளுக்கிணங்க ]


மூன்னாம் பக்கம்
நெஞ்சு நிறைய பாசத்துடன் தாயாய் தந்தையாய் எல்லாமுமாய் இருந்து வளர்த்த பேரன், விடுமுறை கழிக்க நண்பர்களுடன் தாத்தாவின் வீட்டிற்கு வந்து கடலில் குளிக்கச் சென்று மூன்று நாள் கழித்து வயிறு உப்பி பிணமாய் கிடைக்க, உலகமே இருண்டுப்போன தாத்தாவின் முடிவை கண்ணீரில் வடித்திருக்கும் படம்.

திலகன் தாத்தாவுக்கும் ஜெயராம் பேரனுக்கும் உள்ள அற்புதமான உறவை உள்ளத்தை உறைய வைக்குமளவு இயக்கியிருப்பார் எழுத்தாளர் - இயக்குனர் பத்மராஜன். திலகன் தாத்தாவைப் போல எனக்கு எல்லாமுமாய் இருந்து என்னை வளர்த்தவர் என் அப்பாவின் அப்பா - அருமை தாத்தா. நான் வாழ்வில் நல்ல நிலையை அடையும் முன் இவ்வுலகை விட்டு மறைந்தார். இப்படத்தை எப்போது பார்த்தாலும் என் தாத்தாவும் அவருடைய அகால மரணமும் என் நினைவை வாட்டும்.

பத்மராஜனின் மற்றும் சில நல்ல படங்கள்:-

அபரன் - ஜெயராம் அறிமுகமான படமிது, இரட்டை வேடத்தில்.

நமுக்கு பார்க்காம் முந்திரி தோப்பில் - மோகன்லால், திலகன், ரகு(மான்) நடித்தது.

தூவனத்தும்பிகள் - மோகன்லால், பார்வதி நடித்தது.


தனியாவர்த்தனம்
ஒரு அழகான கிராமத்தில் உள்ள பள்ளியில் அற்புதமான [என்னுடைய முந்தைய பதிவை படிக்கவும் ] ஆசிரியர் மம்முட்டி. இரண்டு குழந்தைகள், அழகான மனைவி சரிதா, தம்பி மூகேஷ்,தங்கை, அம்மா கவியூர் பொன்னம்மா ,(காதல் தோல்வியால்) பைத்தியமான ஒரு மாமா என அளவான குடும்பம்.அந்த குடும்ப பரம்பரையையே விடாமல் துரத்தி வருகிறது ஒரு சாபம் - மூத்த ஆண் பிள்ளைக்கு குறிப்பிட்ட வயதிற்குள் பைத்தியம் பிடித்துவிடும்.

மம்முட்டிக்கு அந்த குறிப்பிட்ட வயதை நெருங்க நெருங்க அவரைச் சுற்றி உள்ளவர்களும் வீட்டாரும் சேர்ந்து அவருக்கு எப்போது பைத்தியம் பிடிக்குமென பயந்து தெளிவாக இருப்பவரை சாங்கியங்கள் சடங்குகள் எல்லாம் செய்தும் தீராத சந்தேக கணைகளால் துளைத்தும் மனோவியாதியை கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விடுகின்றனர். உறவுகளால்
ஒதுக்கப் பட்டு, மனைவியும் பிள்ளைகளும் பிரிந்து போய் நடைப் பிணமாக வாழும் மகனை காணும் தாய், தன் பிள்ளை முழு பைத்தியமாகி சாவதை விட தன் கையாலேயே சாகட்டுமென சோற்றில் நஞ்சு கலந்து அன்பொழுக அவனுக்கு ஊட்டி " கருணைக்கொலை " செய்கிறாள்.

லோகிததாஸின் அருமையான திரைக்கதையிலும் மம்முட்டியின் அம்சமான நடிப்பிலும் சிபிமலயிலின் தேர்ந்த இயக்கத்திலும் மிளிர்ந்த படமிது.

இந்த கூட்டணியின் மற்றும் சில நல்ல படங்கள்:

பரதம் - லாலிற்கு "பரத்" விருது பெற்றுத் தந்த படமிது [P.வாசு இதை தமிழில் கார்த்திக்கை வைத்து "சீனு" என்று தமிழ்படுத்தி கொன்று இருந்தார் கதையை. சந்திரமுகிக்கு என்ன கதியோ?....[ரஜினி ரசிகர்கள் ...அடிக்க வராதீங்கபா.. :-)]

கீரிடம் - லாலின் புதிய பரிமாணத்தை வெளிக்கொணர்ந்த படமிது. அப்போ மீசை பிரிக்க ஆரம்பித்தவர் தான், இன்றுவரை " நாட்டுராஜா "வாய் தொடர்கிறார்.


அமிர்தம் கமயா
அந்த ஊருக்கு புதிதாக வந்த மருத்துவர் மோகன்லால், ஏழை பிரமாண குடும்பத்திற்கு மருத்துவம் செய்ய போகிறார். அந்த குடும்பத்தின் நிலையை கண்டு அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளும் - குடும்ப தலைவிக்கு மருத்துவ உதவி, அந்த வீட்டு பெண்களை படிக்க வைத்தல் செய்கிறார் . பிறிதொரு சந்தர்ப்பத்தில் லால் அவர்களுக்கு உதவி வருவதின் முக்கிய காரணம் அந்த குடும்பத்திற்கு தெரிய வருகிறது.

அவர்களின் ஒரே மகன் வீனித் மருத்துவ கல்லூரியில் லாலிற்கு ஜீனியராக சேருகிறான். இயல்பாகவே பயந்த சுபாவமுள்ளவனை கல்லூரியின் கலாட்டா நாயகன் லால் "ராக்கிங்" செய்கிறார். இருதயம் பலகீனமானவனை லால் உப்பு மூட்டையாகத் தூக்க வைக்கிறார். இரத்தம் கக்கி உயிர் விடுகிறார் வினீத். ["சூர்யகாயத்ரி" என்ற வேறொரு படத்தில் " ராக்கிங் " மூலம் தன் மகனைக் கொன்றவர்களை தேடிச் சென்று கொல்வர் லால்.] உண்மைத் தெரிந்த வினீதின் குடும்பம் லாலை வெறுக்கிறது - சபிக்கிறது. லால் எப்படி அந்த குடும்பத்துடன் ஒன்றானார் ? வினீதின் தங்கையுடனான அவர் காதல் என்னாவாகும் ? என்பதே மீதிக் கதை.

M.T.Vயின் இயல்பான திரைக்கதையை உணர்வு பூர்வமாய் [ மசாலாத்தனங்கள் கொஞ்சமும் எட்டிப்பார்க்காமல்] இயக்கியவர் ஹரிஹரன்.

M.T.V - ஹரிஹரன் கூட்டணியின் மற்ற சில நல்ல படங்கள்:

வைசாலி - புராண கதையின் அடிப்படையில் படைக்கப்பட்ட ஒரு இசை-காதல் காவியம்.

ஒரு வடக்கன் வீரகாதா - மலையாள பழங்கதைகளில் ஒன்றான " சதியன் சந்து " வை நல்லவனாக மாற்றி காட்டிய படமிது. மம்முட்டிக்கு " பரத் " விருது கிடைத்தது இந்த படத்தில்.

பஞ்சாக்னி - லால், கீதா நடித்தது.


பைத்ருகம்
மந்திரத்தால் மழை பெய்ய வைக்க முடியுமா ? முடியுமென சூளுரைக்கிறார் பிரமாண குருவான அப்பா[ நரேந்திர பிரசாத்]. கம்யூனிச கருத்துக்களுடன் முற்போக்குவாதியான மூத்த மகன் [சுரேஷ் கோபி] பூணூலை விட்டெறிந்து விட்டு அப்பா மற்றும் அவன் சமூகத்தின் மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிய போராடுகிறான். இவர்களுக்கு நடுவே அப்பாவின் பேச்சையும் தட்ட இயலாமல்[காதலை தியாகம் செய்து] அண்ணானையும் எதிர்க்க இயலாமல் பரிதவிக்கிறான் இளைய மகன் [ ஜெயராம்]. மத நம்பிக்கையையும் மக்கள் நம்பிக்கையையும் ஒன்றிணைக்க இயற்கை உதவுகிறது.

படத்தின் வசனங்கள் முக்கியமானவை RSS-க்கு கொஞ்சம் ஆதரவு உள்ளது போன்ற பிரமையிருந்தது. மாடம்பு குஞ்ஞுகுட்டனின் திரைக்கதையை ஜெயராஜ் இயக்கியிருந்தார். இவர்களின் கூட்டணியில் வந்த மற்றுமொரு நல்ல படம்:

தேசாடனம் - "குட்டி சாமியார்" கதை. தேசிய விருதுகள் மாநில விருதுகள் வாங்கி குவித்தது.

பவித்திரம்
திருமண வயதை நெருங்கிய மோகன்லாலின்[ திருமணம் கிட்டத்தட்ட நிச்சயமாகியிருக்கும்] அம்மா Sriவித்யா கருவுருகிறார், அப்பா திலகன். அம்மாவை பூவைப் போல் பார்த்து வருகிறான் மகன். ஒரு பெண் குழந்தையை பெற்று விட்டு அம்மா இறந்து விடுகிறாள். அப்பா மனைவி இறந்ததிற்கு அந்த குழந்தைதான் காரணமென வெறுத்து ஒதுக்குகிறார்.

லால் தாயும் தந்தையுமாய் இருந்து திருமணம் செய்து கொள்ளாமல் அந்த குழந்தையை அன்புடன் வளர்த்து எடுக்கிறார். வளர்ந்த பின் காதலில் விழுந்து லாலை எதிர்த்து பிரிந்துச் செல்லும் பெண் சில நாட்கள் கழித்து அண்ணன்சாமியிடமே வந்துச் சேர்வாள்.

தங்கையாக வளர்க்காமல் தன் மகளாய் வளர்த்து ஒரு அப்பா அம்மா செய்ய வேண்டிய அத்தனையை அவர் ஒருவரே செய்வர். லாலின் நடிப்புலக வாழ்வில் இந்த படம் ஒரு மைல்கல் எனச் சொல்வேன். மிக அற்புதமாக செய்திருப்பார். ராஜீவ் குமார் இயக்கிய இப்படத்தின் கதை யார் என்று நினைவில்லை.

சீனுவாசன் எழுதி சத்யன் அந்திக்காடு இயக்கிய பல படங்கள் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளைத் தொட்டுச் சென்று கிச்சுகிச்சு மூட்டுபவை - அதில் சில படங்கள்:-

T.P.பாலகோபலன் M.A - லால் வேலைக்காய் அல்லல் படுவது அங்கதமாய் சொல்ல பட்டிருக்கும்.

சன்மனசுள்ளோருக்கு சமாதானம் - தமிழில் சிவகுமார் நடித்து "இல்லமாய்" இல்லாமல் போயிருக்கும்.

நாடோடி காற்று - "லாலாக" பாண்டியராஜனும் "சீனிவாசனாக" சேகரும் நடித்த "கதாநாயகன்"

"தீலிப்" வகையறாக்கள் வந்த பின் மலையாளத் திரையுலகில் இயல்பான படங்கள் வெளிவருவது மிகவும் அரிதாகி விட்டது. நம்ப முடியாத கதாநாயகத்தனங்களுடன் லால், மம்முட்டி போன்றோரும் மீசை பிரித்து ரத்தம் சொட்டச் சொட்ட அடிக்கத் தொடங்கி விட்டார்கள். நடுவே "ஷகீலா" அலையில் அனைத்து நடிகர்களின் படங்களும் "பப்படங்கள்" ஆயின.பிறகு மீண்டு வந்தாலும் மசாலாத்தனங்கள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.


ஒரு காலத்தில் நல்ல அருமையான படங்கள் தந்திருந்த கமல்[இயக்குனர்] இயக்கிய "சொப்ன கூடு" என்ற படத்தை கடந்த நவம்பரில் திரையரங்கில் கண்டு அதிர்ந்து போனேன். சம்பந்தமேயில்லாமல் படத்தின் முதல் காட்சியிலேயே அனைத்து கதாபாத்திரங்களும் ஐரோப்பாவின் நகரங்களில் ஆடிப்பாடும் பாடல். கொஞ்சம் கூட "லாஜிக்"யில்லாத திரைக்கதை. எங்க போய் சொல்வேன்? என்னான்னு சொல்வேன்?


இசையைப் பற்றி கேட்கவே வேண்டாம் - அருமையான மிருதுவான கர்னாடக இசையெல்லாம் போய் இப்பொது "லஜ்ஜாவதி" ஆட்சி செய்கிறாள்.[ எனக்கு அந்த பாடல் பிடித்திருந்தாலும் சேர மண்ணிற்குரிய இசையின் மணம் அதில் இல்லாமலிருந்தது வருத்தத்தையே தந்தது]

மீண்டும் அந்த பொற்காலம் வருமோ?


பி.கு:- மேற்குறிப்பிட்ட திரைப்படங்களின் கதைச்சுருக்கத்தை என் நினைவிலிருந்து எழுதியுள்ளேன், பிழையிருந்தால் சு(ட்டிக்காட்)டுங்கள்.... :-)


புதுவைக்கு வாங்க....ஆனா "அடிக்காதீங்க"

தலைப்பை பார்த்து பல "குவாட்டர் "கள் விட்ட மாதிரி " கிர் "ன்னு இருக்கா...? அதுதான்...அதேதான்....புதுவைக்கு வாங்க......ஆனா "தண்ணி " அடிக்காதீங்கன்னு சொல்ல வந்தேன். " நான் பாண்டிச்சேரியிலிருந்து வர்றேன்"னு சொன்ன உடனேயே, மக்கள் " நக்கலாய் " பார்த்து, " அப்ப தண்ணி போடுவியா கண்ணு..? "னுதான் பேச்சே ஆரம்பிக்கிறார்கள். உண்மைதான்.. புதுவையில் மற்ற மாநிலங்களை விட " குடி"ப்பொருள்களுக்கு விலை " சல்லிசு "தான்.அதனால் அந்த பிரதேசத்தார் அனைவருமே "தண்ணி"யடிப்பவர்கள்தான் என நினைப்பது எந்த விதத்தில் ஐயா நியாயம்?.

அரசின் " வண்டி " ஓட " இந்த " வருமானத்தைத் தான் பெரிசாக நம்பியுள்ளார்கள்.சில காலங்களில் தற்காலிமாக " தடை " கொண்டு வந்தாலும், விடிவதற்குள்ளே அவற்றிற்கு விடுதலை கிடைத்துவிடும்.சனி ஞாயிற்று தினங்களில் பக்கத்து ஊர்களிருந்து[திண்டிவனம்,சென்னை,கடலூர்,விழுப்புரம்] " குடி "மக்கள் திருவிழா கணக்காய் வந்து குவிந்து விடுவார்கள்.ஒரு வாரத்திற்கான சரக்கை ஒட்டகத்தைப் போல இரண்டே நாட்களில் குடித்து நிரப்பி வீடு போய்ச் சேர்வர்(?).

மானிட சாதியில் பிறந்த பல ஐந்தறிவு உயிர்கள் உலகம் மறந்து உடை மறந்து கிடக்குமிடம் [சாக்கடையாயினும்] மறந்து உருண்டு கிடக்கும் அந்த "சாரயச்சாலை "களை கடக்கையில் மனித படைப்பின் அர்த்தங்கள் அங்கே அழுகிக்கொண்டிருப்பதுப் போல் தோன்றும்.

எத்தனை பெண்களின் தாலிகள் அங்கே பாட்டில்களாய் உடைப்பட்டனவோ? எத்தனை தாய்களின் சுருக்கு பைய்கள் அங்கே உறுகாயாகவும் ஆம்லேட்டாகவும் உருப்பெற்றனவோ? எத்தனை பிள்ளைகளின் பள்ளி கட்டணங்கள் அங்கே சோடாவாக கலக்கப்பட்டனவோ?

எழுதவே கூசுகிறது, என் குடும்பத்தில் குடிக்காத ஆண்மக்களே இல்லை.சேர மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்லி கம்யூனிசத்தையும் கள்ளையும் ஒரு சேர அரைத்து " குடி "த்தவர்களாகயிருந்தனர். புதுவை வந்த பின் கேட்கவே வேண்டாம். மாதச் சம்பளத்தில் முக்கால்வாசியை மது வியாபரிகளுக்கே தவணை முறையில் சேவித்து கொண்டிருந்தனர்.அம்மாவும் அத்தைகளும் சித்திகளும் இவர்களிடம் படாத துன்பங்களேயில்லை. ஆனாலும் அவர்கள் "காலில் " சுற்றியுள்ள பாம்புகளின் நச்சுத்தனமான தீண்டல்களினால் உயிர் உதிரச் செய்யாமல் உள்ளம் திடப்படுத்தி எங்களை வளர்த்தெடுத்து இன்று நல்ல நிலைக்கு ஆளாக்கியுள்ளனர்.

சின்ன வயசிலிருந்தே அந்த கேள்வி குடைந்து கொண்டிருக்கிறது. இவர்கள் ஏன் குடிக்கிறார்கள் ? குடித்தபின் ஏன் பெண்டு பிள்ளைகளை அடித்து துவைக்கிறார்கள். என்னதான் சாதிக்க வேண்டும் இவர்களுக்கு? குடல் சுருங்கி ஈரல் அழுகி சிறுநீரகம் கெட்டு சீக்கிரம் பரலோகம் போக வேண்டுமானால் போகட்டுமே.....ஏன் மற்றவர்களின் உயிரை தவணை முறையில் இப்படி கொல்ல வேண்டும்?

இன்றைய தலைமுறைகள் குளிருக்கும் ஜாலிக்காகவும் உடல் பெருக்க வைக்கவும் முகத்தை மிளிர வைக்கவும் உயர்நிலை சமுதாயத்தில் தலை உயர்த்தி நடக்க ஒரு சடங்கிற்காகவும் இன்னும் பல "அரிய" காரணங்களுக்காய் " பீர் "லிருந்து [" சும்மா...பச்ச தண்ணி மாதிரிப்பா...ஒண்ணும் பண்ணாது "] ஆரம்பித்து ரம், விஸ்கி, பிராந்தி, வோட்கா[டக்கிலா] மற்றும் பல சரக்குகளடித்து போனத் தலைமுறைக்கு நாங்கள் ஒண்ணும் குறைந்தவர்களல்ல என்பதை நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள்."குடி குடியை கெடுக்கும் " என்பது அரசு விளம்பரத்திற்காக எழுதப்பட்ட கவர்ச்சி வாசகமல்ல. அது எந்த மாதிரி "குடி"யாக இருந்தாலும் நிச்சயமாய் குடியை கெடுக்கும் - என் அனுபவத்தில் அறிந்தது.

சினிமா மற்றும் தொ(ல்)லைக்காட்சியின் பங்களிப்பை பற்றிச் சொல்லவே வேண்டாம். குடிப்பதும் புகைப்பதும்தான் கதைத்தலைவனின் ஆண்மையை வெளிக்காட்டும் என கொஞ்சம் கூட பொறுப்பின்றி காட்டுகின்றனர். அவர்களைக் கேட்டால், " கோழியிலிருந்து முட்டை வந்துச்சா, முட்டையிலிருந்து கோழி வந்துச்சா? " என சமூகத்தை சுட்டி காட்டுவார்கள். இந்த சேவல்கள் மிதித்து சாவதென்னவோ கோழிகளும் குஞ்சுகளும்தான்!.

என் பள்ளிப்பருவத் தோழி ஒருத்தியின் தந்தை குடித்தே இறந்து போக, அவள் வீட்டிற்குச் சென்றேன். அம்மாவும் பாட்டியும் அழுது புரண்டிருக்க அவள் மட்டும் சும்மாதிருந்தாள். முகத்தில் என்றுமில்லாத மகிழ்ச்சியுடன், "இனிமேதான் எங்கம்மா சந்தோஷமாக இருப்பாங்க, யாருக்கும் இனிமே அடி உதையெல்லாம் கிடைக்காது. நாங்க நல்லா நிம்மதியா தூங்கலாம் " என்றாள்.

உங்கள் பிள்ளைகளும் மனைவியும் நிம்மதியாக வாழ வேண்டுமானால், "அடிக்காதீர்கள் " (அல்லது) நிறைய " அடித்து " சீக்கிரம் " இடத்தை " காலி செய்யுங்கள். அவர்களும் வாழ வேண்டும் !

புது(வை)ச்சேரி


பாரதியின் "குயில் தோப்பு", பாரதிதாசனின் "குடும்ப விளக்கு", கி.ராவின் கரிசல் கதைகள், பிரபஞ்சனின் "இனியோரு விதிசெய்வோம்" இப்படி எண்ணற்ற காவியங்கள் உருவான பூமியிது.

எழில் கொஞ்சும் கடற்கரை, பச்சை பாரதி பூங்காவிற்கு நடுவே வெள்ளையாய் ஆழி மண்டபம், அமைதி தரும் அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் தியான மண்டபம், அறிவு தரும் ரோமன் ரொலண்ட் நூலகம், ஆன்மிக பலம் தரும் மணக்குள விநாயகர் ஆலயம், பெரிய மரங்களுடன் இனிய பறவைகளுடன் கூடிய "செங்கந்தோட்டம்" எனப்படும் அறிவியற் பூங்கா, படகோட்டி இனிய மாலை கழிக்க சுண்ணாம்பு ஆறு, குடி நீர் வழங்கும் ஊசுடு ஏரி, கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் பல நடைப்பெறும் கம்பன் கலையரங்கம், "வாழும் காமராசராய்" முதல்வர் ரங்கசாமி - என்ன இல்லை இந்த பிரஞ்சு கலாச்சாரத்தின் சாளரத்தில்.












பாரதியின் குயில் தோப்பு அழிக்கப்பட்டு அங்கு பட்டா போடப்பட்டு விட்டதாம். நான் விளையாடித் திரிந்த கடற்கரையல்ல இன்று அது - பெயரளவில் கரையோடுயிருக்கிறது [ நிறைய கறைகளோடும்..]

பாரதி பூங்காவின் எதிரேயே அரசின் மகப்பேறு மருத்துவமனை, அதனால் இன்று பூங்காவில் மக்களின் தலைகள்தான் எங்கும் முளைத்திருக்கிறது. அவர்கள் தின்று எறியும் உணவு கழிவுகளின் "வாசனையுடன்".

ஆசிரமம் என்று பெயர் வைத்தாலே பிரச்சனை வரும் போல..அரவிந்தரின் இருப்பிடம் இன்று "பாலியல்" வழக்கில்.


நான் படிக்கையில் ஒரே ஒரு பொறியியற் கல்லூரிதான் இருந்தது - இன்றோ ஐந்து. பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தவர் யாராயினும் கொஞ்சம் மதிப்பெண்களும் நிறைய பணமும் இருந்தால் "பொறியாளர்" ஆகிவிடலாம். இதுதான் முன்னேற்றமோ ?


அரசு வருவாயை பெருக்க படப்பிடிப்பிற்கு குறைந்த கட்டணம் வசூலித்து தென்னிந்திய தயாரிப்பாளர்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது. ஆரோவில் அருகே செம்மண் மலைக்குன்றுகளுடன் "பொம்மையார் பாளையம்" என்ற ஊர் இருக்கிறது. அங்குதான் "ஆரிய உதடுகளிலிருந்து அழகிய தீயே வரை" சுட்டு தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். மீரா ஜாஸ்மின் பாரதி பூங்காவின் வழியே மிதிவண்டியோட்டி குஞ்சாக்கோ போபனிடம் பூச்செண்டு கொடுக்கிறார் - "சொப்ன கூட்டில்".


நேரு வீதியில் வாகனத்திலும் " நட"ராசாவாகவும் போவதற்கு வித்தை தெரிந்திருக்க வேண்டும், நீங்களே விலகிச் சென்றாலும் யாரேனும் வந்து மோதுவார்கள். அதுவும் "சன்டே மார்க்கெட்" என்று ஞாயிறு அன்று ஒரு கூத்து நடக்கும். பொருட்கள் விலை மலிவாக கிடைக்கிறதோ இல்லையோ "இடி"கள் இலவசமாகவே கிடைக்கும். நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டேதான் வருகிறது.


தண்ணீர் பஞ்சம் என்ற வார்த்தையே நான் புதுவையில் வாழ்ந்தவரை கேட்டதில்லை. ஆனால், இன்று கோடைக்காலத்தில் எல்லா நகரங்களையும் நரகங்களாய் மற்றும் "அது" புதுவையையும் விட்டு வைக்கவில்லை. ஆனாலும் "தண்ணீர்" லாரிகளில் வினோயகம் செய்யுமளவிற்கு நிலைமை மோசமகாவில்லை.


பிரச்சனைகள் இருப்பதுதானே வாழ்க்கை. ஆனாலும் புதுவை மக்கள் இன்று உள்ளம் குளிர இருக்கிறார்கள் என்றால் அதற்கு முழு முதற் காரணம் நான் முதற் பத்தியில் கடைசி வரியில் குறிப்பிட்டவர்தான். ஏழை எளியவர் என்று பாராமல் எல்லா மக்களின் குறைகளை அறிந்து முயன்றளவு தீர்த்து வைக்கிறார். அவர் தொகுதியில் வாழும் அனைத்து மக்கள் வீட்டின் நல்ல/அசுப காரியங்களுக்குச் சென்று அவர்களுக்கு வாழ்த்தும்/அரவணைப்பும் வழங்குகிறார். [ எங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினார்]




கடந்த பல நாட்களாய் புதுவையில் நல்ல மழை....உண்மைதான் போலிருக்கிறது - "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை"

புகைப்படங்களுக்கு நன்றி:

http://pondicherry.nic.in

http://www.jorgetutor.com

http://www.india-picture.com

http://www.1upindia.com

http://www.india-picture.com

http://www.tourism-in-india.com

http://www.blonnet.com

http://www.realyoga.ru/


வலைப்பூவிற்குள் மழை

வானிலை அறிக்கை: தமிழகம் மற்றும் சியாட்டல் மாநிலங்களில் கடந்த பல நாட்களாய் அடித்து வந்த மழைச்சாரல் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு வலைப்பூவிலும் இடியுடன் அல்லது செல்லமான புயலுடன் மிதமாகவோ அல்லது அடைமழையாகவோ பெய்ய(பொய்க்கவும்?) கூடும் என தமிழ்மணம் ஆய்வு மையம் இதன் மூலம் அறிவிக்கின்றது.

"மீனாக்ஸ்"காரர்கள்....மன்னிக்கவும் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க போக வேண்டாம் என்றும், மீறிப் போனால் நீங்கள் கருவாடாகி விடுவீர்கள் என்றும் இதன் மூலம் எச்சரிக்கை விடப்படுகிறது [சும்மா....தமாசு....:-)].

இந்த மழைச்சாரலை குடை பிடித்தோ நனைந்து கொண்டோ ஜன்னல் ஓரம் அமர்ந்து சூடான டீயை உறிஞ்சிக்கொண்டோ ரசிக்க விரும்புபவர்கள் அனைவருக்கும் வணக்கம்!.உங்களை குளிர்வித்தாலும் அல்லது ஜலதோஷம் வரவழைத்து துன்பித்தாலும் மேகத்தில்[பின்னூட்டத்தில்] தூது விடுங்கள்.

வலைப்பூவின் (முதல்) நட்சத்திரமாய் "ஜக்குபாய்" ரஜினியின் மருமகன் சுள்ளானைப் போல அதிரடியாய் கலக்கிச் சென்றிருக்கிறார் பிருந்தாவனத்தவர். பயமாகத்தான் இருக்கிறது, இந்த கேமரா வெளிச்சம் நமக்கு புதுசு பாருங்க. முடிஞ்சளவிற்கு சொதப்பாமல் நடிக்கிறேன். ரசிக மன்றங்கள் எல்லாம் வைக்க வேண்டாம் [ ரொம்ப முக்கியம் :-)], அடிக்க "வண்டி" அனுப்பாமல் இருந்தால் போதும்[:-)]

இயக்குனரும்[காசி] casting இயக்குனரும்[மதி] நான் வெட்டியாய் பேட்டி கொடுத்துக்கொண்டிருப்பதை பார்த்து முறைக்கிறார்கள்[:-)].

அதனால்......மீதியை வெள்ளித்திரையில் காண்க! [ திருட்டு விசிடியில் அல்ல..]

START CAMERA....ACTION...!

Friday, October 29, 2004

போடுங்கம்மா/ய்யா ஓட்டு

யாருக்கு ஓட்டளிக்க வேண்டுமென அறிவுபூர்வமாகத் தீர்மானிக்க: உங்கள் ஓட்டு யாருக்கு?

ஓட்டுரிமையில்லையெனினும் என் கருத்துக்களுக்கேற்ப தேர்ந்தெடுத்த போது கிடைத்த முடிவு:

22% Bush
45% Kerry
33% Nader

Note: Your results are based on profiles of the three candidates (i.e. how they stand on issues, stances, budget) from the general population OR from the parties selected under “Based on Viewpoints from:"

Friday, October 22, 2004

இது எப்படி இருக்கு?

இந்த வார அரசு பதிலில்..

என்.கோகுலநாதன்,சேலம்.
வீரப்பன் எங்கே?

ஐயா ஏதோ வேலையில் ‘பிஸி’யாக இருக்கிறார் என்று அர்த்தம். போரடித்தால் அவரே தலைப்புச் செய்திக்கு வருவார்.

Wednesday, October 20, 2004

சிறுவனும் பட்டமும்

" வானத்தின் உயரத்தில் ஒரு பட்டம் பறந்துக் கொண்டிருந்தது.கீழேயிருந்து ஒரு சிறுவன் மிக ஆவலுடன் அந்த பட்டத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான். பட்டம் உயர உயரப் பறந்தது. சிறுவனுக்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி.

அப்போது பட்டத்தின் அருகே ஒரு கிளி பறந்து வந்தது. கிளி பட்டத்தைப் பார்த்து," எப்படி இவ்ளோ அழகாக சேர்வில்லாமல் உசரமாய் பறக்கிறாய்? ரொம்ப பொறாமையாக இருக்கிறது உன்னைப் பார்த்து!"என்றது. அதற்கு பட்டம், "ப்பூ....இதென்ன பிரமாதம்!. அதோ தெரிகிறானே அந்த சிறுவன், அவன் மட்டும் அந்த சரடை விட்டு விட்டால், நான் மேலும் சுதந்திரமாக மேலே மேலே பறப்பேன். அவன் கட்டுப்பாடுதான் என்னை தளர்த்துகிறது."

கிளி உடன்," நான் அந்த சரடைக் கொத்தி அறுத்து தருகிறேன். நீ உயரே பற" என்றது. பட்டமும் மிக்க மகிழ்ச்சியுடன் வாலை அசைத்தது.கிளி அச்சிறுவன் பிடித்திருந்த சரடை அறுத்து விட்டது. அதுவரை சிறுவனின் கட்டுப்பாட்டில் உயர உயர எழும்பிய பட்டம் நிலை தடுமாறி காற்றால் அலைக்கழிக்கப் பட்டு கீழே வேகமாக வந்து மழைக்காலச் செம்மண் சாலையின் சேற்றில் வீழ்ந்தது. அதைக் கண்ட அந்த சிறுவன் மனம் தாளமாட்டாமல் தேம்பித்தேம்பி அழுதான்.

குழந்தைகளே! அந்த பட்டம்தான் நீங்கள்!. கீழேயிருந்து உங்களை உயர உயர ஏற்றி விட்டு மகிழ்ச்சி கொள்ளும் சிறுவந்தான் உங்கள் ஆசிரியராகிய நான்!. உங்களைப் பிணைத்திருக்கும் சரடு என்னும் கட்டுப்பாடு என்றுமே உங்கள் உயர்வுக்குத்தான் வழி வகுக்கும். ஆனால், அந்த மெல்லிய காட்டுப்பாட்டின் கனம் கருதி நீங்கள் அதை அறுத்து என்னை விட்டு விலகிச் சென்றால் அதனால் உங்களுக்கு வரும் துன்பங்களைக் கண்டு கண்ணீர் உகுக்கும் முதல் ஜீவன் உங்கள் அன்பிற்குரிய ஆசிரியன் நாந்தான். எனவே, என்னையும் சிறுச்சிறு கட்டுப்பாட்டையும் என்றுமே உதறிச் செல்லாதீர்!".


இது "தனியாவர்த்தனம்" என்னும் மலையாளத்திரைப்படத்தில் ஆசிரியராய் வரும் மம்முட்டி அவர் மாணக்கர்களுக்கு கூறும் அறிவுரை. பிரபல திரைக்கதாசிரியர் லோகிததாஸ் [ ஆமாம்....அவரேதான்...தற்போது மீரா ஜாஸ்மினுடன் கிசுகிசுக்கப் படும் "GODFATHER" ] எழுதியது. ஜீனியர் விகடனில் இந்தச் செய்தியை படித்ததும் சட்டெனத் நினைவில் வந்தது.


வீசும் காற்றின் சாரமறிந்து அளவான கண்டிப்புடன் எனக்கு அறிவு புகட்டி வானின் உயரே உயரே ஏற்றி விட்ட நல்லாசிரியர்/யை-கள் அனைவரையும் நினைத்துப் பார்த்து நன்றி நவில்கிறேன்!!.


ஒரு மகளின் குரல்

"அப்பாவுக்கு என்னை ரொம்ப புடிக்கும்னு அம்மா சொல்லியிருக்கு. நான் ரொம்பச் சின்ன வயசில இருக்கும்போது வந்து பார்த்திருக்கிறாராம். "மகாலச்சுமியாட்டம் இருக்கா"னுச் சொல்லி சந்தோசமா போனாராம்.

அப்பாவை நான் போட்டோவில்தான் பார்த்திருக்கேன். பாவம் அவர் கண்ணெல்லாம் குழி விழுந்து(புறை விழுந்துச்சுனு சொல்றாங்க) ரொம்பவே மாறிப் போய்ட்டார்.

அவர் ஏன் மத்தவங்கள கொன்னார்? அவரை ஏன் கொன்னாங்க? எதுவும் புரியல. ஆனா, தெரிஞ்சுப்பேன். அம்மா கிட்டே கேட்ட எப்பவும் அழுதுக்கிட்டு போய்டுவாங்க. ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. வேற யார்கிட்ட கேட்கனும்னு புரியல.

நான் நல்லா படிப்பேன் சார். எங்க டிச்சரை வேணும்னா கேட்டுப் பாருங்க. என்னை இந்த ஸ்கூலே விட்டு அனுப்பாதீங்க சார். எங்க அப்பா செஞ்ச தப்புக்கு என்னை ஏன் தண்டிக்கிறீங்க சார் ?

இதுவரைக்கும் யாருக்கும் தெரியாம எப்படி படிச்சுக்கிட்டு இருந்தேனோ அப்படியே இருக்க விடுங்க சார்.

என் ஆசையெல்லாம் நல்லா படிச்சு என் அம்மாவை நல்ல படியா பார்த்துக்கணும்னுதான். "


அவள் கனவினை கலைத்து விடாதீர்கள் !

பி.கு:- இது ஒரு கற்பனைக் குரல்.

Thursday, October 14, 2004

அம்மா ஒரு கொலை செய்தாள்

நான் பிறப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெளியான கதையை இன்று தான் படித்தேன். படித்த பின் வெகு நேரத்திற்கு மனதில் ஏதோ பாரம் ஏற்றி வைத்தது போல் இருக்கிறது. கண்ணீர் வராமல் கண்கள் எரிகின்றன, தெண்டை வலிக்கிறது. புனைக்கதை தான், ஆனாலும் அந்த "கருப்பி"யின் நிலையில் என்னை நிறுத்தி பார்த்து வாசித்த மனம் பதறுகிறது.

அவள் விரும்பியது எல்லாம் ஆறுதலான சில வார்த்தைகள், மெல்லிய அரவணைப்பு, மனசுக்கும் மலர்ச்சி தரக்கூடிய ஒரு விளக்கம் அவ்வளவே!. அதுவும் மென்மையாக இருக்க வேண்டிய "அந்த" பொழுதில் அதுவரை எல்லாமே "அழகு" என செல்லம் தந்த தாயிடமிருந்து சுடு சொற்களாய் வந்து விழ அந்த மலர் மட்டுமல்ல, நானும் கருகித்தான் போனேன்.

எத்தனை வில்லங்கமான கேள்விகள் கேட்டாலும் அன்பொழுக சின்னச் சின்ன கிண்டலுடனும் எளிய விளக்கங்களுடனும் ஐயங்களையும் பயங்களையும் தீர்த்த என்னுயிர் தோழி - எந்தாயை நினைத்து பார்த்து மனம் நன்றி சொல்லியது.


அம்பை ! .....சத்தியமாய்.. கொன்னுட்டீங்க போங்க !

[ "சிறகுகள் முறியும்" - சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது இக்கதை ]

Tuesday, October 12, 2004

ஜெயலட்சுமி என்றால்..

என் கணவர் டி.வியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தார். ஒளிபரப்பில் கோளாறா, எங்கள் டி.வியில் பிரச்னையா தெரியவில்லை, படம் சரியாக தெரியவில்லை. உடனே அவர் "என்னவோ தெரியலை... கொஞ்ச நாளா செய்தி போடற நேரமாப் பார்த்து டி.வி. மக்கர் பண்ணுது’’ என்றார்.
அப்போது அங்கிருந்த என் பேத்தி "ஜெயலட்சுமி நியூஸ்ல வந்தாலே, டி.விக்கும் நடுக்கம் வந்துடுது தாத்தா... போலீஸ்காரங்க மாதிரி! " என்று சொல்ல, நாங்கள் சிரித்த சிரிப்பு இருக்கே!


சரஸ்வதி ராசேந்திரன், மன்னார்குடி.

இது அவள் விகடனில் வெளியான வாசகி அனுபவம் - அந்த சிறுமியின் சமயோசித புத்தியை நினைத்து சிரிப்பதா? இல்லை, நம் செய்தி நிறுவனங்கள் பிஞ்சு மனதில் விளைவிக்கும் செய்திகளின் தரத்தினை நினைத்து வருந்துவதா?

Thursday, October 07, 2004

மாற்ற முடிந்தால்..

இந்த வார தமிழோவியத்தில் "நாங்க ரெடி நீங்க ரெடியா ?" பகுதியில் நான் மாற்ற விரும்பும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. பிரசுரித்த கணேஷ் சந்திராவிற்கு நன்றி !

Tuesday, October 05, 2004

பிரிவு என்பதே உறவுக்காகத்தான்..(H4 Visa Issue)

கடந்த 5 வார காலமாக என் துணையைப் பிரிந்து இருக்கின்றேன். காரணம் - H4 விசாவிற்காக நேர்முகத் தேர்வில் சென்னை விசா அலுவலகத்தில் எங்கள் திருமண பதிவு சான்றிதழ் பற்றி கேட்கப் பட்ட சில கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்கள் அளிக்க முடியாததால், 221(g) படிவம் வழங்கப் பட்டு "Your case requires additional administrative processing.Once the process is complete, this office will contact you with further instructions." எனச் சொல்லி அனுப்பி விட்டார்கள்.


யாகூ குழுமத்திலும் மற்ற விசாப் பற்றிய இணையத்தளங்களிலும் இதுப்பற்றித் தேடினால், சென்னை அலுவலகத்திலிருந்து தகவல் வர எட்டு முதல் பத்து வாரங்கள் வரை ஆகும் என்று ஒரு சாராரும் இல்லை..இல்லை...மாத கணக்கில் ஆகும் என வேறு சாராரும் கருத்துக்கள் கூறி குழப்புகிறார்கள். மண்டை காய்கிறது!.

நம் வலைப்பதிவு நண்ப/பிகளுக்கு யாருக்கேனும் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா? முக்கியமாக எத்துனை காலம் நீங்கள் தகவலுக்காக காத்திருந்தீர்கள் என்பதையும் முடிந்தால் கொஞ்சம் விலாவாரியாக உங்கள் அனுபவத்தையும் பின்னூட்டத்தின் வழியாகவோ அல்லது மின்மடல் ( rsubbulatchoumi@hotmail.com ) வழியாகவோ பகிர்ந்து கொண்டால் மிகவும் மகிழ்வேன்.


ஒரு சிலர் சென்னையில் ஒரு நல்ல குடிநுழைவு வழக்கறிஞரை அணுக அறிவுறுத்துகிறார்கள். இன்னும் ஒரிரு வாரங்களில் ஏதும் நடக்கவில்லை எனின், அணுகலாம் என்று நினைக்கின்றோம்.

நீங்க என்ன நினைக்கிறீங்க ?