புது(வை)ச்சேரி
பாரதியின் "குயில் தோப்பு", பாரதிதாசனின் "குடும்ப விளக்கு", கி.ராவின் கரிசல் கதைகள், பிரபஞ்சனின் "இனியோரு விதிசெய்வோம்" இப்படி எண்ணற்ற காவியங்கள் உருவான பூமியிது.
எழில் கொஞ்சும் கடற்கரை, பச்சை பாரதி பூங்காவிற்கு நடுவே வெள்ளையாய் ஆழி மண்டபம், அமைதி தரும் அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் தியான மண்டபம், அறிவு தரும் ரோமன் ரொலண்ட் நூலகம், ஆன்மிக பலம் தரும் மணக்குள விநாயகர் ஆலயம், பெரிய மரங்களுடன் இனிய பறவைகளுடன் கூடிய "செங்கந்தோட்டம்" எனப்படும் அறிவியற் பூங்கா, படகோட்டி இனிய மாலை கழிக்க சுண்ணாம்பு ஆறு, குடி நீர் வழங்கும் ஊசுடு ஏரி, கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் பல நடைப்பெறும் கம்பன் கலையரங்கம், "வாழும் காமராசராய்" முதல்வர் ரங்கசாமி - என்ன இல்லை இந்த பிரஞ்சு கலாச்சாரத்தின் சாளரத்தில்.
பாரதியின் குயில் தோப்பு அழிக்கப்பட்டு அங்கு பட்டா போடப்பட்டு விட்டதாம். நான் விளையாடித் திரிந்த கடற்கரையல்ல இன்று அது - பெயரளவில் கரையோடுயிருக்கிறது [ நிறைய கறைகளோடும்..]
பாரதி பூங்காவின் எதிரேயே அரசின் மகப்பேறு மருத்துவமனை, அதனால் இன்று பூங்காவில் மக்களின் தலைகள்தான் எங்கும் முளைத்திருக்கிறது. அவர்கள் தின்று எறியும் உணவு கழிவுகளின் "வாசனையுடன்".
ஆசிரமம் என்று பெயர் வைத்தாலே பிரச்சனை வரும் போல..அரவிந்தரின் இருப்பிடம் இன்று "பாலியல்" வழக்கில்.
நான் படிக்கையில் ஒரே ஒரு பொறியியற் கல்லூரிதான் இருந்தது - இன்றோ ஐந்து. பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தவர் யாராயினும் கொஞ்சம் மதிப்பெண்களும் நிறைய பணமும் இருந்தால் "பொறியாளர்" ஆகிவிடலாம். இதுதான் முன்னேற்றமோ ?
அரசு வருவாயை பெருக்க படப்பிடிப்பிற்கு குறைந்த கட்டணம் வசூலித்து தென்னிந்திய தயாரிப்பாளர்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது. ஆரோவில் அருகே செம்மண் மலைக்குன்றுகளுடன் "பொம்மையார் பாளையம்" என்ற ஊர் இருக்கிறது. அங்குதான் "ஆரிய உதடுகளிலிருந்து அழகிய தீயே வரை" சுட்டு தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். மீரா ஜாஸ்மின் பாரதி பூங்காவின் வழியே மிதிவண்டியோட்டி குஞ்சாக்கோ போபனிடம் பூச்செண்டு கொடுக்கிறார் - "சொப்ன கூட்டில்".
நேரு வீதியில் வாகனத்திலும் " நட"ராசாவாகவும் போவதற்கு வித்தை தெரிந்திருக்க வேண்டும், நீங்களே விலகிச் சென்றாலும் யாரேனும் வந்து மோதுவார்கள். அதுவும் "சன்டே மார்க்கெட்" என்று ஞாயிறு அன்று ஒரு கூத்து நடக்கும். பொருட்கள் விலை மலிவாக கிடைக்கிறதோ இல்லையோ "இடி"கள் இலவசமாகவே கிடைக்கும். நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டேதான் வருகிறது.
தண்ணீர் பஞ்சம் என்ற வார்த்தையே நான் புதுவையில் வாழ்ந்தவரை கேட்டதில்லை. ஆனால், இன்று கோடைக்காலத்தில் எல்லா நகரங்களையும் நரகங்களாய் மற்றும் "அது" புதுவையையும் விட்டு வைக்கவில்லை. ஆனாலும் "தண்ணீர்" லாரிகளில் வினோயகம் செய்யுமளவிற்கு நிலைமை மோசமகாவில்லை.
பிரச்சனைகள் இருப்பதுதானே வாழ்க்கை. ஆனாலும் புதுவை மக்கள் இன்று உள்ளம் குளிர இருக்கிறார்கள் என்றால் அதற்கு முழு முதற் காரணம் நான் முதற் பத்தியில் கடைசி வரியில் குறிப்பிட்டவர்தான். ஏழை எளியவர் என்று பாராமல் எல்லா மக்களின் குறைகளை அறிந்து முயன்றளவு தீர்த்து வைக்கிறார். அவர் தொகுதியில் வாழும் அனைத்து மக்கள் வீட்டின் நல்ல/அசுப காரியங்களுக்குச் சென்று அவர்களுக்கு வாழ்த்தும்/அரவணைப்பும் வழங்குகிறார். [ எங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினார்]
கடந்த பல நாட்களாய் புதுவையில் நல்ல மழை....உண்மைதான் போலிருக்கிறது - "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை"
புகைப்படங்களுக்கு நன்றி:
http://www.tourism-in-india.com
3 Comments:
kummu..namma mannoda makimai ulgelAm parava neenga eduthukitta muyarchikku nandri..
Iyaa raasu kutty..pudhuvai mannai patrri ennum neriya ezuthunkalaen
அனுப்புநர்: வாசன்>>பாரதியின் குயில் தோப்பு அழிக்கப்பட்டு அங்கு பட்டா போடப்பட்டு விட்டதாம்இதுபோலவே 70களின் கடைசி வருடங்களில் கோரிமேடு போகும் சாலைக்கு வடக்கே அழகுடன் இருந்த தென்னந்தோப்பை அழித்து பாலாஜி தியேட்டர் கட்டினார்கள்.
சிறுவயதில் பாண்டிக்கு விடுமுறையில் அடிக்கடி சென்ற போது என்னை பெரிதும் கவர்ந்த இடங்கள் பாலபவன்,அருகிலிருக்கும் மீன் காட்சியகம்.
ரத்னா தியேட்டர் மறக்கமுடியாது.
ஒருமுறை அனுமதி இன்றி கடல் மேற்பாலத்தில் (jetty) நானும் எனது அத்தை மகனும் நுழைந்துவிட்டு திரும்பிய போது,காவல்காரன் பிடித்துக் கொண்டார்! அவரிடம் நாங்கள் யார் தெரியுமா,கப்பலில் வரும் ஆட்களுக்கு மருத்துவம் செய்யும் மருத்துவரின் உறவினர்கள் என வீராப்பாக பேச...2 தோப்புகரணம் போட்டால்தான் வெளியே விடுவேன் அந்த ஆள் மிரட்ட ஒருவழியாக பிழைத்து ஓடிவந்தோம் ;(
மனதை விட்டு அகல மறுக்கும் ஊர்.தில்லைமேஸ்திரி தெருவில் உறவினர்கள் குடியிருந்த காலத்தில், அருகிலிருந்த அந்த காலத்து பெரிய வீடுகள் பிரமிப்பாய் இருக்கும்.
நன்றி.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home