எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Sunday, October 31, 2004

புதுவைக்கு வாங்க....ஆனா "அடிக்காதீங்க"

தலைப்பை பார்த்து பல "குவாட்டர் "கள் விட்ட மாதிரி " கிர் "ன்னு இருக்கா...? அதுதான்...அதேதான்....புதுவைக்கு வாங்க......ஆனா "தண்ணி " அடிக்காதீங்கன்னு சொல்ல வந்தேன். " நான் பாண்டிச்சேரியிலிருந்து வர்றேன்"னு சொன்ன உடனேயே, மக்கள் " நக்கலாய் " பார்த்து, " அப்ப தண்ணி போடுவியா கண்ணு..? "னுதான் பேச்சே ஆரம்பிக்கிறார்கள். உண்மைதான்.. புதுவையில் மற்ற மாநிலங்களை விட " குடி"ப்பொருள்களுக்கு விலை " சல்லிசு "தான்.அதனால் அந்த பிரதேசத்தார் அனைவருமே "தண்ணி"யடிப்பவர்கள்தான் என நினைப்பது எந்த விதத்தில் ஐயா நியாயம்?.

அரசின் " வண்டி " ஓட " இந்த " வருமானத்தைத் தான் பெரிசாக நம்பியுள்ளார்கள்.சில காலங்களில் தற்காலிமாக " தடை " கொண்டு வந்தாலும், விடிவதற்குள்ளே அவற்றிற்கு விடுதலை கிடைத்துவிடும்.சனி ஞாயிற்று தினங்களில் பக்கத்து ஊர்களிருந்து[திண்டிவனம்,சென்னை,கடலூர்,விழுப்புரம்] " குடி "மக்கள் திருவிழா கணக்காய் வந்து குவிந்து விடுவார்கள்.ஒரு வாரத்திற்கான சரக்கை ஒட்டகத்தைப் போல இரண்டே நாட்களில் குடித்து நிரப்பி வீடு போய்ச் சேர்வர்(?).

மானிட சாதியில் பிறந்த பல ஐந்தறிவு உயிர்கள் உலகம் மறந்து உடை மறந்து கிடக்குமிடம் [சாக்கடையாயினும்] மறந்து உருண்டு கிடக்கும் அந்த "சாரயச்சாலை "களை கடக்கையில் மனித படைப்பின் அர்த்தங்கள் அங்கே அழுகிக்கொண்டிருப்பதுப் போல் தோன்றும்.

எத்தனை பெண்களின் தாலிகள் அங்கே பாட்டில்களாய் உடைப்பட்டனவோ? எத்தனை தாய்களின் சுருக்கு பைய்கள் அங்கே உறுகாயாகவும் ஆம்லேட்டாகவும் உருப்பெற்றனவோ? எத்தனை பிள்ளைகளின் பள்ளி கட்டணங்கள் அங்கே சோடாவாக கலக்கப்பட்டனவோ?

எழுதவே கூசுகிறது, என் குடும்பத்தில் குடிக்காத ஆண்மக்களே இல்லை.சேர மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்லி கம்யூனிசத்தையும் கள்ளையும் ஒரு சேர அரைத்து " குடி "த்தவர்களாகயிருந்தனர். புதுவை வந்த பின் கேட்கவே வேண்டாம். மாதச் சம்பளத்தில் முக்கால்வாசியை மது வியாபரிகளுக்கே தவணை முறையில் சேவித்து கொண்டிருந்தனர்.அம்மாவும் அத்தைகளும் சித்திகளும் இவர்களிடம் படாத துன்பங்களேயில்லை. ஆனாலும் அவர்கள் "காலில் " சுற்றியுள்ள பாம்புகளின் நச்சுத்தனமான தீண்டல்களினால் உயிர் உதிரச் செய்யாமல் உள்ளம் திடப்படுத்தி எங்களை வளர்த்தெடுத்து இன்று நல்ல நிலைக்கு ஆளாக்கியுள்ளனர்.

சின்ன வயசிலிருந்தே அந்த கேள்வி குடைந்து கொண்டிருக்கிறது. இவர்கள் ஏன் குடிக்கிறார்கள் ? குடித்தபின் ஏன் பெண்டு பிள்ளைகளை அடித்து துவைக்கிறார்கள். என்னதான் சாதிக்க வேண்டும் இவர்களுக்கு? குடல் சுருங்கி ஈரல் அழுகி சிறுநீரகம் கெட்டு சீக்கிரம் பரலோகம் போக வேண்டுமானால் போகட்டுமே.....ஏன் மற்றவர்களின் உயிரை தவணை முறையில் இப்படி கொல்ல வேண்டும்?

இன்றைய தலைமுறைகள் குளிருக்கும் ஜாலிக்காகவும் உடல் பெருக்க வைக்கவும் முகத்தை மிளிர வைக்கவும் உயர்நிலை சமுதாயத்தில் தலை உயர்த்தி நடக்க ஒரு சடங்கிற்காகவும் இன்னும் பல "அரிய" காரணங்களுக்காய் " பீர் "லிருந்து [" சும்மா...பச்ச தண்ணி மாதிரிப்பா...ஒண்ணும் பண்ணாது "] ஆரம்பித்து ரம், விஸ்கி, பிராந்தி, வோட்கா[டக்கிலா] மற்றும் பல சரக்குகளடித்து போனத் தலைமுறைக்கு நாங்கள் ஒண்ணும் குறைந்தவர்களல்ல என்பதை நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள்."குடி குடியை கெடுக்கும் " என்பது அரசு விளம்பரத்திற்காக எழுதப்பட்ட கவர்ச்சி வாசகமல்ல. அது எந்த மாதிரி "குடி"யாக இருந்தாலும் நிச்சயமாய் குடியை கெடுக்கும் - என் அனுபவத்தில் அறிந்தது.

சினிமா மற்றும் தொ(ல்)லைக்காட்சியின் பங்களிப்பை பற்றிச் சொல்லவே வேண்டாம். குடிப்பதும் புகைப்பதும்தான் கதைத்தலைவனின் ஆண்மையை வெளிக்காட்டும் என கொஞ்சம் கூட பொறுப்பின்றி காட்டுகின்றனர். அவர்களைக் கேட்டால், " கோழியிலிருந்து முட்டை வந்துச்சா, முட்டையிலிருந்து கோழி வந்துச்சா? " என சமூகத்தை சுட்டி காட்டுவார்கள். இந்த சேவல்கள் மிதித்து சாவதென்னவோ கோழிகளும் குஞ்சுகளும்தான்!.

என் பள்ளிப்பருவத் தோழி ஒருத்தியின் தந்தை குடித்தே இறந்து போக, அவள் வீட்டிற்குச் சென்றேன். அம்மாவும் பாட்டியும் அழுது புரண்டிருக்க அவள் மட்டும் சும்மாதிருந்தாள். முகத்தில் என்றுமில்லாத மகிழ்ச்சியுடன், "இனிமேதான் எங்கம்மா சந்தோஷமாக இருப்பாங்க, யாருக்கும் இனிமே அடி உதையெல்லாம் கிடைக்காது. நாங்க நல்லா நிம்மதியா தூங்கலாம் " என்றாள்.

உங்கள் பிள்ளைகளும் மனைவியும் நிம்மதியாக வாழ வேண்டுமானால், "அடிக்காதீர்கள் " (அல்லது) நிறைய " அடித்து " சீக்கிரம் " இடத்தை " காலி செய்யுங்கள். அவர்களும் வாழ வேண்டும் !

5 Comments:

இதை அனுபவிக்காதவர்களுக்கும், அதில் ஈடுபாடில்லாதவர்களுக்கும், 'பப்'பில் அடிப்பவர்களுக்கும் தெரியாது, உங்களின் இந்தப்பதிவின் தீவிரம். ஆனால் இது முக்கியமான விஷயம், வேண்டிய விஷயம் - உங்கள் குரலின் காட்டம் புரியமுடிகிறது. என்ன ஒரே குறை: இது சேரவேண்டிய பெரும்பாலனவர்க்கு போய் சேராது, இங்கு வலையேறுவதால்... இருந்தாலும் இதுபற்றி சிந்திப்பது தேவை, இந்தப்பிரச்னை அங்கிங்கெனாதபடி எங்கும் - இங்கும் இருக்கிறது.

Monday, November 01, 2004 12:16:00 AM  

நேரு வீதில் காலாற நடக்கும்போது சாலையே தடுமாறுவதுபோல்தான் இருந்தது.(தடுமாறியது என் காலா?!)

4பீர்,நண்டுவறுவல், கோழி பிரட்டல், இறைச்சிக் குழம்பு,சுண்டல்,ஒரு பாக்கெட் சிகரெட் இதெல்லாம் வாங்கிவிட்டு 100ரூபாய் கொடுத்தால் மீதி கொடுப்பாங்களாமே...உண்மையாகத்தான் இருக்குமோ?

கோபிக்காதீர்கள்! சும்மா கேட்டேன். தீர்வை குறைவென்பதால் இப்படி விற்கிறார்கள் போலும். மற்றபடி புதுவையின் அழகை நானும் பருகி இருக்கிறேன். டெம்போக்களில் வலம் வந்திருக்கிறேன். அருகில் உள்ள வில்லியனூர் சர்ச்சுக்கும் சென்றதுண்டு. மயிலம் நான் சென்று வந்த பிரசித்தி பெற்ற தலம்.

Monday, November 01, 2004 12:17:00 AM  

This comment has been removed by a blog administrator.

Monday, November 01, 2004 12:20:00 AM  

நன்று தோழி. நன்றாக எழுதுகிறீர்கள். தண்ணியைத் தவிர மற்றவைகளையும் எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள் குறிப்பாக "ஆரோவில்", ஜிப்மர்.

Monday, November 01, 2004 12:22:00 AM  

புதுவைக்கு இருமுறை சென்றிருக்கிறேன். முதல்முறை 'அடித்தோம்'. இரண்டாம் முறை குடும்பத்துடன், அதனால் 'அடிக்க'வில்லை

முதல்முறை 'அடித்து'விட்டு கடற்கரையில் குளிக்கப் போய், போன வேன் மணலில் சிக்கி, அதை விடுவிக்க வேர்க்க விறுவிறுக்கப் போராடியதில் எல்லாம் வடிந்துபோய்...

அது ஒரு பெரிய கதை!

Monday, November 01, 2004 6:38:00 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home