எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Saturday, November 06, 2004

கிரேசி கோஸ்டுடன் ஒரு மாலைப்பொழுது

சியாட்டலில் நிறைய தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் என்பது எனக்கு நேற்றுதான் தெரிந்தது. இங்குள்ள தமிழ்ச்சங்கம் வருகிற தீபாவளித் திருநாளை முன்னிட்டு சிறுவர்/சிறுமிகளுக்கான கலை நிகழ்ச்சிகளுடன் கிரேசி கிரியேஷன்ஸின் "கிரேசி கோஸ்ட்" நாடகத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இணையம் மூலம் நுழைவுச்சீட்டுகளை முன்கூட்டியே வாங்கியிருந்தாலும் கடைசி நேரத்தில் எங்களுடன் வர இணைந்த ஒரு நண்பருக்கு சீட்டு கிடைக்கவில்லை. நாங்கள் செல்வதற்குள் அத்தனையும் விற்று தீர்ந்தாகி விட்டது. இங்கே "கிரேசி" குழுவினருக்கு அவ்வளவு மவுசு போலிருந்தது.

நேற்று காலையிலிருந்தே நல்ல குளிரும் மெல்லிய பனிமூட்டமாயிருந்தது. எங்களுடன் வந்த நண்பரை காரில் தனியாக விட்டு போக மனமில்லாமல் [ வேண்டாம்..வேண்டாம்..என்றவரை நாந்தான் "வாங்கோ" என்று வற்புறுத்தி அழைத்துச் சென்றேன், அந்த குற்ற உணர்வும் தாக்க ] நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தவர்களுடன் "நின்றாவது" பார்க்க ஏற்பாடு செய்து தர முடியுமா எனத் தொல்லை பண்ணிக் கொண்டிருந்தோம்.

குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் முடிந்து இரவு உணவிற்கான இடைவேளை விட்ட பிறகும், உணவருந்தச் செல்லாமல் நண்பருக்காக சீட்டு பிடிக்கும் படலத்திற்காகவே காத்திருந்தோம். உணவு இடைவேளை முடிந்து நாடகம் தொடங்கவிருக்கும் சமயம் பார்த்து, " மேடையின் அருகே உட்கார்ந்து பார்க்க முடியுமானால், ஏற்பாடு செய்கிறோம்" என்றார்கள்.

நாங்கள் ஒருவாறு சம்மதித்து காத்திருக்கும் வேளையில் "குட்டியிட்ட பூனை" போல நிகழ்ச்சி அமைப்பாளர்களையே சுற்றி வந்த எங்களை கண்ட ஒரு குடும்பஸ்தர், எங்களை உற்றுப் பார்த்து விட்டு உள்ளே சென்றார். வெளியே வருகையில் அவர் கையில் ஒரு சீட்டு. "என் மகனுக்காக வாங்கினது. உட்கார்ந்து நாடகம் பார்க்குமளவு பொறுமையெல்லாம் இல்லாமல் உள்ளே விளையாடி கொண்டிருக்கிறான். உங்களுக்கு ஒரு சீட்டு தான் வேண்டுமானால் இதை எடுத்து கொள்ளுங்கள்" என்றார்.

கால்கடுக்க நின்று கொண்டிருந்த அந்த இடத்தில் திடீரென்று பூமாரி பொழிந்தது போலிருந்தது எங்களுக்கு. எத்தனை வற்புறுத்தியும் சீட்டுக்கான கட்டணத்தை வாங்க மறுத்துவிட்டார் அந்த புண்ணியவான். இவரை போல நல்லார் நிறைய பேர் உள்ளதால்தான் சியாட்டலில் விடாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது.


ஒரு வழியாக நாடகம் தொடங்கும் நேரத்திற்கு கொஞ்சம் முன்பாக போய் அமர்ந்தோம்.கிரேசியின் எத்தனையோ நாடகங்களை தொ(ல்)லைக்காட்சியில் பார்த்திருந்தாலும் [ நகைச்சுவை நாடகங்களேயே] நேரில் பார்ப்பது இதுதான் முதல் முறை. கிரேசி மோகன் இயல்பாகவே அறிமுக உரையை தொடங்கினார், ஆனால் நிறைய இடங்களில் கூட்டத்தினரின் கைத்தட்டலுக்காகவும் கட்டயாமாக சிரிக்க வைக்கவும் கொஞ்சம் மிகையாகவே பேசினார்.

இதுவரை மூன்று முறை அமெரிக்கா வந்திருந்தாலும் சியாட்டலுக்கு வருவது இதுவே முதல் முறை என்றார். வேறு எங்கும் இவ்வளவு அதிகம் பார்வையாளர்களை பார்த்ததில்லை என்றவுடன், ஒருவர் எழுந்து "சிக்காகோவில் உங்கள் நிகழ்ச்சிக்கு முன்பு ஒரு முறை வந்திருந்தேன். அங்கு இதை விட பெரிய கூட்டமிருந்தது" என்றார். ஆனால் கைத்தட்டல்களின் இறைச்சலில் மோகனைச் சென்றடையவில்லை. அரசியல்வியாதிகள் போல், "மற்ற இடங்களில் நான் கண்டது Quantity கூட்டம். இங்கு நான் காண்பது Quality கூட்டம்" என்றார்.மக்கள் புல்லரித்துப்போய் விசிலுடன் கைகள் கொட்டினர்.

அமெரிக்க அனுபவங்களை நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டார். "இந்த ஊரில் Greyhound பஸ் இருக்கே, அதுல எப்படிதான் மக்கள் போறாங்களோ...முயல் ஆமை கதையில் இந்த பஸ்ஸை விட்டா ஆமை கண்டிப்பா ஜெயிச்சுடும். நாங்க நடந்து போனாலே போய் சேர்ந்துடுவோம் போல இருந்துச்சு. பைக்காரங்களெல்லாம் எங்க பஸ்ஸ ஒவர் டேக் பண்ணிக்கிட்டு போனாங்க. "

"அப்புறம் Southwestன்னு ஒரு airways. அது நம்ம ஊர் டவுன் பஸ் மாதிரியிருந்துச்சு. பொதுவா பிளைட்டுல ஏறின உடனே சொல்ற Safety instructions கூட சொல்ல மாட்டேங்கிறாங்க டவுசர் போட்ட மாமிங்க. மகனே விபத்து வந்துச்சுன்னா உன் சமத்துன்னு சும்மா இருக்காங்க. அண்டு* [ அப்புறம் என்பதின் ஆங்கில அர்த்தமாக இதைதான் மோகன் சரளமாக உரைத்தார் - அதுவும் " நண்டு " என ஒலிக்கும் தொனியில் ] சாப்பாடுனு ஒண்ணுமே தரலே. நான் எப்பவுமே Pretzelsன்னு தர்றதை ரெண்டு வாங்கி வச்சுப்பேன். ஒண்ணு சாப்பிட. ஒண்ணு பல் குத்த."

"அண்டு* நாங்க இந்த இருபத்தஞ்சு நாளுல அமெரிக்கா சுத்தின அளவுக்கு கெர்ரி புஷ்கூட சுத்தியிருக்க மாட்டாங்க. ஒரு இடத்துல கெர்ரிய பார்த்தோம். என்னை பார்த்து அவர், என்னப்பா..எனக்கு பதிலா நீ நிக்கிறியானு கேட்டார். நான் ஐய்யய்யோ நமக்கு நாடகம் வேலைன்னு நிறைய இருக்கு சார். எல்லாம் நம்ம புஷ் பாத்துப்பார், வர்ட்டா நைனான்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டேன்."

"அண்டு* நாங்க ஒவ்வொரு ஊருக்கு போனாலும் கடிகாரத்தை ஒரு மணி நேரம் கூட்டி வைங்க சார். இல்லே ரெண்டு மணி நேரம் குறைச்சு வைங்க சார்.. இல்லே இல்லே Day light savings முடிஞ்சு போச்சு இப்ப இன்னும் ஒரு மணி நேரம் குறைச்சு வைங்கன்னு சொல்லி சொல்லி நாங்க எந்த டைம்ல இருக்கோம்னு தெரியாமா Jet lag கூட time lagம் சேர்ந்து ஒரு வழியா ஆயிட்டோம் ஆனாலும் இந்த சோர்வு துக்கமில்லாதது எல்லாம் உங்களை மாதிரி நல்ல ஆடியன்ஸை பார்த்ததும் பஞ்சா பறந்து போய் நல்ல உற்சாகமாயிடுது."

" கிரேசி கிரியேஷன்ஸ் தொடங்கி இது இருபத்தஞ்சாவது வருசம். இந்த நாடகத்தை வெள்ளி விழா ஸ்பஷலாக 150 முறை மேடையேற்றி விட்டோம். சென்னை, சிங்கப்பூர், மலேசியா, துபாய்ன்னு பல இடங்களில் நல்ல வரவேற்பு இருந்துச்சு. உங்களுக்கும் நல்லா பிடிக்கும்னு நம்பறேன்.உங்க ஆர்வத்துக்கும் ஆதரவுக்கும் அனேக கோடி நமஸ்காரங்கள். ரொம்ப நேரம் பேசிட்டேன்..இப்ப நாடகத்தே பார்க்கலாம்" என்று முடித்தார்.

மாதுவின் வீட்டில் மைதிலியின் அப்பாவும் தாத்தாவும் பேயாக அலைகிறார்கள். அவர்களின் தொல்லை தாங்க மாட்டாமல் மாது பேய் ஓட்டும் மாத்ருபூதத்தை(மோகன்) வரச் சொல்லுகிறார். பேய்களும் வீட்டை விட்டு ஒடி விடுகின்றன. மாதுவின் நண்பன் சீனு பத்து வருடமாக ஜானகியை காதலிக்கிறான், ஆறு மாதமாக திருமணம் செய்யும் நி.வே.ஆ[ அதாங்க... நிறைவேறாத ஆசை]யுடன் இருக்கிறான். திருமணத்திற்கு ஜானகியின் அப்பா சம்மதிக்காததால் மாது திருட்டுத்தனமாக கோயிலில் மணம் முடித்து வைக்க உதவுவதாக கூறுகிறான்.

திருமணத்திற்கு குறித்த நேரத்தில் சீனு வராததால் நின்று போகிறது. ஆனால் திருமணத்திற்காக மாதுவின் ஆலோசனைப்படி "சடை" என்கிற "டை" அடிக்க சென்ற சீனு இறந்து விடுகிறான். மாத்ருபூதம் தரும் "பூத" கண்ணாடியின் மூலம் பார்ப்பதால் சீனு மாதுவின் கண்ணுக்கு மட்டுமே தெரிகிறான். தன்னுடைய நி.வே.ஆவை நிறைவேற்றினால்தான் ஆன்மா சாந்தி அடையும் என மாதுவிடம் சீனு கூறுகிறான். ஆபிஸ் மேனேஜர், ஜானகி, மைதிலி, அப்பா, மாத்ருபூதம் இவர்களின் உதவியுடன் மாது சீனுவின் நி.வே.ஆவை எப்படி நிறைவேற்றினான் என்பதே மீ.க [ ..அதாம்பா..மீதி கதை].

மூளையை கழற்றி வைத்து விட்டு இரண்டு மணி நேரம் சிரித்து இன்புற நினைத்தால், நிச்சயம் இது நல்ல நாடகம். கிரேசியின் "டைமிங் சென்சு"டன் கூடிய நிறைய நகைச்சுவை துணுக்குகள் நாடகம் முழுவதும் விரவி கிடக்கின்றன. அவர் படங்களின் காட்சிகளைப் போலவே நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் எதற்கு நாம் அப்படி விழுந்து விழுந்து சிரித்தோம் என நினைத்து பார்த்தால் ஒன்று கூட நினைவில் வர மாட்டேன் என்கிறது. இதுதான் அவர் எழுத்தின் பலம் மற்றும் பலவீனம் என நான் நினைக்கிறேன்.

கொஞ்சம் கஷ்டப்பட்டு யேசித்துப் பார்த்ததில் கீழ் கண்ட நகைச்சுவைத் துணுக்குகள் நினைவுக்கு வந்தன:-

மாது: என்னடி மைதிலி, உங்க தாத்தாவை விட உங்க அப்பா பெரியவர்னு சொல்றார். என்னடி குழப்பம் இது ?

மைதிலி: எங்க தாத்தா 50 வயசில் இறந்தார். அப்பா 70 வயசில இறந்தாரு. அப்போ அப்பா தாத்தாவை விட 20 வயசு கூட வாழ்ந்து செத்தார்ல..அதான்.

மாது: ஓ....இது அப்ப "செத்த" கணக்கா ...

********************************
மேனேஜர்: மாது.. எனக்கு ஆவி பறக்க காப்பி வேணும்.

மாது: கவலையே படாதீங்க சார். எங்க வீட்டுல ஆறின காப்பில கூட சூடு பறக்க "ஆவி" வரும்

********************************
மாத்ருபூதம்: பேய்க்கும் பிசாசுக்கும் வித்தியாசமிருக்கு மாது. பிசாசு வந்து Housewife மாதிரி ஒரு இடத்தில அடங்கி ஒடுங்கியிருக்கும். உங்க பொண்டாட்டி போல. பேய் வந்து ஒரு இடத்தில இருக்காது, உங்கள போல ஆபிஸ் போயிட்டு வர இருக்கும் . புலிய மரத்துல தூக்கம் போடும். நீங்க ஆபிஸ்ல "பேய்"த்தூக்கம் போடற போல.

********************************
மாத்ருபூதம்: இங்க பாத்திங்களா..இது பேருதான் "பேய்GoneSpray" கண்ணாடியை போட்டுகிட்டு பேய் மேல இதை அடிச்சு "போடா செல்லம்"னும் சொன்ன பேய் பறந்து போயிடும்.

********************************
சீனு: டே மாது... நான் ஜானகிய பத்து வருசமா லவ் பண்றேன்டா...

மாதுவும் ஜானகியும் ஒரே நேரத்தில்: அப்படியா...??

மாது: டே...என்னடா....ஜானகியும் ஆச்சரியத்தோட அப்படியானு கேட்கறா ? என்னம்மா ஜானகி இவன் உன்னை பத்து வருஷமா லவ் பண்ணலியா ?

ஜானகி: இல்ல மாது... நாங்க ஆறு மாசமாதான் லவ் பண்றோம்..

மாது:...டே...சீனு...என்ன இழவுடா இது...

சீனு: இல்லடா...மாது... நான் பத்து வருசமாத்தான் லவ் பண்றேன். ஆனா சினிமால வர்றமாதிரி..ஜானகிக்கு தெரியாமா..மறைஞ்சு...மறைஞ்சு அவ பின்னாடியே சுத்தி சுத்தி வந்து லவ் பண்ணேன். ஆறு மாசம் முன்னாடிதான்...தைரியம் வந்து அவகிட்ட சொன்னேன். அதான் அவ ஆறு மாசத்த கணக்கா சொல்றா"
********************************

மாது காப்பியை "அப்படியே" உறிஞ்சுவதும், சீனுவின் "பாம்...பாம்" தோள் குலுக்கும் மேனரிசமும், சீனுவின் ஆவி மேனேஜரின் உடம்பில் போனதும் மேனேஜர் போடும் ஆட்டமும், சீனுவின் "சீனா தானா" வீணை ஆட்டமும், மாத்ருபூதம் மற்றும் மேனேஜரின் "ஆவி...ஆவி...ஆவி..." ஆட்டமும், சீனுவாக மேனேஜர் சொந்த அப்பாவிடமே "டே மவனே " என்று வேட்டி உயர்த்தி கொண்டு ஒவ்வொரு முறையும் சண்டைக்கு போவதும், கணிணி புரோகிதரின் "ஆன்லைன்" திருமண சடங்கும், சீனுவாக மேனேஜர் "பெண் பார்க்கும்" படலமும் வயிற்றை பதம் பார்க்கும் நகைச்சுவை காட்சிகள்.
அதிலும் சீனுவாக நடித்தவர் கலக்கி விட்டார்.

கடந்த செப்டம்பரில் என் துணையின் விசா நேர்முகத் தேர்வுக்கு சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் வெளியே காத்திருக்கையில் விசா வாங்க வந்திருந்த "சீனு"விடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதே இந்த நாடகத்தைப் பற்றி குறிப்பிட்டார்.சியாட்டல் வருவது பற்றி தன்னால் உறுதியாக கூற முடியாது என்றார். 9/11, விசா கெடுபிடிகள், Outsourcing என எல்லாவற்றைப் பற்றியும் கொஞ்சம் சீரியஸாகவே விவாதித்தார். நேற்று மேடையில் அவர் போட்ட ஆட்டத்திற்கும் நடிப்பிற்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லாமலிருந்தது அன்றைய பேச்சு. இயல்பாகவே மரியாதையுடன் பழகினார். மற்ற கலைஞர்களுடன் அன்று உரையாட முடியவில்லை. ஆனால், மரியாதை நிமித்தம் சில "Hello" க்களை பரிமாறிக் கொண்டோம்.

நாடகத்தின் முடிவில் கலைஞர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தினார் மோகன் [ நிறைய பேர் VRS வாங்கி முழு நேரத் தொழிலாகவே இதைச் செய்வதாக கூறினார்]. "ஆண்டவன் தயவிருந்தால் அடுத்த ஆண்டும் சந்திக்கலாம்" என்று விடை கூறினார்.நாடகத்தின் இயக்குனர் காந்தன் திரைப்பட இயக்குனர் மொளலியின் தம்பி என்பது எனக்கு புது தகவலாக இருந்தது. கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

மொளலியின் "Flight 172" நாடகத்தின் குறுந்தகடு விற்கப்பட்டது.அதில் கிடைக்கும் தொகை முழுவதும் அடையார் புற்றுநோய் மருத்துவமனை குழுவினரின் ஆராய்ச்சிக்கு செல்லும் என்று அறிவிக்கப்பட்டதால் "சுடச்சுட" விற்பனையானது.

எல்லாம் முடிந்து வெளியே வருகையில் இரவு மணி 11. விடியற்காலை நான்கு மணிக்கு Houston செல்வதற்கு விமானம் பிடிக்கச் செல்லும் துரித கதியில் இருந்த பனியில் நடுங்கிக்கொண்டே களைப்புற்ற கலைஞர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சொல்லி விடைப் பெற்று வருகிற வழியில் Denny's ல் இத்தாலிய கோழியின் சாண்ட்விச்சை French Vennila காப்பியுடன் வயிற்றை நிரப்பி நள்ளிரவில் ஒரு Ghost போல வீடு வந்து சேர்ந்தோம்.



4 Comments:

arpudam..unga nadaiyae thani..naan thinamum ungal "mazhai saaralil" nanaikiraen..

Sunday, November 07, 2004 12:00:00 PM  

This comment has been removed by a blog administrator.

Sunday, November 07, 2004 12:24:00 PM  

Oh didn't he do the outsourcing sastrigal piece in seattle edition? He did that in chicago and mentioned that he had added for the american audience. That was the most hilarious segment of the drama.

-Yagna [yagnak at yahoo dot com]

Sunday, November 07, 2004 8:11:00 PM  

Online புரோகிதர் Outsourcing பற்றியும் குறிப்பிட்டார். ரசித்து சிரித்தோம்.

Monday, November 08, 2004 9:44:00 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home