எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Wednesday, November 03, 2004

ஏன் பிறந்தாய் மகளே?

அவள் பெயர் (ச்சும்மா ஒரு பெயருக்குத்தான்..) அகல்யா, என் தோழியின் தோழி. எனக்கு அவ்வளவாக பழக்கமில்லை.தோழி சொல்லி நிறைய கேட்டிருக்கிறேன். வீட்டிற்கு ஒரே செல்லப் பெண். அப்பாவிற்கு கூரையை பிய்த்துக் கொண்டு பணம் கொட்டும் வியாபாரம். அம்மா மகளிர் (வெட்டி) கூட்டமைப்பின் தலைவி. மகளின் பணத்தேவைகளை மாதந்தோறும் தவணை முறையில் தீர்த்து வைப்பதுதான் அவர்களின் கடமை, பாசம் என்னும் "அரிய" மனப்பான்மை உடையவர்கள்.

அவள் பள்ளி வரை நன்றாகதான் படித்திருக்கிறாள். கலைக்கல்லூரியில் சேர்ந்ததும் காதலனாக ஒருவன் அவள் வாழ்க்கையில் புகுந்தான்.வகுப்பில் பாடம் படித்ததை விட புறவுலகில் நிறைய பாடங்களை அவர்கள் கற்று அறிந்திருக்கிறார்கள். வீட்டாருக்கு வழக்கம் போலவே இது தெரியவில்லை. நாளோரு "தண்ணியும்" பொழுதொரு "டிஸ்கோதே"யுமாய் அந்த பாடங்கள் தொடர்ந்திருக்கின்றன.

ஒரு நாள் அவசரமாக என் தோழியை தொலைப்பேசியில் அழைத்திருக்கிறாள் அவள். காதலன் என்று அவளுடன் சுற்றிய கயவன் அது நாள் வரை அவளை பகடைக்காயாய் உபயோகித்ததைச் சொல்லி கதறி அழுதிருக்கிறாள்.போதையில் இருந்தவளை அனுபவித்துவிட்டு, அதை புகைப்படமாகவும் படமாகவும் பதிவுச் செய்து இணையத்திலும் நீலச்சந்தையிலும் விற்றிருக்கிறான். இது எதுவும் தெரியாமல் இவள் வழக்கம் போலவே தினப்படி நடவடிக்கையைத் தொடர்ந்திருக்கிறாள்.

தோழியை அழைத்த நாள் அன்றுதான், அகல்யாவின் செல்பேசிக்கே அவள் காதலனுடன் இருக்கும் புகைப்படம் வந்துள்ளது. கயவனின் சுயரூபத்தை அறிந்து கொண்டவள், என்ன செய்வதேனத் தெரியாமல், இவளை அழைத்திருக்கிறாள்.

விசயத்தை கேட்டுத் தெரிந்த என் தோழி," காவல் நிலையத்தில் உன் பெற்றோர் மூலம் புகார் கொடுக்கலாம். அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து அவனையும் அவன் கூட்டத்தாரையும் பிடித்து விடுவார்கள்." என்றிருக்கிறாள். அதற்கு அவள் ஒன்றும் பதிலுரைக்காமல் அழுதுக்கொண்டேயிருந்திருக்கிறாள். அவளுக்கு ஆறுதலாக பேசி " நான் வீட்டிற்கு வர்றேன், உன் அப்பா அம்மாவிடம் நாம ரெண்டு பேரும் பேசலாம்" என்றிருக்கிறாள். ஆனால் இவள் வீடு செல்லும்வரை அவள் காத்திருக்கவில்லை. மின்விசிறியில் அதுவரை அவள் அதிகம் அணிந்திராத தாவணியை கட்டி உயிரை மாய்த்திருந்தாள். அதுவரை நேரா நேரத்திற்கு வீட்டிற்கு வராத அவளை பெற்றவர்கள் அலறித் துடித்து வந்து சேர்ந்தனர்.

யார் இங்கு குற்றவாளி? மகளை கட்டுப்பாடுடன் வளர்க்க நேரம் கிடைக்காமல் பணத்தின் பின்னாலும் புகழின் பின்னாலும் அலைந்து கொண்டிருந்த அவள் பொற்றோர்களா? நாகரீகம் என்ற பெயரில் "தண்ணியும்", "டிஸ்கோதேயுமாய்" அலைய கிடைத்த சுதந்திரமா? எது காதல் எது காமம் என அறிய முடியாமல் தெரிந்தே படுகுழியில் வீழ்ந்த வயசுக் கோளாறா? அல்லது பிரச்சனையை எதிர்கொள்ள முடியாத கோழைத்தனமா?

தோழி கூறக்கேட்டு இளைய தலைமுறை மேல் அடக்க முடியாத கோபமும் எரிச்சலும் பரிதாபமும் ஒருசேர வந்தது. சமீபத்தில் "டிஸ்கோதெ" சென்று வரும் வழியில் விபத்துக்குள்ளான இளம் பெண்ணின் மரணமும் நினைவுக்கு வந்தது. எங்கே சென்று கொண்டிருக்கிறது நம் இளைய சமுதாயம்? பாரதி கண்ட புதுமைப் பெண்கள் நிச்சயம் இவர்கள் அல்லர்.என்னைப் பெறுத்தவரை பெற்றோரின் தீவிரமான கவனிப்பும் அளவிட முடியாத பாசமும் சிறகொடிக்காத சுதந்திரமும் இருந்தால் எந்த பெண்ணும் பாரதியின் கனவுப் பெண் ஆகலாம்.

"மங்கையாராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமாம்மா" - இது வெறும் வார்த்தைகளில்லை -சத்தியம்! உணர்ந்து வாழ்ந்தால் நன்மை நிச்சயம் !

5 Comments:

சுப்புலட்சுமி

இப்படியான விடயங்கள் மிக வருத்தம் தரக் கூடியவையே!
இங்கே தவறு எல்லோரிடமும்தான்.

குறிப்பிட்ட பருவத்தில் கண்டிப்பாகப் பெற்றோரின் கண்காணிப்பும் அரவணைப்பும்
சரியான வழிநடத்தும் தன்மையும் ஒரு பிள்ளைக்குத் தேவைப் படுகிறது. அதிலிருந்து பெற்றோர்கள் நழுவுவது பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதை சில ஐரோப்பியக் குடும்பங்களிலும் கண்டிருக்கிறேன்.

அதே நேரம் ஒவ்வொரு பெண்ணிடமும் விடுதலை பற்றிய சரியான புரிந்துணர்வும் இருக்க வேண்டும்.
காதலிப்பதும் கண்டபடி திரிவதும்தான் விடுதலையென இளம் சமுதாயம் நினைத்தால் கஸ்டம்தான்.
பெண்விடுதலையின் சரியான நோக்கத்தை இளம் பெண்களிடம் பெற்றோர்களும் உற்றோர்களும் ஊட்ட வேண்டும்.

முக்கியமாக ஒரு பெண்ணுக்குத் தன்னைக் காத்துக் கொள்ளத் தெரிய வேண்டும்.
இங்கு அந்த ஆண் முதற்குற்றவாளி. இப்படியான புல்லுருவிகளை இனங்காணும் பக்குவம்
அந்தப் பெண்ணிடம் இல்லாது போய் விட்டது.

குற்றம் எல்லோரிலும் இருக்கும் போது தண்டனையை தானிறந்து தன் பெற்றோருக்குக் கொடுத்து விட்டாள். இருந்து அந்த இளைஞனுக்கு ஒரு பாடம் படிப்பித்திருந்தாளேயானால் இனியும் இப்படிப் பிழைகள் நடக்காதிருக்க ஏதாவது செய்திருக்கலாம். சமூகம் பிழையை அவள் மேல் மட்டுந்தானே போடப் போகிறது.

இதில் மறைமுகமாக எமது சமூகமும் குற்றவாளியாகிறது.

Thursday, November 04, 2004 1:45:00 AM  

This comment has been removed by a blog administrator.

Thursday, November 04, 2004 1:45:00 AM  

காதல் என்பதைப் புரிந்து கொள்ளும் மனநிலையில் பலர் இல்லை.ஆனால் காதலை ஏதோ மிக முக்கியமானது,உன்னதமானது, தெய்வீகமானது, காதலிக்காவிட்டால் வாழ்க்கையே இல்லை என்ற உணர்வைத்தானே கவிதைகளும், கதைகளும் காட்டுகின்றன, ஏன் நீங்கள் இங்கு இட்டுள்ள கவிதையும் அப்படிப்பட்டதுதானே. காதலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இலக்கியத்தில், கலைகளில், நாடகம்,திரைப்படம் போன்றவற்றில் தரப்பட வேண்டுமா என்ற கேள்வியையும் கேளுங்கள். காதலையும், காமத்துடன் கூடிய சதியையும் புரிந்து கொள்ளும் திறன் எத்தனை பேருக்கு இருக்கிறது.

i did not post any comment in this blog without my name
before.as there is someproblem in blogger i am posting as anonymous.

Thursday, November 04, 2004 1:35:00 PM  

இதில் எல்லாருக்கும் விழிப்புணர்வு வேண்டும். குடும்பத்தை பிரதானமாக கொள்ளவேண்டும் - வேலை, பணம் இரண்டாம்பட்சம். தன் (பள்ளி வயதுப்)பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்பது தாயுக்கும் தெரியாமல், ஏன் அந்தப்பெண்ணுக்கே தெரியாமல் இருந்த அவலம் கடந்த வருடம் இங்கு நடந்தது. கழிவரைகளிலும், குப்பைத்தொட்டிக்கருகிலும் இங்கு குழந்தைகள் கண்டெடுக்கப்பட்டதுண்டு. இந்தியா டுடே-யில் தொடர்ந்து வெளிவரும் பள்ளிவயது காதல்பற்றிய கவர்ஸ்டோரி-யெல்லாம் படிக்கும்போது நெஞ்சு விம்முகிறது, மிகவும் பயமாயிருக்கிறது. குடும்பம் முக்கியம் - அது சிதையும்போதுதான் இந்த அவலம் நடைபெறுகிறது.

Thursday, November 04, 2004 7:32:00 PM  

ஒரு குழந்தைக்கு தாய் தந்தையர் சுயமரியாதை-யய் கற்றுத் தர வேண்டும். மேலும் அவர்கள் வழிகாட்டியாக இருக்க மட்டுமே வேண்டும். இச்செயல்கள் மூலம், குழந்தைக்கு தாய் தந்தையரிடம் மதிப்பும் அவர்கள் மீது மரியாதையும் இருக்கும். பல குடும்பங்களில், தாய் தந்தையர் தங்களது மதிப்பை அவர்களது வாரிசுகளிடம் இழக்கும் போது வாரிசுகளுக்கும் பெற்றோருக்குமான இடைவெளி தோன்றத்துவங்குகின்றது. இதை சற்று உறவு முறை (ரத்த) மீறிய நட்பால் மட்டுமே இல்லாமல் செய்ய இயலும். இதுதான் பெற்றோர்கள் உணர வேண்டியது.
மேலும் குழந்தைகளுக்கு space கொடுப்பதின் மூலம் அவர்கள் பெற்றோர்களின் அரவணைப்பில் எப்போதும் அவர்களாகவே இருப்பர். குழந்தைகளை கண்டிப்பது என்பது அச்சூழலில் தேவையற்றதாகிவிடும். குழந்தைக்கும் சுதந்திரம் என்றால் என்ன என்பதில் ஒரு புரிதல் உண்டாகும்.

நீங்க சொன்ன சம்பவம் எனக்கு வருத்தத்தை தந்தது.

Friday, November 05, 2004 11:25:00 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home