எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Thursday, November 04, 2004

கானல் நீராய் ஒரு காதல்

ஒவிய கல்லூரி மாணவி ஒருத்திக்கு பக்கத்து வீட்டு மருத்துவன்[1] மேல் காதல். காதலனுக்கு ரோஜா அனுப்புகிறாள், பிறந்த நாளுக்கு அவனையே ஒவியமாக வரைந்து பரிசாக அனுப்புகிறாள். ஏற்கனவே கல்யாணமாகி கர்ப்பமாய் இருக்கும் மனைவியை விட்டு விவாகரத்து வாங்கி அவளுடன் வாழ வருவான் என தன் தோழியிடத்தும் பின்னால் காதலுடன் சுற்றிக்கொண்டிருக்கும் மற்றொரு மருத்துவனிடத்தும்[2] அறுதியிட்டு கூறுகிறாள்.

ஆனால் வேறு நகரத்திற்கு ஓடிப் போக பயணத்திற்கு எல்லா ஏற்பாடுகள் செய்து இவள் காத்திருக்கும் வேளையில் அவன் வந்து சேரவில்லை.வீட்டில் சோகத்துடன் முடங்கி கிடக்கிறாள். வளர்த்து வரும் செடிகள் எல்லாம் காய்ந்து உதிர்ந்து விடுகின்றன. அவனிடமிருந்து மட்டும் எந்த தகவலுமில்லை.

தோழியின் பைக் ஓட்டி வருகையில் விபத்து நேருகிறது, அவள் பின்னால் சுற்றும் மருத்துவன்[2] முதலுதவி செய்கிறான்.அவனிடத்து கடைசியாக ஒரு உதவி வேண்டுமெனச் சொல்லி மருத்துவனுக்கு[1] பரிசாக அளிக்க ஒரு பொருளை வாங்கி வைக்கிறாள்.

கர்ப்பம் கலைந்து அவனிடத்து சண்டையிட்டு மனைவி விலகிப் போகிறாள். அவனிடத்து மருத்துவ உதவி கோரி வந்த நோயாளியை துன்புறுத்தியாக வழக்கு வருகிறது. வழக்கிட்டவள் மறுநாள் கொலையுண்டு கிடக்கிறாள். காவலர் வந்து பக்கத்து வீட்டில் வசிக்கும் கல்லூரி மாணவியை விசாரிக்கிறார். அவள் தன் தோழியுடன் கொலை நடந்த நேரத்திலிருந்ததாக பொய் சொல்லுகிறாள்.மருத்துவனை போலீஸ் வந்து பிடித்து போகிறது. வழக்கறிஞரான மனைவி தகவல் அறிந்து அவனுக்கு உதவ ஓடோடி வருகிறாள். மாணவியும் ஓடோடி வருகிறாள் - மனைவியுடன் அவன் சேர்ந்ததை பார்த்து உள்ளம் பதைக்கிறாள்...........

காட்சிகள் மின்னல் வேகத்தில் பின்னோக்கி போகிறது. மருத்துவன் ஏன் மாணவியை காணச் செல்வதில்லை? மாணவியிடத்து உண்மையிலேயே அவனுக்கு காதல் இருந்ததா? அவன் மனைவிக்கு கர்ப்பம் கலைந்தது எப்படி? மாணவி கடைசியாக மருத்துவனுக்கு அனுப்பிய பரிசு என்ன? அவன் மனைவி ஏன் சண்டையிட்டு விலகிச் சென்றாள்? உதவி கோரி வந்த நோயாளியை ஏன் அவன் துன்புறுத்தினான்? நோயாளி எப்படி மாண்டாள்? மாணவிக்கும் மருத்துவனுக்கும் அவன் மனைவிக்கும் கடைசியில் என்னதான் ஆனாது? ரோஜா கொடுத்ததிலிருந்து காட்சிகள் மீண்டும் வரிசையாய் வந்து விடையிறுத்துகிறது.

நிற்க! [ சரி...சரி....மரியாதையெல்லாம் மனசிலிருந்தால் போதும் உட்காருங்க..:-) ].....மேற்கண்டது நான் சமீபத்தில் கண்ட ஒரு பிரஞ்சு திரைப்படத்தின்( À la folie... pas du tout ) கதைச்சுருக்கம்.இப்படத்தின் ஆங்கிலப் பெயர்: He Loves Me, He Loves Me NOT. Amélie பட புகழ் Audrey Tautou இதில் கல்லூரி மாணவியாக நடித்து கலக்கியிருக்கிறார்.

கொஞ்சம் "குடைக்குள் மழை"யை நினைவுப்படுத்தும் படைப்பு அந்த கல்லூரி மாணவியின் பாத்திரம்.[ போச்சு...போ.....தெரியாத்தனமா துப்பு கொடுத்திட்டேன், ஞாபகத்திலிருந்து அழிச்சிடுங்கோ :-) ]. "Rashômon"," விருமாண்டி" படங்களில் கண்ட மாறுபட்ட பார்வைகளின் தொகுப்பே மேற்கண்ட கேள்விகள் அனைத்திற்கும் அற்புதமான திரைக்கதையால் பதில் சொல்லும்.

படத்தின் முடிவில் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட மாத்திரைகளைக் கொண்டு மருத்துவனை ஒரு அழகான சித்திரமாக அவள் தீட்டியிருப்பாள், எத்தனையோ உணர்வுகளை அது சொல்லாமல் சொல்லும்.

காதல்தான் மனித மனத்தை எப்படியெல்லாம் ஆட்டி படைக்கிறது!



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home