எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Sunday, November 07, 2004

நீலச்சாயம் வெளுத்து போச்சு...ரா.சு வேஷம் கலைந்து போச்சு

என் உயிர் நண்பர்களாக சுப்பிரமணியன், லட்சுமி நாரயணன் என இருவர் நான் பள்ளியில் படிக்கும் காலம் தொட்டு இன்று வரை உள்ளனர். சுப்பு இயந்திர பொறியியல் படித்து இன்று மும்பைக்கும் தென் ஆப்பிரிக்காவிற்குமிடையிலான நீரின் நீள அகலத்தை கப்பலில் அளந்து கொண்டிருக்கிறான். லட்சுமி பெங்(ண்)களூரில் சிங்கையில் தலைமையிடம் கொண்டு இயங்கும் ஒரு கணிணி நிறுவனத்தில் குப்பை கொட்டுகிறான்.
என் வாழ்வில் வெற்றியின் உயரங்களை எட்டி பிடிக்க இவர்கள் செய்த உதவிகள் உயிர் உள்ள மட்டும் மறக்க இயலாதது.

எட்டாம் வகுப்பிலேயே வகுப்பு நண்பர்களுடன் சேர்ந்து "கலைச்சுடர்" எனும் கையெழுத்து பத்திரிக்கை தொடங்கி மனதிற்கு பிடித்ததெல்லாம் எழுதி (சிறுகதை,பயணத்தொடர்,வாசகர் கேள்வி-பதில்,பிரபலங்களின் பேட்டி)மூன்று இதழ்கள் வெளியிட்டோம். பொருளாதார நெருக்கடியால் தொடர இயலாமல் போனது.

பதினொன்றாவது படிக்கையில் தமிழ் இரண்டாம் தாளுக்காய் விடாமல் எழுதிப் பார்த்த கவிதை தேவதை என்னை விடாமல் பிடித்துக் கொண்டாள். சுந்தர தெலுங்கில் மாட்லாடும் சைபரபாத்தில் வேலைக்குச் சேர்ந்து இணையத்தில் உலவத்தொடங்கியவுடன் தினம் ஒரு கவிதை குழுவில் "ராஜேஷ் வேணு" என்ற என் நிஜப்பெயரில் எழுதிய சில கவிதைகள் என்.சொக்கனால் பிரசுரமாயின. திண்ணையிலும் ஒரு கவிதை பிரசுரமாயிருக்கிறது.

கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் - நவீன எழுத்தாளர்கள் என்னவோ சொல்வார்களே.....ம்.....ஆங்.... "மோனத்தவத்தில்" இருந்துவிட்டு நண்பர் லாவண்யா(அ)என்.சொக்கன்(அ)சொ.மணியன் எழுதிய ஒரு சிறுகதையின் தாக்கத்தால் மீண்டும் எழுத வேண்டுமென வந்தேன். தினசரி வாழ்க்கையை ஓட்ட வேண்டிய அத்தியாவசிய நிர்ப்பந்தத்தால் எழுத்தை நிறுத்தி ஓடும் உலகத்தின் பின்னால் அவசரமாக ஓடி கொண்டிருக்கிற ஒரு எழுத்தாளனை பற்றிய கதையது [ பெயர் மறந்து விட்டது].

தமிழ் வலைப்பதிவுலகத்தில் எனக்கென ஒரு பதிவை தொடங்கி எழுத்துப் பயிற்சி மேற்கொள்ள தீர்மானித்தேன்.வெகு நாட்களாய் புனைப்பெயர் ஒன்றை தேடி மனம் அலைந்து என் வாழ்வின் முக்கிய கட்டங்களில் எல்லாம் தோள் கொடுத்து உதவிய உயிர் நண்பர்கள் பெயர்களை கொண்டு என் பெயரின் முதலெழுத்தையும் சேர்த்து "ரா.சுப்புலட்சுமி" என வைத்து கொண்டேன். என் பெயரின் சுருக்கமே இந்த புனைப்பெயரின் [ வலைப்பதிவுலகில் இதற்கு "முகமூடி" என்று பெயர்] சுருக்கமாக அமைந்தது வசதியாக இருந்தது. "மழைச்சாரலும்" பிறந்தது.


இந்த பெயர் வைத்து கொண்ட முகூர்த்தமோ என்னமோ தெரியவில்லை, நான் எழுதத் தொடங்கிய பதிவுகள் யாவும் பெண்கள் சம்பந்தப்பட்டதாகவே இருந்தது [ தம் அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்ட கல்லூரி தோழிகளுக்கு நன்றி!]. பதிவுகளுக்கிடையில் உள்ள நிகழ்ச்சி விவரணைகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருந்ததாக K.V.R குறிப்பிட்டு எழுதினார்.என் பதிவுகளில் வந்த வாழ்வின் நிகழ்வுகள் யாவும் என்னுடைய மற்றும் என் நண்ப/ நண்பிகளின் அனுபவங்களிலிருந்து எடுத்து எழுதினது என்று தனிப்பட்ட மடலில் அவருக்கு குறிப்பிட்டிருந்தேன்.

என் பதிவுகளில் எந்த "பாலின்" குணமும் வராமல் பொதுவான மொழியில் எழுத மிகவும் முயற்சித்தேன். குசும்பன் என்னை மகளிர் குசும்பில் சேர்த்ததும் "தோழி" என்று வந்த பின்னூட்ட மொழிகளும் என்னையறியாமல் நானே ஒரு "பிம்பத்தில்" சிக்கிக் கொண்ட உணர்வை தந்தது. ஆதலால், எழுத்து நடையை கொஞ்சம் கொஞ்சமாக வித்தியாசப்படுத்த முயன்றேன். [ "அரிப்பு" பிரயோகத்தால் குசும்பனிடம் மாட்டிக்கொண்டு "டின்" கட்டி கொண்டது தனி கதை].திருமணத்திற்கான அறிவிப்பை வெளியிடும் போது கூட "மனைவி" மாட்சி பற்றிதான் எழுதினேன்.ஆனாலும் அந்த பிம்பத்தின் சாயல் விலகவில்லை.

இது நாள் வரை வராத - நாயகன் கமலிடம் பேரன் கேட்பது போல - " நீங்கள் ஆணா ? பெண்ணா ? " போன்ற கேள்வி கணைகள் வலைப்பூவில் மழை பெய்ய தொடங்கியதும் வந்தன. கமல் தெரியவில்லை என நழுவியது போல் போக மனமில்லை. திரு.மூக்கர், திரு.அனானிமஸ் மற்றும் பல நண்பர்களின் மனத்தில் ஐயத்தை விதைத்து அவர்களின் பொன்னான நேரத்தை சில மணித்துளிகளாவது வீணாக்கியிருந்தால் மன்னியுங்கள்! [மூர்த்தியின் ஆதரவு குரலுக்கு சிறப்பு நன்றி! ].

இதுவரை மாதத்திற்கு ஒரு பதிவு என எழுதிக் கொண்டிருந்த நான், இந்த ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட இருபதிற்கும் மேல் பதிவு செய்தேன். எண்ணிக்கையில் என்றைக்குமே எனக்கு திருப்தியிருந்தில்லை, குறைவாக எழுதினாலும் மனதிற்கு நிறைவாக எழுத வேண்டும். ஒரு சில பதிவுகளில் எனக்கு அந்த நிறைவு கிடைத்திருந்தது. என் பதிவின் மேல் வெளிச்சம் பாய்ச்சி நட்சத்திரமாய் ஜொலிக்க விட்ட காசி மற்றும் மதி அவர்களுக்கு சிறப்பு நன்றி!

இந்த வாரம் முழுவதும் வலைப்பூவில் பெய்து வந்த மழைச்சாரல்
இங்கு நிற்கிறது. பின்னூட்டம் வழியே கருத்துக்கள் வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

LIGHTS OFF ! PACK UP !

9 Comments:

This comment has been removed by a blog administrator.

Sunday, November 07, 2004 5:08:00 PM  

This comment has been removed by a blog administrator.

Sunday, November 07, 2004 5:26:00 PM  

ராசு அவர்களின் ஒரு வாரமும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை. அதுபோல ராசு அவர்கள் கவிதையையும் பாண்டியையும் எமக்களித்தார்கள். மாதமொன்றாவது படைத்தால் பெரும் சந்தோசம் அடைவோம்.

இப்படிக்கு,
பின்னூட்ட மன்னன்.

பிகு:இந்த பட்டம் நேற்று நண்பர் ஒருவர் அளித்தார்!

Sunday, November 07, 2004 6:45:00 PM  

This comment has been removed by a blog administrator.

Sunday, November 07, 2004 7:41:00 PM  

வாருமையா ராசுக்குட்டி!

ரொம்ப நாளா நம்மளைப் போட்டு குடஞ்சிட்டாங்க... நாந்தான் RSL'ன்னு. நல்லவேளை இப்போ நான் தப்பிச்சேன்.

எழுத்துப் பணி தொடரட்டும் !!!

குசும்பன்.

Monday, November 08, 2004 11:48:00 AM  

why u still want to write under rsl name.create one in your name or mention in profile that ur male and sl is pen name so that others are not misled.

Monday, November 08, 2004 3:33:00 PM  

சொக்கன் எழுதிய அந்த சிறுகதையின் தலைப்பு: "எரிமலை வாசல் பூ"

Friday, November 19, 2004 11:06:00 AM  

பத்தாம் வகுப்பிற்கு இரண்டாம் தாள் இருக்கா ? 12 வதுக்கு மேல் தான் இருந்ததாக ஞாபகம் ..

Thursday, June 23, 2005 11:17:00 AM  

நீங்கள் குறிப்பிட்டது சரிதான் தமிழன், பதினொன்றாம் வகுப்பிலிருந்துதான் தமிழ் இரண்டாம் தாள். திருத்திவிட்டேன், நன்றி!

Tuesday, July 12, 2005 12:34:00 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home