எனக்கு பிடித்த மலையாளப் படங்கள்
"மலையாளப் படமா...? எல்லாம் ஒரு மார்க்கமா இல்லே இருக்கும்?", நான் மலையாளப் படங்களை விரும்பி பார்ப்பேன் என நண்பர்களிடம் கூறுகையில் என்னை எதிர் வந்து தாக்கும் கேள்விக்கணையிது.மலையாளப் படங்கள் யாவும் நீலச்சந்தைக்கானதல்ல. " நீலக்குயில் " போல நிறைய நல்ல படங்களும் வெளிவந்து உள்ளத்தையும் உணர்வையும் தொட்டுச் சென்றுள்ளன என அவர்களுக்கு புரியவைப்பதற்குள் போதும் என்றாகிவிடும். ஆனாலும் நான் கண்ட சில நல்ல மலையாளப் படங்களை நண்பர்களுடன் அசைப்போடுவதில் உள்ள சுகமே தனி.
M.T.V(இசை தொ(ல்)லைக்காட்சியல்ல - சீரிய எழுத்தாளர் M.T.வாசுதேவன் நாயர்), லோகிததாஸ், சீனிவாசன், பத்மராஜன், மாடம்பு குஞ்ஞுகுட்டன் போன்றோரின் அருமையான திரைக்கதையில் இயல்பான
காட்சியமைப்பிலும் இயற்கையான நடிப்பிலும் என் உள்ளம் கவர்ந்த சில மலையாள படங்களை கீழே பட்டியலிடுகிறேன் [ நண்பர்கள் "அகரதூரிகை" அருண், K.V.ராஜா அவர்களின் நீண்ட நெடுநாளைய வேண்டுகோளுக்கிணங்க ]
மூன்னாம் பக்கம்
நெஞ்சு நிறைய பாசத்துடன் தாயாய் தந்தையாய் எல்லாமுமாய் இருந்து வளர்த்த பேரன், விடுமுறை கழிக்க நண்பர்களுடன் தாத்தாவின் வீட்டிற்கு வந்து கடலில் குளிக்கச் சென்று மூன்று நாள் கழித்து வயிறு உப்பி பிணமாய் கிடைக்க, உலகமே இருண்டுப்போன தாத்தாவின் முடிவை கண்ணீரில் வடித்திருக்கும் படம்.
திலகன் தாத்தாவுக்கும் ஜெயராம் பேரனுக்கும் உள்ள அற்புதமான உறவை உள்ளத்தை உறைய வைக்குமளவு இயக்கியிருப்பார் எழுத்தாளர் - இயக்குனர் பத்மராஜன். திலகன் தாத்தாவைப் போல எனக்கு எல்லாமுமாய் இருந்து என்னை வளர்த்தவர் என் அப்பாவின் அப்பா - அருமை தாத்தா. நான் வாழ்வில் நல்ல நிலையை அடையும் முன் இவ்வுலகை விட்டு மறைந்தார். இப்படத்தை எப்போது பார்த்தாலும் என் தாத்தாவும் அவருடைய அகால மரணமும் என் நினைவை வாட்டும்.
பத்மராஜனின் மற்றும் சில நல்ல படங்கள்:-
அபரன் - ஜெயராம் அறிமுகமான படமிது, இரட்டை வேடத்தில்.
நமுக்கு பார்க்காம் முந்திரி தோப்பில் - மோகன்லால், திலகன், ரகு(மான்) நடித்தது.
தூவனத்தும்பிகள் - மோகன்லால், பார்வதி நடித்தது.
தனியாவர்த்தனம்
ஒரு அழகான கிராமத்தில் உள்ள பள்ளியில் அற்புதமான [என்னுடைய முந்தைய பதிவை படிக்கவும் ] ஆசிரியர் மம்முட்டி. இரண்டு குழந்தைகள், அழகான மனைவி சரிதா, தம்பி மூகேஷ்,தங்கை, அம்மா கவியூர் பொன்னம்மா ,(காதல் தோல்வியால்) பைத்தியமான ஒரு மாமா என அளவான குடும்பம்.அந்த குடும்ப பரம்பரையையே விடாமல் துரத்தி வருகிறது ஒரு சாபம் - மூத்த ஆண் பிள்ளைக்கு குறிப்பிட்ட வயதிற்குள் பைத்தியம் பிடித்துவிடும்.
மம்முட்டிக்கு அந்த குறிப்பிட்ட வயதை நெருங்க நெருங்க அவரைச் சுற்றி உள்ளவர்களும் வீட்டாரும் சேர்ந்து அவருக்கு எப்போது பைத்தியம் பிடிக்குமென பயந்து தெளிவாக இருப்பவரை சாங்கியங்கள் சடங்குகள் எல்லாம் செய்தும் தீராத சந்தேக கணைகளால் துளைத்தும் மனோவியாதியை கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விடுகின்றனர். உறவுகளால்
ஒதுக்கப் பட்டு, மனைவியும் பிள்ளைகளும் பிரிந்து போய் நடைப் பிணமாக வாழும் மகனை காணும் தாய், தன் பிள்ளை முழு பைத்தியமாகி சாவதை விட தன் கையாலேயே சாகட்டுமென சோற்றில் நஞ்சு கலந்து அன்பொழுக அவனுக்கு ஊட்டி " கருணைக்கொலை " செய்கிறாள்.
லோகிததாஸின் அருமையான திரைக்கதையிலும் மம்முட்டியின் அம்சமான நடிப்பிலும் சிபிமலயிலின் தேர்ந்த இயக்கத்திலும் மிளிர்ந்த படமிது.
இந்த கூட்டணியின் மற்றும் சில நல்ல படங்கள்:
பரதம் - லாலிற்கு "பரத்" விருது பெற்றுத் தந்த படமிது [P.வாசு இதை தமிழில் கார்த்திக்கை வைத்து "சீனு" என்று தமிழ்படுத்தி கொன்று இருந்தார் கதையை. சந்திரமுகிக்கு என்ன கதியோ?....[ரஜினி ரசிகர்கள் ...அடிக்க வராதீங்கபா.. :-)]
கீரிடம் - லாலின் புதிய பரிமாணத்தை வெளிக்கொணர்ந்த படமிது. அப்போ மீசை பிரிக்க ஆரம்பித்தவர் தான், இன்றுவரை " நாட்டுராஜா "வாய் தொடர்கிறார்.
அமிர்தம் கமயா
அந்த ஊருக்கு புதிதாக வந்த மருத்துவர் மோகன்லால், ஏழை பிரமாண குடும்பத்திற்கு மருத்துவம் செய்ய போகிறார். அந்த குடும்பத்தின் நிலையை கண்டு அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளும் - குடும்ப தலைவிக்கு மருத்துவ உதவி, அந்த வீட்டு பெண்களை படிக்க வைத்தல் செய்கிறார் . பிறிதொரு சந்தர்ப்பத்தில் லால் அவர்களுக்கு உதவி வருவதின் முக்கிய காரணம் அந்த குடும்பத்திற்கு தெரிய வருகிறது.
அவர்களின் ஒரே மகன் வீனித் மருத்துவ கல்லூரியில் லாலிற்கு ஜீனியராக சேருகிறான். இயல்பாகவே பயந்த சுபாவமுள்ளவனை கல்லூரியின் கலாட்டா நாயகன் லால் "ராக்கிங்" செய்கிறார். இருதயம் பலகீனமானவனை லால் உப்பு மூட்டையாகத் தூக்க வைக்கிறார். இரத்தம் கக்கி உயிர் விடுகிறார் வினீத். ["சூர்யகாயத்ரி" என்ற வேறொரு படத்தில் " ராக்கிங் " மூலம் தன் மகனைக் கொன்றவர்களை தேடிச் சென்று கொல்வர் லால்.] உண்மைத் தெரிந்த வினீதின் குடும்பம் லாலை வெறுக்கிறது - சபிக்கிறது. லால் எப்படி அந்த குடும்பத்துடன் ஒன்றானார் ? வினீதின் தங்கையுடனான அவர் காதல் என்னாவாகும் ? என்பதே மீதிக் கதை.
M.T.Vயின் இயல்பான திரைக்கதையை உணர்வு பூர்வமாய் [ மசாலாத்தனங்கள் கொஞ்சமும் எட்டிப்பார்க்காமல்] இயக்கியவர் ஹரிஹரன்.
M.T.V - ஹரிஹரன் கூட்டணியின் மற்ற சில நல்ல படங்கள்:
வைசாலி - புராண கதையின் அடிப்படையில் படைக்கப்பட்ட ஒரு இசை-காதல் காவியம்.
ஒரு வடக்கன் வீரகாதா - மலையாள பழங்கதைகளில் ஒன்றான " சதியன் சந்து " வை நல்லவனாக மாற்றி காட்டிய படமிது. மம்முட்டிக்கு " பரத் " விருது கிடைத்தது இந்த படத்தில்.
பஞ்சாக்னி - லால், கீதா நடித்தது.
பைத்ருகம்
மந்திரத்தால் மழை பெய்ய வைக்க முடியுமா ? முடியுமென சூளுரைக்கிறார் பிரமாண குருவான அப்பா[ நரேந்திர பிரசாத்]. கம்யூனிச கருத்துக்களுடன் முற்போக்குவாதியான மூத்த மகன் [சுரேஷ் கோபி] பூணூலை விட்டெறிந்து விட்டு அப்பா மற்றும் அவன் சமூகத்தின் மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிய போராடுகிறான். இவர்களுக்கு நடுவே அப்பாவின் பேச்சையும் தட்ட இயலாமல்[காதலை தியாகம் செய்து] அண்ணானையும் எதிர்க்க இயலாமல் பரிதவிக்கிறான் இளைய மகன் [ ஜெயராம்]. மத நம்பிக்கையையும் மக்கள் நம்பிக்கையையும் ஒன்றிணைக்க இயற்கை உதவுகிறது.
படத்தின் வசனங்கள் முக்கியமானவை RSS-க்கு கொஞ்சம் ஆதரவு உள்ளது போன்ற பிரமையிருந்தது. மாடம்பு குஞ்ஞுகுட்டனின் திரைக்கதையை ஜெயராஜ் இயக்கியிருந்தார். இவர்களின் கூட்டணியில் வந்த மற்றுமொரு நல்ல படம்:
தேசாடனம் - "குட்டி சாமியார்" கதை. தேசிய விருதுகள் மாநில விருதுகள் வாங்கி குவித்தது.
பவித்திரம்
திருமண வயதை நெருங்கிய மோகன்லாலின்[ திருமணம் கிட்டத்தட்ட நிச்சயமாகியிருக்கும்] அம்மா Sriவித்யா கருவுருகிறார், அப்பா திலகன். அம்மாவை பூவைப் போல் பார்த்து வருகிறான் மகன். ஒரு பெண் குழந்தையை பெற்று விட்டு அம்மா இறந்து விடுகிறாள். அப்பா மனைவி இறந்ததிற்கு அந்த குழந்தைதான் காரணமென வெறுத்து ஒதுக்குகிறார்.
லால் தாயும் தந்தையுமாய் இருந்து திருமணம் செய்து கொள்ளாமல் அந்த குழந்தையை அன்புடன் வளர்த்து எடுக்கிறார். வளர்ந்த பின் காதலில் விழுந்து லாலை எதிர்த்து பிரிந்துச் செல்லும் பெண் சில நாட்கள் கழித்து அண்ணன்சாமியிடமே வந்துச் சேர்வாள்.
தங்கையாக வளர்க்காமல் தன் மகளாய் வளர்த்து ஒரு அப்பா அம்மா செய்ய வேண்டிய அத்தனையை அவர் ஒருவரே செய்வர். லாலின் நடிப்புலக வாழ்வில் இந்த படம் ஒரு மைல்கல் எனச் சொல்வேன். மிக அற்புதமாக செய்திருப்பார். ராஜீவ் குமார் இயக்கிய இப்படத்தின் கதை யார் என்று நினைவில்லை.
சீனுவாசன் எழுதி சத்யன் அந்திக்காடு இயக்கிய பல படங்கள் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளைத் தொட்டுச் சென்று கிச்சுகிச்சு மூட்டுபவை - அதில் சில படங்கள்:-
T.P.பாலகோபலன் M.A - லால் வேலைக்காய் அல்லல் படுவது அங்கதமாய் சொல்ல பட்டிருக்கும்.
சன்மனசுள்ளோருக்கு சமாதானம் - தமிழில் சிவகுமார் நடித்து "இல்லமாய்" இல்லாமல் போயிருக்கும்.
நாடோடி காற்று - "லாலாக" பாண்டியராஜனும் "சீனிவாசனாக" சேகரும் நடித்த "கதாநாயகன்"
"தீலிப்" வகையறாக்கள் வந்த பின் மலையாளத் திரையுலகில் இயல்பான படங்கள் வெளிவருவது மிகவும் அரிதாகி விட்டது. நம்ப முடியாத கதாநாயகத்தனங்களுடன் லால், மம்முட்டி போன்றோரும் மீசை பிரித்து ரத்தம் சொட்டச் சொட்ட அடிக்கத் தொடங்கி விட்டார்கள். நடுவே "ஷகீலா" அலையில் அனைத்து நடிகர்களின் படங்களும் "பப்படங்கள்" ஆயின.பிறகு மீண்டு வந்தாலும் மசாலாத்தனங்கள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.
ஒரு காலத்தில் நல்ல அருமையான படங்கள் தந்திருந்த கமல்[இயக்குனர்] இயக்கிய "சொப்ன கூடு" என்ற படத்தை கடந்த நவம்பரில் திரையரங்கில் கண்டு அதிர்ந்து போனேன். சம்பந்தமேயில்லாமல் படத்தின் முதல் காட்சியிலேயே அனைத்து கதாபாத்திரங்களும் ஐரோப்பாவின் நகரங்களில் ஆடிப்பாடும் பாடல். கொஞ்சம் கூட "லாஜிக்"யில்லாத திரைக்கதை. எங்க போய் சொல்வேன்? என்னான்னு சொல்வேன்?
இசையைப் பற்றி கேட்கவே வேண்டாம் - அருமையான மிருதுவான கர்னாடக இசையெல்லாம் போய் இப்பொது "லஜ்ஜாவதி" ஆட்சி செய்கிறாள்.[ எனக்கு அந்த பாடல் பிடித்திருந்தாலும் சேர மண்ணிற்குரிய இசையின் மணம் அதில் இல்லாமலிருந்தது வருத்தத்தையே தந்தது]
மீண்டும் அந்த பொற்காலம் வருமோ?
பி.கு:- மேற்குறிப்பிட்ட திரைப்படங்களின் கதைச்சுருக்கத்தை என் நினைவிலிருந்து எழுதியுள்ளேன், பிழையிருந்தால் சு(ட்டிக்காட்)டுங்கள்.... :-)