மழைப்பால்
ஒரு அந்தி மாலைப் பொழுது, குடைக்கும் வலிக்குமளவு அசூர மழை.
அது ஒரு தீபாவளி சமயம், வீட்டில் பலகாரங்கள் செய்ய பால் வாங்கி வர என் அண்ணி கட்டளையிட்டார். அடை மழையில் எப்படி போவது என தயங்கி விழி பிதுங்கினேன்.அண்ணியின் தோழி அடுத்த வீட்டு அக்காள், தன் தம்பியைத் துணைக்கு அனுப்ப ஒரே குடையில் போனோம். அவனை விட நான் பெரியவள், எத்தனை வருடம் என்பது வேண்டாம் இப்போது.
எட்டாவது படித்து கொண்டிருந்தான் அவன். என்னை இரண்டாம் வகுப்பிலேயே நிறுத்திவிட்டு அண்ணன் மகன்களையும் மகளையும் பார்த்துக் கொண்டு அண்ணிக்கு உத்தாசையாக இருக்க அப்பன் ஆத்தா பணித்தார்கள். நானும் அவனும் அடிக்கடி பல்லாங்குழி விளையாடுவோம். "ஒலியும் ஒளியும்" பார்க்கையில் அரையிருட்டில் விரல்களால் சீண்டுவோம், கள்ளத்தனமாய் நாங்கள் மட்டும் நகைப்போம். வீட்டில் கிடைக்காத அன்பும் அரவணைப்பும் அவன் நட்பில் கிடைத்தது.
அந்த மழை நாளுக்கு வருவோம்.பால் வாங்குவதற்கு வெகு தூரம் போக வேண்டும்.பாவாடை சட்டையெல்லாம் "தொப்பலாக" நனைய கதை பேசிக் கொண்டே நடந்தோம்.என்னென்னவெல்லாம் பேசினோம் என இப்போது ஞாபகமில்லை.பால் வாங்கி திரும்பி வருகையில், கை சிவக்க சுமந்து வந்தேன்.ஒரு திருப்பத்தில்.கிட்டத்தட்ட கையிலிருந்து வலி தாங்காமல் விழ யத்தனிக்கும் பாத்திரத்தை தாவி அவன் பிடித்தான்.
"ஐயோ....!!" அது மட்டும் கீழே விழு ந்திரு ந்தால்,அவ்வளவுதான்!! அண்ணி என் தோலை உரித்திருப்பார்.ரொம்ப சந்தோஷமாக இருந்தது,இக்கட்டிலிருந்து என்னை அவன் காப்பற்றியது.அவன் கன்னத்தில் மழை ஈரம் சொட்டச்சொட்ட ஒரு மிருதுவான முத்தம் கொடுத்தேன்...முதல் முத்த ஸ்பரிசம் அது !
அந்த தீபாவளிக்கு பின் அவனை நான் பார்த்ததில்லை.பள்ளி மாறி ஊர் மாறி எங்கோ சென்று விட்டான். அதன் பின் வந்த ஒவ்வொரு தீபாவளி மழை நாளும் அவனுக்காக தந்த அந்த முதல் முத்தத்தை நினைவு படுத்திக் கொண்டேயிருக்கிறது...