எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Sunday, July 25, 2004

சின்னச் சின்ன தழும்புகள்

அவனுக்கு என்னை மிகவும் பிடிக்கும்.  ஏன் என்று பலமுறை கேட்டும் சொல்லவில்லை அவன்.  பார்க்க மிக அழகாகவே இருப்பான்.  நான் தான் கொஞ்சம் "குண்டு".  கொஞ்சம் என்ன கொஞ்சம்.... நிறையவே "குண்டு" !. ஆனாலும், அவனுக்கு என்னை பிடித்திருந்தது.

+2 படிக்கும் காலத்தில்தான் அவன் என் பார்வையில் படும்படி வரத்தொடங்கினான். பின் ஒரு நாள் அவனிடம் கேட்டதற்கு, ஒரு வருடமாய் தெரியாமல் என்னை தொடர்ந்தாய்ச் சொன்னான்.

ஒரு காதலர் தினத்தன்று தான் அவன் எனக்கு பிடித்த "குண்டு" மல்லி பூக்களுடன் வந்து தன் காதலைச் சொன்னான். கூட ஒரு கவிதை கடிதமும். அதிலிருந்து இன்னும் சில வரிகள் நினைவில் உள்ளது...

" எனக்கும் தெரியாமலே
   என் இதயம் உன்னிடத்தில்
   இடம் மாறி விட்டது.
   பட்டம் வாங்கமலேயே
   எப்படியடி நீ "டாக்டர்" ஆனாய் ? "

காதல் "ஹார்மோன்"களின் திருவிளையாடலால் விளைந்த "பித்து"கவிதை, கடிதம் பிடிக்கவில்லையென்றாலும் அவனை ஏனோ எனக்கும் பிடித்துப் போயிற்று. எங்கள் காதல் படலம் அங்கு ஆர்ர்ர்ர்ரம்பானது.

கதைகளிலும் திரைப்படங்களிலும் வருவதுப் போல் பல விதங்களில் காதலை வளர்த்தோம். உணர்வு மிகுந்த வேளைகளில் கைகள் பிடித்து " நீயில்லாமல் நானில்லை. ஒரு வாழ்வுமில்லை " என வசனங்கள் கூட பறிமாறிக் கொண்டோம்.

காதையும் வாயையும் தொலைப்பேசி நீங்காது உறவு கொண்டிருந்த ஒரு மாலை பொழுதில், நீண்ட நேர காதல் மயக்கம் தரும் "வசனமாற்று" முறை முடிவுறும் தருவாயில் என் காதலன் "திருவிளையாடலில்" செண்பக பாண்டியனுக்கு வந்ததுப்போல் தீராத சந்தேக கேள்வி எழுப்பினான்.

"ரொம்ப நாளா உன்கிட்ட கேட்கனும்னு இருந்தேன். அன்னைக்கு தாவணியில் உன்னை பார்த்ததிலிருந்து வந்த சந்தேகம். சும்மா எதார்த்தமா தான் பார்த்தேன், உன் அடிவயிற்றை சுற்றிச் சின்னச் சின்னதா நிறைய தழும்புகள் இருந்துச்சு. என் பிரண்டுகிட்ட கேட்டேன். அவன் சொன்னான் - ' பிரசவம் ஆன பெண்களுக்கும் அபார்ஷன் ஆன பெண்களுக்கும்தான் அப்படி இருக்கும். கன்னிப்பெண்களுக்கு அப்படி வர சான்ஸே இல்லே'னு. உனக்கு எப்படி வந்துச்சு ? "

அக்னிபிரவேச சீதையை விட அதிகமாக சுட்டது எனக்கு. என் கண்களிலிருந்து வழிந்த நீரினால் அவ்வெம்மையை குறைக்க முடியவில்லை. என் கைகள் நடுங்கியது. என்னால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை.தொலைப்பேசியை துண்டித்தேன்.

உயிருக்கு உயிராய் நேசித்தவனுக்கு என் கற்பில் கறை படிந்திருக்குமோ என ஐயம் எப்படி வரலாம் ? பரஸ்பர நம்பிக்கைதான் காதல். அதில் கறை படிந்தபின் அவனை பார்க்கவும் பேசவும் பிடிக்கவில்லை. எத்தனை நாட்கள் அழுது கிடந்தேன் என ஞாபகமில்லை.

கொஞ்சம் நாட்கள் பின்னால் வந்து "விளையாட்டாய்தான் கேட்டேன், மன்னித்துக் கொள்! நான் உன்னை உயிருக்குயிராய் நேசிக்கிறேன்", என நீரூற்றிப் பார்த்தான். ஏனோ உள்ளே புகைந்துக் கொண்டிருந்த நெருப்பு அடங்கவேயில்லை. விரைவிலேயே என் அன்றாட வாழ்வில் இருந்து அவன் விலகி போய் விட்டான் (அல்லது) நான் விலகி வந்து விட்டேன்.

இன்றும் அந்த சின்னச் சின்னச் தழம்புகளை தடவுகையில் மனசில் உள்ள காயத்திலிருந்து நீர் கசிகிறது.

2 Comments:

மிக குண்டாக இருப்பவர்கள் அடிவயிறு கோடுகளுடன்தான் இருக்கும். ரப்பர் பேண்டை நீளமாக இழுத்துப் பாருங்கள் ஒரு அளவுக்கு மேல் அதன் நிறம் வெள்ளையாகவும் மெலிந்தும் இருக்கும், அதே போல அடிவயிறும் (அட தொப்பை பெரியதாக இருந்தால்) ஆகும்.

இளமைப் பருவத்தில் இது போன்று விவரங்கள் சரியாக தெரிவதில்லை. நாம் பார்க்கும் ஒரு சில பெண்மணிகளை வைத்து ஏதாவது அச்சு பிச்சு என்று யூகித்து கொள்கிறோம். (ஏனெனில் இந்த சந்தேகங்களை அறிந்து தெளிந்து கொள்ள வசதி அப்பொழுது கிடையாது).

நான் அப்படி கேட்ட காதலருக்கு வக்காலத்து வாங்கவில்லை, அவர் நம்பிக்கையில்லாமல் அப்படி கேட்டது தவறுதான். அவருடைய அறியாமையை சுட்டி காட்டுகிறேன் அவ்வளவுதான்.

- Ganesh Chandra

Wednesday, July 28, 2004 12:27:00 PM  

அற்புதமான விளக்கம் கணேஷ், நன்றி !

Thursday, July 29, 2004 9:57:00 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home